கொரோனா தொற்று காலத்தில், மூத்த குடிமக்கள் மூலமாக 1500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் ரயில்வேவுக்கு கிடைத்துள்ளது.
மூத்த குடிமக்கள் ரயில்களில் பயணம் செய்யும் போது 60 வயது நிரம்பிய ஆண்கள் மாற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு டிக்கெட் கட்டணத்திலிருந்து 40 சதவீதம் சலுகையாக வழங்கப்படும். மேலும் 58 வயது நிரம்பிய பெண்களுக்கு 50 சதவீதம் வரை டிக்கெட் கட்டணத்தில் சலுகை கிடைக்கும்.

கொரோனா தொற்று
கொரோனா பெருந்தொற்று பாதிப்பைத் தொடர்ந்து பல ரயில்களை ரத்து செய்த இந்தியன் ரயில்வே, முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளை நீக்கியது. மேலும் ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பல சலுகைகளை நீக்கியது. அதனுடன் சேர்த்து, ரயில் பயணம் செய்யும் போது மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த டிக்கெட் சலுகைகளும் நிறுத்தப்பட்டது.

மூத்த குடிமக்கள் பயணிகள் எண்ணிக்கை
2020, மார்ச், 20-ம் தேதி முதல் 2022 மார்ச், 31-ம் தேதி வரையில் 7.31 கோடி மூத்த குடிமக்கள் டிக்கெட் சலுகைகள் இல்லாமல் ரயில் பயணம் செய்துள்ளார்கள். அதில் ஆண் பயணிகள் 4.46 கோடி, பெண் பயணிகள் 2.84 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 8,310 டிக்கெட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வருமானம்
இந்த மூத்த குடிமக்கள் டிக்கெட் மூலம் ரயில்வேவுக்கு 3,454 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. சலுகை இல்லாமல் இந்த டிக்கெட்கள் விற்கப்பட்டதால் ரயில்வே-க்கு 1,500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்ததாகவும் ஆர்டிஐ கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு செலவு?
ரயில்வே நிர்வாகம் இதுபோன்ற சலுகை விலை டிக்கெட்களுக்கு மட்டும் 2000 கோடி வரை ஆண்டுக்கு செலவு செய்து வருகிறது. அதில் மூத்த குடிமக்களுக்கு மட்டும் 80 சதவீதம் வரை செலவாகிறது. நீண்ட காலமாகவே ரயில் பயணங்களில் டிக்கெட் கட்டணத்தில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் மானியம் குறித்து கேள்விகள் எழுந்து வருகின்றன.

சலுகையை விட்டுக்கொடுத்தல்
2016-ம் ஆண்டு ஜூலை மாதம், மூத்த குடிமக்கள் தங்களுக்குச் சலுகை டிக்கெட் வேண்டும் என்பதை விருப்பப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம். தங்களுக்குத் தேவையில்லை என்ற அதை விட்டுக்கொடுக்கலாம் என முறையை ரயில்வே அறிமுகம் செய்து இருந்தது. ஆனால் அதில் ரயில்வேவுக்கு பெரிய பயனில்லாமல் போனது.

என்ன ஆனது?
இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு 4.42 கோடி மூத்த குடிமக்கள் ரயில் பயணிகளில், 7.53 லட்சம் நபர்கள் 50 சதவீத கட்டண சலுகையையும், 10.9 லட்சம் நபர்கள் 100 சதவீத கட்டண சலுகையையும் விட்டுக்கொடுத்துள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது.