அரசு தரவுகள் சொல்வதை விட கிராம பொருளாதாரம் பெரிய நெருக்கடியில் இருக்கிறது!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி, கடந்த ஜூன் 2020 காலாண்டில், 23.9 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. இந்த ஜூன் 2020 காலாண்டில், விவசாயத்தின் ஜிவிஏ (GVA - Gross Value Added) 3.4 சதவிகிதம் வளர்ச்சி கண்டது. மற்ற எந்த துறையும் வளர்ச்சியைக் காட்டவில்லை. அப்படி என்றால் இந்திய கிராம புறத்தில் பொருளாதார நிலை நன்றாக இருக்கிறதா? என்றால் இல்லை என்பது தான் பதில்.

 
அரசு தரவுகள் சொல்வதை விட கிராம பொருளாதாரம் பெரிய நெருக்கடியில் இருக்கிறது!

சமீபத்தில் ஆர்பிஐ வெளியிட்ட 'செப்டம்பர் 2020 புல்லட் இன்' அறிக்கையில், மைக்ரோஃபைனான்ஸ் துறை மிகப் பெரிய ரிஸ்கில் இருப்பதாக எச்சரித்து இருக்கிறது.

இந்த மைக்ரோஃபைனான்ஸ் துறை தான், பல கிராம புற மக்களின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத் தேவைகளை சம்பாதித்துக் கொள்ள உதவிக் கொண்டு இருக்கிறது. கடந்த 31 மார்ச் 2019-ல் 1.79 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிகளின் கடன் அளவு (Outstanding Loan), இந்த மார்ச் 2020-ல் 2.32 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறதாம்.

சிறு வியாபாரிகள், தள்ளு வண்டி வியாபாரிகள், தினக் கூலித் தொழிலாளர்கள் தான் மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிகளில் அதிகம் கடன் வாங்கி இருக்கிறார்கள். கொரோனா லாக் டவுனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களும் இவர்கள் தான்.

இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்புகளில் 32 சதவிகித வேலை வாய்ப்புகள், மேலே சொன்னவைகளைச் சார்ந்து இருக்கின்றன. ஆனால் கொரோனா லாக் டவுனில் 75 சதவிகிதம் பாதிக்கப்பட்டது இந்த துறையைச் சேர்ந்தவர்கள் தான் என்கிறது ஆர்பிஐ புல்லட் இன்.

மைக்ரோ ஃபைனான்ஸ் & வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கொடுத்த கடனின் நிலை:

மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிகள் கடனை வசூலிக்கும் விகிதம், ஏப்ரல் 2020-ல் 3 சதவிகிதமாக சரிந்தது. மே மாதத்தில் 21 சதவிகிதமாகவும், ஜூன் மாதத்தில் 58 சதவிகிதமாகவும் அதிகரித்து இருக்கிறது. ஆனால் மார்ச் மாதத்தில் இருந்த 83 சதவிகிதத்தைத் தொடவில்லை. மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிகளிடம் கடன் வாங்கியவர்களில் கணிசமானவர்கள், மாரடோரியம் வசதியைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிகள், க்ரெடிட் ரிஸ்கை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் எனச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ அறிக்கை.

வங்கி அல்லாத நிதி நிறிவனங்கள் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிகள், குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு, பிணையம் இல்லா கடன் கொடுப்பதில் நிபுணத்துவம் பெற்றதாக இருக்கிறது. இந்தியாவின் கிராம புறங்களில் தங்களின் மொத்த கடனில் 75 % கடன்களையும் கொடுத்து இருக்கிறது.

வங்கி அல்லாத நிதி நிறிவனங்கள் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிகள் கொடுத்திருக்கும் மொத்த கடனில், 55.8 சதவிகித கடன்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளுக்குக் கொடுத்திருக்கிறார்களாம்.

இந்த கடன்களுக்கான தவணைகள் சரியாக வரவில்லை என்றால், கிராம புறத்தில், மக்கள் கையில் போதிய அளவுக்கு வருமானம் இல்லை என்று தானே பொருள்?

 

முத்ரா கடன்களில் அதிகரிக்கும் என் பி ஏ:

MSME நிறுவனங்களுக்கு பிணை இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்கும் முத்ரா திட்டத்தில் என்பிஏ அதிகரித்து இருக்கிறது.

பொதுத் துறை வங்கிகள் முத்ரா திட்டத்தின் கீழ்
2017 - 18 2.12 லட்சம் கோடி ரூபாய்
2018 - 19 3.05 லட்சம் கோடி ரூபாய்
2019 - 20 3.82 லட்சம் கோடி ரூபாய் என கடன் கொடுத்து இருக்கிறார்கள்.

முத்ரா திட்டத்தின் கீழ் கொடுத்த கடன்களில்
2017 - 18-ல் 3.42 %
2018 - 19-ல் 3.75 %
2019 - 20-ல் 4.92 % என்பிஏ ஆகி இருக்கிறது.

இந்த முத்ரா கடனில் 51 % கடன் தொகை கிராம புறத்தில் பதிவு செய்து இருக்கும் MSME-க்களுக்கு கொடுத்திருக்கிறார்களாம். கடந்த 24 ஜூன் 2020 அன்று முத்ரா திட்டத்தின் கீழ் சிசு கடன்களுக்கு (50,000 ரூபாய்) மட்டும் 2 % வட்டி மானியம் வழங்கி இருக்கிறது மத்திய அரசு. இங்கும் அதே லாஜிக் தான். கடன்களுக்கான தவணைகள் சரியாக வரவில்லை என்றாலோ, என்பிஏ அதிகரிக்கிறது என்றாலோ, கிராம புறத்தில், மக்கள் கையில் போதிய அளவுக்கு வருமானம் இல்லை என்று தானே பொருள்?

கிராம புற குடும்பங்களின் வருமான கணக்கு

2016 - 17-ம் ஆண்டுக்கான NABARD வங்கியின் Rural Financial Inclusion Survey, கடந்த ஆகஸ்ட் 2018-ல் வெளியானது. அதில், இந்தியாவில் மொத்தம் 21.16 கோடி குடும்பங்கள் கிராம புறங்களில் வாழ்வதாகச் சொல்கிறது. இந்த 21.16 கோடி குடும்பங்களில் 47.5 சதவிகித (10.05 கோடி) குடும்பங்கள், விவசாய குடும்பங்களாக இருக்கின்றனவாம்.

இந்த 10.05 கோடி குடும்பங்களின், சராசரி மாத வருமானத்தில் (8,931 ரூபாய்), 35 சதவிகிதம் மட்டும் தான் விவசாயத்தில் இருந்து வருகிறதாம். மற்ற 65 சதவிகித வருமானம், மற்ற வழிகளில் இருந்து வருகிறதாம்.

விவசாயம் சாராத குடும்பங்களின் மாத சராசரி வருமானத்தில் (7,269 ரூபாய்) 54 சதவிகிதம் கூலித் தொழில்கள் மூலம் கிடைக்கிறதாம். 32 சதவிகித வருமானம் சம்பளம் வழியாகவும், 12 சதவிகித வருமானம் விவசாயம் அல்லாத மற்ற துறைகள் (Non Farm Sector) வழியாகவும் வருகிறதாம்.

நகர் புறத்தில் இருந்து வரும் பணம் பாதிக்கப்பட்டு இருக்கிறது:

நகர் புறத்துக்குச் சென்று வேலை பார்த்து கிராமத்தில் இருக்கும் தங்களின் குடும்பங்களுக்கு பணம் கொடுப்பதால், கிராம புற குடும்பங்களின் வருமானம் அதிகமாக இருந்தது. கொரோனா லாக் டவுனால், ஒரே நாளில் பலரின் வேலை பறி போனது. மத்திய அரசின் தரவுகள் படி, 1.04 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள், வேலை இழந்து, பெரும்பாலான மக்கள், மீண்டும் கிராமங்களுக்கே திரும்பி இருக்கிறார்கள்.

புலம்பெயர் தொழிலாளர்கள், ஒரு ஆண்டுக்கு சுமாராக 2 லட்சம் கோடி ரூபாயை , தங்கள் வீட்டுக்கு அனுப்புகிறார்கள் என்கிறது பிசினஸ் டுடே. கொரோனா லாக் டவுன் அறிவிக்கப்பட்ட பின், ஏப்ரல் 2020-ல், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வீட்டுக்கு அனுப்பும் பணம் சுமாராக 80 % சரிந்து இருக்கிறதாம்.

லண்டன் பொருளாதாரம் & அரசியல் அறிவியல் பள்ளியின் ஆராய்ச்சி:

London School of Economics and Political Science நிறுவனம் மேற்கொண்ட "City of dreams no more: The impact of Covid-19 on urban workers in India" என்கிற ஆராய்ச்சியில் சில உண்மைகளை, நெற்றியில் அடித்தாற் போலச் சொல்லி இருக்கிறது.

1. நகர் புற பணியாளர்களில் 52 சதவிகிதத்தினர் வேலை இழந்து இருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை.
2. ஜனவரி & பிப்ரவரி மாத வருமானத்தோடு ஒப்பிடும் போது, ஏப்ரல் & மே மாதங்களில், நகர் புற பணியாளர்களின் வருமானம், சராசரியாக 48 சதவிகிதம் சரிந்து இருக்கிறதாம். நகர் புற பணியாளர்களில் சுமாராக 25 சதவிகிதம் பேருக்குக் கீழ் தான் நிதி உதவிகள் கிடைத்து இருக்கிறதாம்.

கொரோனா இல்லாமல் கூடுதலாக இரண்டு பிரச்சனைகள்:

1. மழை - மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக மழை பொழிந்து இருக்கிறது. இதனால் இந்த மாநிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த கரிஃப் (Kharif) பயிர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. கரிஃப் பயிர்கள் 8.5 % அதிகமாக பயிரிடப்பட்டு இருக்கலாம், ஆனால் கூடுதலாகப் பெய்த மழை, வழக்கத்தை விட அதிகமாக பயிரிடப்பட்டதை நாடமாக்கிவிடும்.

2. கிராம புறங்களில் அதிகரிக்கும் கொரொனா - ஏப்ரல் மாதத்தில், ஒட்டு மொத்த கொரோனா நோயாளிகளில் 24 சதவிகிதம் பேர் மட்டுமே கிராம புறங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவின் ஒட்டு மொத்த நோயாளிகளில் 55 சதவிகித நோயாளிகள், கிராம புறத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்கிறது எஸ்பிஐ வங்கியின் "Three Months After Unlock" என்கிற ஆராய்ச்சி அறிக்கை.

இந்தியாவின் நகர் புறங்களை விட, கிராம புறங்களில் மருத்துவ வசதிகள் குறைவு என்பதால், கொரோனாவால், கிராம புற மக்களின் வருமானம் வரை பாதிக்கப்படலாம் என்கிறது எஸ்பிஐ அறிக்கை.

இந்தியாவின் கிராம புறங்களில் போதுமான அளவு வருமானம் இருந்து இருந்தால், மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனி, முத்ரா கடன் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் கடன் வசூல் அதிகரித்து இருக்கும் குறைந்தபட்சம் பழை நிலைக்காவது வந்து இருக்க வேண்டும். என் பி ஏ அதிகரித்து இருக்காது. மாரடோரியம் அதிகரித்து இருக்காது. ஆக இந்திய கிராம புறங்களில் போதுமான வருமானம் இல்லை என்பதை இந்த வங்கி & நிதி நிறுவனங்கள் தொடர்பான தரவுகள் காட்டுகின்றன.

அதே போல புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை பறி போகாமல் இருந்து இருந்தால், கிராம புறங்களில் ஓரளவுக்காவது வருமானம் நன்றாக இருந்து இருக்கும். போதாக்குறைக்கு கூடுதலாக பெய்த மழையும், கிராம புறங்களில் அதிகரித்து வரும் கொரோனாவும், இந்திய கிராம புற பொருளாதாரத்தைப் பற்றிய கவலையை அதிகரிக்கச் செய்கின்றன.

2011 - 12 தரவுகள் படி, இந்தியாவின் ஒட்டு மொத்த வேலை வாய்ப்பில் 70.9 சதவிகித வேலை வாய்ப்புகளையும், இந்தியாவின் நிகர உள்நாட்டு உற்பத்தியில் (NDP - Net Domestic Product) 46.9 சதவிகிதத்தை கிராம புற பொருளாதாரம் தான் தருகின்றன. ஆனால் இன்று கொரோனாவால், இந்திய கிராம புற பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Economy: Rural India is in deep crisis than what the government data says

The Rural indian economy is in far deep crisis than what the government data says.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X