ஐபிஎம் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான அரவிந்த் கிருஷ்ணா தலைமையில் இந்நிறுவனத்தில் தற்போது ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள். பொதுவாக ஒரு நிறுவனம் மொத்தமாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டால், பணிநீக்கம் குறித்து முன்பே அறிவிப்பை வெளியிட்டு அதன் பின்பு தான் பணிநீக்கம் செய்யும் பணிகளைத் துவங்குவார்கள்.
ஆனால் அரவிந்த் கிருஷ்ணா தலைமையிலான ஐபிஎம், எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது குறித்து எவ்விதமான அறிவிப்பும் வெளியிடப்படாமல் பணிநீக்கம் செய்து வருகிறது. இது ஐபிஎம் நிறுவனத்தில் காலம் காலமாக நடப்பெற்று வரும் ஒரு வழக்கம். தற்போது அரவிந்த் கிருஷ்ணா தலைமையிலான நிர்வாகத்திலும் இது தொடர்கிறது.
மே மாதம் மட்டும் சுமார் 1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் எனக் கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், முழுமையான தகவல்களை ஐபிஎம் எப்போது வெளிப்படையாக வெளியிடும் என்று ஊழியர்களும், இந்நிறுவன முதலீட்டாளர்களும் எதிர்நோக்கிக் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
சில்லறை மற்றும் சிறு வணிக கடன்களும் மோசமடையும்.. மூடிஸ் கணிப்பு..!

அரவிந்த் கிருஷ்ணா
108 வருடப் பழைமையான டெக் நிறுவனமான ஐபிஎம்-இன் சிஇஓ-வாக அரவிந்த் கிருஷ்ணா ஏப்ரல் மாதம் பதவியேற்றார். இவரின் தலைமையில் நிறுவனம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வர்த்தகம் மற்றும் சேவைகள் வெளிப்படையாக இருக்கும் எனப் பெரிய அளவில் நம்பப்பட்டது.
ஆனால் இவரின் தலைமையிலும் பழைய படியே ஊழியர்களுக்கு வெளிப்படைத்தன்மை இல்லாமல் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதில் இறங்கியுள்ளார்.

ஐபிஎம்
இதுகுறித்து ஐபிஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் போட்டி மிகுந்த வர்த்தகத் துறையில் பணிநீக்கம் குறித்த முடிவுகளை வெளிப்படையாக வெளியிட விரும்பவில்லை. மேலும் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் நீண்ட காலத் திட்டத்துடன் எடுக்கப்பட்டவை என்றும் ஐபிஎம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜூன் 2021 வரையில் தள்ளுபடி உடன் மருத்துக் காப்பீட்டைத் தனது ஊழியர்களுக்குக் கொடுத்துள்ளது.

மற்ற நிறுவனங்கள்
ஐபிஎம்-க்கு நிகராகச் சந்தையில் வர்த்தகம் செய்யும் பல டெக் நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்கம் குறித்த முடிவுகளை வெளிப்படையாக அறிவித்து வருகிறது.
குறிப்பாக ஹெச்பி நிறுவனத்தில் கடந்த வருடம் புதிய சிஇஓ பணியில் அமர்த்தப்பட்ட நிலையில், இந்நிறுவனம் 9000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக வெளிப்படையாக அறிவித்தது. இதேபோல் சில வாரங்களுக்கு முன்பு ஐபிஎம் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான காக்னிசென்ட் 7000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக வெளிப்படையாக அறிவித்தது.
இதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான உபர் டெக்னாலஜிஸ், ஏர்பிஎன்பி இன்க், டிரிப் அட்வைசர் ஆகிய நிறுவனங்களும் ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து வெளியிட்டுள்ளது.

3.5 லட்சம் ஊழியர்கள்
ஐபிஎம் நிறுவனத்தில் தற்போது 3,50,000 பேர் பணியாற்றுகின்றனர். ஆனால் அமெரிக்காவை விடவும் குறைந்த சம்பளத்தில் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஊழியர்கள் அதிகளவில் கிடைக்கும் காரணத்தால் ஐபிஎம் அதிகளவிலான வர்த்தகத்தையும் சேவையையும் அமெரிக்காவுக்கு வெளியிலிருந்து அளித்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து அமெரிக்கர்களுக்கான வேலையைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனப் பேசிவரும் நிலையில் ஐபிஎம் தனது உண்மை முகத்தைக் காட்டத் தயங்குவதாகவும் இதைப் பார்க்க முடிகிறது.

பயம்
ஐபிஎம் வெளிப்படைத் தன்மை இல்லாமல் மறைமுகமாகச் செயல்படுவதால் இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் வேலை மற்றும் பணீநிக்கம் குறித்த பயம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது.