நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 12,000 பேரை பணியில் அமர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் 3 ஆயிரம் புதியவர்களும் (freshers) உள்ளடங்கும். இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் 1,85,243 பேராக அதிகரித்துள்ளதாக, பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது வலுவான செயல்திறனை காட்டிய மற்றொரு காலாண்டாகும். செயல்திறன் மட்டும் அல்ல, மார்ஜின் விளிம்பும் 0.2 சதவீதத்திலிருந்து 19.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
திடீர் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்! 250 புள்ளிகள் இறக்கத்தில் சென்செக்ஸ்!

நிகர வருமானம் அதிகரிப்பு
அதிகளவிலான பணப்புழக்கத்தினால் (cash flows) நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நிகர வருமானம் 160.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான் இந்த நிறுவனம் பங்குகளை திரும்ப பெறுவதற்காக அறிவிப்பினை கொடுத்துள்ளது. இது பங்குதாரர்களுக்கு நிலையான வருமானத்தினை வழங்குவதற்கான ஒரு முயற்சியாகும்.

செப்டம்பர் காலாண்டு நிலவரம்
எனினும் விப்ரோ கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகரலாபம் 3.4 சதவீதம் குறைந்து, ஒருங்கிணைந்த நிகரலாபம் 2,465.7 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. பெங்களூரை தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் நிகரலாபம் முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 2,557.7 கோடி ரூபாயாக பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்குகளை திரும்ப பெற திட்டம்
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு 9,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற ஒப்புதல் அளித்துள்ளது. பங்குகளை திரும்ப பெற திட்டமிட்டுள்ள இந்த நிறுவனம், ஒரு பங்குக்கு 400 ரூபாய் என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இது 23.75 கோடி பங்குகளை திரும்ப பெறவும் திட்டமிட்டுள்ளது. பங்குதாரர்கள் அஞ்சல் வாக்கு மூலம் பங்குதாரர்களின் பங்குகளை வாங்குவதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த காலாண்டு இலக்கு
நடப்பு காலாண்டில் சற்று வருவாய் குறைந்துள்ள நிலையில், டிசம்பர் காலாண்டில் 2,022 - 2,062 மில்லியன் டாலர்கள் வரையிலான வரம்பில் வருவாய் இருக்கலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது. இது 1.5 - 3.5 சதவீத வளர்ச்சியினை எதிர்பார்க்கிறது. செப்டம்பர் காலாண்டில் அதன் ஐடி சேவைகள் பிரிவு வருவாய் 1,992.4 மில்லியன் டாலர்களாக இருந்தது. இது கடந்த காலாண்டினை விட 3.7 சதவீதம் அதிகமாகும்.

இன்றைய பங்கு விலை நிலவரம்
விப்ரோவின் பங்கு விலையானது தற்போது கிட்டதட்ட 6 சதவீதம் வீழ்ச்சி கண்டு 353.30 ரூபாயாக காணப்படுகிறது. தற்போது வரை மட்டும் இந்த நிறுவனத்தின் பங்குவிலையானது 22 ரூபாய்க்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிறுவனம் 3% லாபம் வீழ்ச்சியினை பதிவு செய்துள்ள நிலையில் அதன் எதிரொலியாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.