கொரோனா பாதிப்பிற்குப் பின் இந்திய வர்த்தகச் சந்தையில் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளது நாம் அறிந்ததே, ஆனால் தற்போது ஆன்லைன் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உண்மையிலேயே அதிர்ச்சியை அளிக்கிறது.
கொரோனா பாதிப்பிற்குப் பின் இந்தியா முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில், நகரங்களில் வாழும் மக்கள் ஆன்லைன் சேவைகளை அதிகளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தப் பல முன்னணி ஆன்லைன் சேவை நிறுவனங்கள் தனது சேவைகளை 2ஆம் தர நகரங்களுக்கும் இந்த லாக்டவுன் காலத்தில் விரிவாக்கம் செய்துள்ளது.
இதன் வாயிலாக இந்திய ஈகாமர்ஸ் துறையில் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வழக்கத்திற்கு மாறாக ஆடை மற்றும் லைப்ஸ்டைல் பொருட்களைத் தாண்டி விலை உயர்ந்த போன்களை அதிகளவில் வாங்கி வருகின்றனர்.
படு சரிவில் தங்கம் விலை.. அடுத்த வாரத்தில் காத்திருக்கும் சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

முக்கிய மாற்றம்
2020 மே- ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் இந்திய ஈகாமர்ஸ் தளத்தில் மக்கள் வழக்கத்திற்கு மாறாக 15,000 ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய போன்களை அதிகளவில் வாங்கி உள்ளனர். இப்பிரிவு விற்பனை அளவு கொரோனாவுக்கு முந்தைய அளவை விடவும் இரட்டிப்பு வளர்ச்சியை அடைந்துள்ளது.
ஆனால் இதே காலகட்டத்தில் எப்போதும் மக்கள் அதிகளவில் செலவு செய்யும் பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பொருட்களின் விற்பனை 53 சதவீதம் சரிந்துள்ளது.

மக்கள் செலவிடும் பழக்கம்
பேஷன் பிரிவில் கொரோனாவுக்கு முன்பு 1000 ரூபாய்க்கும் குறைவான விலை மதிப்புடைய பொருட்களை மக்கள் அதிகளவில் வாங்குவார்கள், ஆனால் மே- ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் 500 ரூபாய்க்குக் குறைவான பொருட்களின் மொத்த ஆர்டர் அளவு 40 சதவீதமாக உள்ளது.
இந்தச் சரிவின் மூலம் மக்கள் செலவு செய்யும் அளவீட்டைப் பெரிய அளவில் குறைத்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

26 சதவீத வளர்ச்சி
லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின்பு, ஊழியர்களுக்கு Work From Home, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி, பலருக்கு குடும்பத்துடன் வீட்டில் இருக்கும் காரணத்தால் பொழுதுபோக்கு மற்றும் வீட்டு உபகரணங்கள் என இக்காலகட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விற்பனை 26 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

மோகம்
மேலும் எப்போதும் 15,000 ரூபாய்க்குக் குறைவான விலை கொண்ட போன்களையே அதிகளவில் வாங்கும் இந்தியர்கள், மேலே குறிப்பிட்ட பல்வேறு காரணங்களுக்காக அதிக விலை கொண்ட போன்களை வாங்கியுள்ளனர். இதனால் இந்தியாவில் விலை உயர்ந்த போன்கள் மீது மக்களின் மோகம் அதிகரித்துள்ளது என்றால் மிகையில்லை.

71 சதவீத வர்த்தகம்
எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் வர்த்தகம் உயர்ந்து இருந்தாலும், இந்திய ஈகாமர்ஸ் சந்தையின் வர்த்தகம் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. கொரோனாவுக்கு முந்தை அளவீட்டில் 71 சதவீத வர்த்தகத்தை மட்டுமே இந்திய ஈகாமர்ஸ் சந்தை திரும்பப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தள்ளுபடி விற்பனை
இந்நிலையில் இழந்த சந்தை வர்த்தகத்தை மீட்டு எடுப்பதற்காக நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் வருகிற செப் 29ஆம் தேதி பிக் பில்லியன் டேஸ் என்கிற சிறப்புத் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
அதற்குப் பின் அமேசான் நிறுவனமும் சிறப்புத் தள்ளுபடியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகை கால விற்பனை
மேலும் கொரோனா தாக்கம் இந்தியாவில் இன்னும் குறைந்திடாத நிலையில், தீபாவளி பண்டிகை ஷாப்பிங்-கிற்குப் பெரும்பாலான மக்கள் ஈகாமர்ஸ் தளத்தையே நம்பியிருக்கும் காரணத்தால் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களும் மிகப்பெரிய தள்ளுபடி மற்றும் விற்பனைக்குத் தயாராகி வருகிறது.