இப்போது வரை, இந்திய இளைஞர்களுக்க, மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும் துறைகளை பட்டியல் போட்டால் அதில் ஐடி துறைக்கும் கட்டாயம் ஒரு இடம் உண்டு.
2000 - 01 கால கட்டத்தில், மாதம் 5,000 ரூபாய் சம்பளம், போக வர படிக்காசு, பெட்ரோலுக்கு தனியாக காசு கொடுப்பார்கள். மொத்தம் மாதம் 5,500 ரூபாய் வரும் என்று பெருமையாகப் பேசிக் கொண்டு இருந்தோம்.
அடுத்த சில ஆண்டுகளிலேயே, ஐடி கம்பெனிக்கு வேலைக்கு போனால் மாதம் 10 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கலாம். 10 வருடத்தில் வீடு வாங்கிவிடலாம், வாழ்கை செட்டில் என ஒட்டு மொத்த இந்தியர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த துறை தான் ஐடி. சரி Infosys சொன்ன நல்ல விஷயத்துக்குப் போவோம்.

ஐடி மோகம்
இன்று வரை அந்த நம்பிக்கை பல இளைஞர்களிடம் பார்க்க முடிகிறது. ஐடி துறையில் இன்னும் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை தேடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு நல்ல கம்பெனியில் வேலை, அப்படியே நல்ல உழைப்பைப் போட்டு நல்ல சம்பளம், ஆன் சைட், ஸ்டாக் ஆப்ஷன்... என வாழ்கையை செட்டில் செய்து கொள்ள விரும்புகிறார்கள். இது லட்சத்தில் ஒருவருக்கு தான் கிடைக்கிறது.

இன்ஃபோசிஸ்
அப்படி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில், 74 பேர் இருக்கிறார்களாம். அதாவது 74 கோடீஸ்வரர்கள் இருக்கிறார்களாம். இது 2019 - 20 நிதி ஆண்டு கணக்காம். கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 64 கோடீஸ்வரர்கள் இருந்தார்களாம். 2019 - 20 நிதி ஆண்டில் 10 கோடிஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறதாம். சரி இவர்கள் எல்லாம் எப்படி கோடீஸ்வரர்கள் ஆனார்கள்..?

எப்படி கோடீஸ்வரன் ஆனார்கள்?
இந்த 74 ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், சலுகைகள், ஓய்வு கால நிதி, ஸ்டாக் ஆப்ஷன் என பலவற்றைக் கொடுக்கிறார்கள். அதில் ஸ்டாக் ஆப்ஷன் வழியாகத் தான், இந்த 74 ஊழியர்களும் கோடீஸ்வரர்களாகி இருக்கிறார்களாம். இந்த அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன..? வாய்ப்பே இல்ல ராஜா. சரி இந்த 74 ஊழியர்களும் என்ன மாதிரியான பதவிகளில் இருக்கிறார்கள்.

கோடீஸ்வர பதவி
இந்த 74 கோடீஸ்வர ஊழியர்களில் பெரும்பாலானவர்கள், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில், மூத்த துணைத் தலைவர் (Senior Vice President) மற்றும் துணைத் தலைவர் (Vice President) பதவியில் இருப்பவர்களாம். இந்த பதவிகளை அடைவது எல்லாம் அத்தனை எளிதான கரியமா என்ன..? சரி, மற்ற ஊழியர்களுக்கான சம்பளம் என்ன?

மீடியன் சம்பளம்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியரின் சராசரி சம்பளம் (median remuneration of employees - MRE), 2019 - 20 நிதி ஆண்டில் 6.8 லட்ச ரூபாயாக அதிகரித்து இருக்கிறதாம். 2018 - 19 நிதி ஆண்டில் இந்த சராசரி சம்பளம் 6.2 லட்சம் ரூபாயாக இருந்ததாம். ஆக இது 10 % அதிகம். இது சராசரி இந்திய ஊழியர்களின் 7.3 % சம்பள உயர்வை விட இது அதிகமாம்.

தலைகள் சம்பளம் Vs ஊழியர்கள்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 502 ஊழியர்கள் பெரும் சம்பளத்தைத் தான், முதன்மைச் செயல் அதிகாரி சலீல் பரேக்குக்கு Remuneration-ஆக கொடுக்கிறார்களாம். அதே போல, 155 இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தைத் தான், முதன்மைச் செயல்பாட்டு அதிகாரி (COO) பிரவீனுக்கு சம்பளமாகக் கொடுக்கிறார்களாம்.