2020ஆம் ஆண்டுப் பல்வேறு காரணங்களுக்காக இந்தியப் பங்குச்சந்தை மோசமான வர்த்தகச் சூழ்நிலையை எதிர்கொண்டது. ஆனால் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, உற்பத்தி மற்றும் சேவைத் துறை வளர்ச்சி அடைந்த பின்பு, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு மும்பை பங்குச்சந்தை புதிய உச்சத்தை அடைந்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பாக இருந்தது ஐபிஓ முதலீடுகள் தான். பர்கர் கிங் ஐபிஓ உடன் 2020 ஐபிஓ சந்தை முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு என்பிஎப்சி அமைப்பான ஐஆர்எப்சி டிசம்பர் மாதத்தின் 3வது வாரத்தில் பட்டியலிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்ரேஷன்
இந்திய ரயில்வே துறையில் நிதியியல் அமைப்பான இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்ரேஷன் (IRFC) 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஐபிஓ சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐஆர்எப்சி அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அமிதாப் பேனர்ஜி டிசம்பர் 3வது வாரத்தில் ஐஆர்எப்சி நிறுவனத்தின் சந்தை வர்த்தகம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும் பட்சத்தில் ஐபிஓ-விற்கு வர வாய்ப்பு உள்ளது என அறிவித்தார்.

4,600 கோடி ரூபாய் ஐபிஓ
இந்த ஐபிஓ மூலம் IRFC எனச் சுருக்கமாகக் கூறப்படும் இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்ரேஷன் சுமார் 4,600 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. ஐஆர்எப்சி நிறுவன புதிய பங்குகள் பிரிவில் 118.8 கோடி பங்குகளையும், ஆஃபர் பார் சேல் பிரிவில் 59.4 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த ஐபிஓ திட்டத்தின் மூலம் திரட்டப்படும் முதலீட்டை நிர்வாகம் மூலதன மேம்பாட்டிற்காகப் பயன்படுத்த உள்ளது.

என்பிஎப்சி நிறுவனம்
அரசு என்பிஎப்சி நிறுவனமான இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளும் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது, இதன் படி அரசு கட்டுப்பாட்டில் சுமார் 938 கோடி பங்குகள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 179.2 கோடி பங்குகளை மட்டுமே தற்போது மத்திய அரசு விற்பனை செய்து சுமார் 4,600 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்ட உள்ளது.

லாபத்தில் தொடர் வளர்ச்சி
இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்ரேஷன் 2017ஆம் நிதியாண்டில் 921 கோடி ரூராய் அளவிலான லாபத்தை அடைந்த நிலையில் 2019ல் இந்நிறுவனத்தின் லாபம் 2,254 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் இந்நிறுவனத்தின் வருவாய் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் லாபத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி ஐபிஓ மூலம் முதலீடு செய்ய ரீடைல் முதலீட்டாளர்கள் ஈர்க்க முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

2020 ஐபிஓ
2020ஆம் ஆண்டில் ரோசாரி பயோடெக், ஹோப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ், ரூட் மொபைல், கெம்கான் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ், ஏஞ்சல் புரோக்கிங், ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், லிகித்தா இன்பராஸ்டக்சர், மாசாகான் டாக் ஷிப்பில்டர்ஸ், பர்கர் கிங் ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ மூலம் பெரிய அளவிலான முதலீட்டைத் திரட்டியுள்ளது.