சிமெண்ட் முதல் எஃப்எம்சிஜி வரை, இதுவரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்ட அனைத்து நிறுவனங்களின் முக்கியமான பிரச்சனை மார்ஜின் பிரஷர் தான்.
உற்பத்தி நிறுவனங்கள் விலையை உயர்த்தினாலும், மூலப்பொருட்கள் மற்றும் எரிபொருளின் விலை அதிகரிப்பு லாபத்தை உண்கிறது. இதனால் காலாண்டு முடிவுகள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் மந்தமாகவே உள்ளது. சொல்லப்போனால் பல முன்னணி நிறுவனங்களின் முடிவுகள் முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் ஏமாற்றமடையச் செய்துள்ளது.
அக்சென்சர்-ன் வெற்றி இந்திய ஐடி நிறுவனங்களின் தோல்வியா..? உண்மை என்ன..?

காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகளை வெளியிட்ட முதல் 73 நிறுவனங்களின் தரவுகளைப் பார்க்கும் போது மார்ச் முதல் மூன்று மாதங்களில் ஆண்டுக்கு ஆண்டு 12 சதவீதத்திற்கு அளவிலான வருவாய் வளர்ச்சி மடுமே அடைந்துள்ளது. செயல்பாட்டு லாப வரம்பு அளவு சராசரியாக 0.65 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது, மேலும் செயல்பாட்டு லாபம் 10% வளர்ச்சி அடைந்துள்ளது.

நெஸ்லே
உதாரணமாக நெஸ்லே நிறுவனத்தின் லாப அளவுகள் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 3.15 சதவீதம் சரிந்துள்ளது சமையல் எண்ணெய் மற்றும் பேக்கேஜிங் பொருட்கள் போன்ற முக்கியப் பொருட்களின் பணவீக்கத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது. இந்நிறுவனத்தின் வருமானம் 10.2 சதவீதம் அதிகரித்தாலும், லாபத்தில் ஏற்பட்ட சரிவுகள் முக்கிய மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கத்தின் ஆதிக்கத்தைக் காட்டுகிறது.

சிமெண்ட்
இதேபோலவே சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான ஏசிசி மற்றும் இதர நிறுவனங்களின் உற்பத்தி செலவுகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் லாப அளவீடுகள் கடுமையாகியுள்ளது. இதேபோல் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஒரு வருடத்தில் பல முறை விலையை உயர்த்தினாலும் போதுமான லாபத்தைப் பெற முடியாமல் தவித்து வருகிறது.

டெக் மற்றும் வங்கி
டெக் துறையில் பார்த்தால் டிசிஎஸ் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றாலும், இன்போசிஸ் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. மேலும் வங்கி மற்றும் நிதியியல் சேவை பிரிவில் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.

மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 492.13 புள்ளிகள் சரிந்து 56,705.02 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 175.95 புள்ளிகள் சரிந்து 16,996.10 புள்ளிகளை எட்டியுள்ளது. மேலும் டாப் 30 நிறுவன பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுசூகி, ஆக்சிஸ் வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் மட்டுமே உயர்வுடன் உள்ளது