ஒவ்வொரு வருடமும் பன்னாட்டு நிறுவனங்களின் கார்பரேட் வரி மோசடி மற்றும் தனிநபர்களின் வரி ஏய்ப்பு ஆகியவற்றின் காரணமாக உலக நாடுகள் சுமார் 427 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை இழந்து வருகிறது.
இந்தத் தொகையை வைத்து நாட்டின் மக்களின் உயிரைக் காக்கும் செவிலியர் பணியைச் செய்யும் 3.4 கோடி செவிலியர்களுக்கு ஒரு வருடச் சம்பளத்தைக் கொடுக்க முடியும் என State of Tax Justice ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இதில் இந்தியாவிற்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 10.3 பில்லியன் டாலர் அதாவது 75,000 கோடி ரூபாய் அளவிலான வரி வருமானத்தை இழந்து வருகிறது என இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியா ஜிடிபி
இந்திய அரசு தனது வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் அரசு நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து சுமார் 2.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் 2.8 டிரில்லியன் டாலர் ஜிடிபி-யில் 0.41 சதவீதம் அதாவது 10.3 பில்லியன் டாலர் அளவிலான தொகையை வரி ஏய்ப்பு மூலம் இழந்து வருகிறோம்.

பன்னாட்டு நிறுவனங்கள்
State of Tax Justice ஆய்வறிக்கையின் படி இந்தியா இழக்கும் 10.3 பில்லியன் டாலர் அளவிலான வரி வருமானத்தில் 10 பில்லியன் டாலர் வருமானம் பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் வரி ஏய்ப்பு வாயிலாக மட்டுமே இழந்து வருகிறோம்.
மேலும் 200 மில்லியன் டாலர் அளவிலான தொகை மட்டுமே தனிநபர் செய்யும் வரி ஏய்ப்பு மூலம் இந்தியாவிற்கு நஷ்டம் அடைகிறது.

சுகாதாரம் மற்றும் கல்வி
இந்தியா ஒவ்வொரு வருடமும் இழக்கும் இந்த 10.3 பில்லியன் டாலர் தொகையின் மூலம் நாட்டின் சுகாதாரப் பட்ஜெட் தொகையில் 44.70 சதவீதம், கல்விக்கான பட்ஜெட் தொகை ஒதுக்கீட்டில் 10.68 சதவீதம்.
இதுமட்டும் அல்லாமல் இந்தத் தொகையை வைத்து சுமார் 42.30 லட்ச செவிலியர்களுக்கு ஒரு வருடச் சம்பளம் கொடுக்க முடியும்.

அன்னிய முதலீடு
இந்தியா பெருமளவிலான வரியைப் பன்னாட்டு நிறுவனங்களின் வாயிலாக மட்டுமே இழக்கும் நிலையில், இதில் பெரும் பகுதி வரி அன்னிய முதலீடுகளின் வாயிலாக இழந்து வருகிறது என State of Tax Justice ஆய்வறிக்கை கூறுகிறது.
அதிலும் முக்கியமாக வர்த்தகக் கூட்டணி நாடுகளான மொரீஷியஸ், சிங்கப்பூர் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் முதலீட்டின் வாயிலாக இழக்கிறது.

தனிநபர்
தற்போது மத்திய அரசு தனிநபர் வருமான வரி ஏய்ப்பை குறைக்கப் பல கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் இப்பிரிவு மூலம் ஏற்படும் வருமான இழப்பை மத்திய அரசு பெரிய அளவில் கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.