இந்தியாவின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட்-ன் சிறப்பான காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் ஈர்த்த காரணத்தால் இந்நிறுவனப் பங்குகள் இன்று ஓரே நாளில் 10.33 சதவீதம் உயர்ந்து உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் நிர்வாகம் சுமார் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான பைபேக் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனப் பங்குகள் அதிகளவிலான டிமாண்ட் ஏற்பட்டு, முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
ஓரே நாளில் 10.33 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் அளவிற்கு இந்நிறுவனத்தின் காலாண்டு முடிவில் என்ன இருக்கு..?
கடன் சலுகை: கூட்டு வட்டிக்கான ரீபண்ட் யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

காலாண்டு முடிவுகள்
ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் குமார் சுரானா வெளியிட்டுள்ள செப்டம்பர் காலாண்டு முடிவில், கடந்த நிதியாண்டில் வெறும் 1,051 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்ற ஹெச்பிசிஎல் இந்த வருடம் 2,477 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்து இரட்டிப்பு வளர்ச்சியை அடைந்துள்ளது.

வருவாய்
மேலும் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் வருவாய் கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 66,165 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 61,340 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
கொரோனா காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை இன்னும் முழுமையான பயன்பாட்டு அளவிற்கு வராத நிலையில் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் விற்பனை மற்றும் வருவாய் குறைந்துள்ளது.

சுத்திகரிப்பு லாபம்
2019 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் சுத்திகரிப்பு லாபம் ஒரு பேரலுக்கு வெறும் 2.83 டாலராக இருந்த நிலையில், இக்காலாண்டில் 5.11 டாலராக உயர்ந்துள்ளது.

மலிவான கச்சா எண்ணெய்
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் போது ஹெச்பிசிஎல் நிறுவனம் அதிகளவிலான கச்சா எண்ணெய் வாங்கிச் சுத்திகரிப்புச் செய்து இருப்பு வைத்த காரணத்தினால் இந்தக் காலாண்டில் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ம்டும் சுமார் 1,780 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. மேலும் 524 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மூலம் லாபமாகக் கிடைத்துள்ளது.

பைபேக் திட்டம்
ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதன் படி சுமார் 10 கோடி பங்குகள் அல்லது 6.56 சதவீத பங்குகளை 250 ரூபாய் என்ற ப்ரீமியம் விலையில் தனது முதலீட்டாளர்களிடம் வெளி சந்தையில் இருந்து வாங்குகிறது.

10.33 சதவீதம்
சந்தை விலையை விடவும் சுமார் 50 ரூபாய் அதிக விலைக்குப் பைபேக் திட்டத்தில் பங்குகள் வாங்கப்படுவதால் இந்நிறுவனப் பங்குகளில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்து வருகிறது.
இதன் எதிரொலியாகவே வியாழக்கிழமை வர்த்தகத்தில் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 10.33 சதவீதம் வரையில் அதிகரித்து 206.10 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.