இந்தியாவில் ஏற்கனவே மும்பை, நவி மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இயங்கி வரும் IKEA ஸ்டோர் பெங்களூரில் இன்று புதிய ஸ்டோரை திறக்க உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் புதிய IKEA ஸ்டோர் திறக்க திட்டமிட்ட நிலையில் இன்று பெங்களூருவில் 4 லட்சத்து 60 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமாக சில்லரை விற்பனை கடையாக திறக்கப்பட உள்ளது.
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 3000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பின்போது IKEA உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

IKEA ஸ்டோர்
பெங்களூருக்கு வடக்கில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அடுத்ததாக நாகசந்திரா என்ற பகுதியில் IKEA ஸ்டோர் அமைந்துள்ளது என்பதும் ஜூன் 22ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் இந்த ஸ்டோர் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா
பெங்களூரு IKEA ஸ்டோர் திறப்பு விழாவில் இந்தியாவின் முன்னாள் சி.இ.ஓ Peter Betzel, தற்போதைய சி.இ.ஓ Suzanne Pulverer மற்றும் கர்நாடக சந்தை மேலாளர் Anje Heim, IKEA இந்தியாவின் மக்கள் மற்றும் கலாச்சார மேலாளர் பரினீதா செசில் லக்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

4வது IKEA ஸ்டோர்
இந்தியாவில் மும்பை, நவி மும்பை, ஹைதராபாத் ஆகிய 3 இடங்களில் திறக்கப்பட்ட IKEA ஸ்டோர் தற்போது நான்காவதாக பெங்களூரில் திறக்கப்படவுள்ளது. பெங்களூர் ஸ்டோரில் வீட்டு அலங்கார பொருட்கள், பால்கனி வடிவமைப்புக்கான பொருட்கள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் உள்பட பல பொருட்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

7,000 வகை தயாரிப்புகள்
இந்த ஸ்டோரில் கிடைக்கும் 7 ஆயிரம் வகையான தயாரிப்புகளில் 27 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் என்றும் தற்போதைய நிலையில் இந்த கடையில் ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர் என்றும் வருங்காலத்தில் திறமையான உள்ளூர் பணியாளர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டிருப்பதாகவும் இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் தொழிலாளர்கள்
IKEA மக்கள் மற்றும் கலாச்சார மேலாளர் வினயா ராய் இது குறித்து கூறிய போது புதிய கடையில் உள்ள தொழிலாளர்களில் 70 சதவீதம் பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும் மேலும் பல உள்ளூரை சேர்ந்த பணியாளர்களை சேர்க்க ஆர்வமாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

ஊழியர்களுக்கு பயிற்சி
மேலும் வாடிக்கையாளர்களை வரவேற்கும் வகையில் ஊழியர்களுக்கு சரியான விதத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், ஊழியர்களில் 60 சதவீதம் பேர் முழுநேரம் பணியாற்றுபவர்கள் என்றும், மீதமுள்ளவர்கள் பகுதி நேரமாக பணியாற்றுவார்கள் என்றும் கூறினார்.

பெண் ஊழியர்கள்
மேலும் இந்த ஸ்டோரில் 42 சதவீத பெண் ஊழியர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்த அவர் 2030ஆம் ஆண்டுக்குள் இம்மாநிலத்தில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

போக்குவரத்து
மெட்ரோ நிலையம் அருகே ஸ்டோர் அமைந்துள்ளதால் இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து மிக எளிதாக இருக்கும் என்று கூறிய வினயா ராய், வீட்டு அலங்கார பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களும் தரமாக, சரியான விலையில் கிடைக்கும் என்பதால் கர்நாடக மக்கள் எங்களுடைய புதிய ஸ்டோருக்கு நல்ல ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்' என்றும் கூறினார்.