ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் உலக நாடுகளை மொத்தமாகப் புரட்டிப்போட்டு உள்ளது என்றால் மிகையில்லை, இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷ்ய பணக்காரர்களைக் குறிவைத்து மிகப்பெரிய வேட்டையைத் துவங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் உலக நாடுகள் ரஷ்ய அரசு மீதும், அரசு நிறுவனங்கள் மீதும் தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது மட்டும் அல்லாமல் ரஷ்ய பணக்காரர்கள், முக்கியப் புள்ளிகள் மீதும் திட்டமிட்டுத் தடை விதித்தது. இதற்கு முக்கியக் காரணம் ரஷ்யாவில் பெரும் பணக்காரர்கள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்து வருவது தான்.
இங்க திருமணம் செய்துக்கொண்டால் 1.7 லட்சம் ரூபாய் பரிசு.. இது நல்லா இருக்கே..!

ரஷ்ய பணக்காரர்கள்
ரஷ்ய பணக்காரர்கள் மற்றும் பெரும் புள்ளிகள் ஐரோப்பிய நாடுகளில் அதிகப்படியான தொகையை முதலீடு செய்து சொத்துக்களை வாங்கிக் குவித்து உள்ளனர். ரஷ்ய பணக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கை முறைக்குப் பெயர் போனவர்கள் என்பதால், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல ரஷ்ய பணக்காரர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பெரும் புள்ளிகள் மீது தடை விதித்தது.

தடை உத்தரவு
இந்தத் தடை உத்தரவை பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய நாட்டவர்களின் சொத்துக்களைத் தொடர்ந்து கைப்பற்றி வருகிறது. ஏற்கனவே பல நாடுகளில் இருந்த 3 க்கும் அதிகமான ஆடம்பர கப்பல்களைக் கைப்பற்றிய ஐரோப்பிய நாடுகள் தற்போது ஆடம்பர வீடுகளைக் கைப்பற்ற துவங்கியுள்ளது.

இத்தாலி அரசு
வெள்ளிக்கிழமை மட்டும் இத்தாலி அரசு தடை விதிக்கப்பட்ட ரஷ்ய பணக்காரர்களின் 143 மில்லயன் யூரோ மதிப்பிலான ஆடம்பர கப்பல், ஆடம்பர வீடுகளைக் கைப்பற்றியுள்ளது. இத்தாலி கைப்பற்றிய வீடுகள் சார்டினியா, லிகுரியன் கடற்கரை மற்றும் கோமோ ஏரி முக்கியமான பகுதிகளில் இருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

லூய்கி டி மாயோ
இத்தாலிய வெளியுறவு அமைச்சர் லூய்கி டி மாயோ வெள்ளிக்கிழமை இத்தாலிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் புதின் தாக்குதலை நிறுத்திவைக்க முடியும், புதினை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காகப் புதின்-க்கு நெருக்கமாக இருப்பவர்களின் சொத்துக்களை முடக்கியும் கைப்பற்றியும் வருகிறோம் எனத் தெரிவித்தார்.

கப்பல்
புதினுக்கு நெருக்கமானவரான ஜெனடி டிம்சென்கோவிற்குச் சொந்தமான "லீனா" என்ற ஆடம்பர கப்பல் சான் ரெமோ துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டது. 65-மீட்டர் (215-அடி) நீளம் கொண்ட "லேடி எம்" என்னும் அலெக்ஸி மொர்டாஷோவ் என்பவருக்குச் சொந்தமானது ஆடம்பர கப்பல் இம்பீரியாவில் கைப்பற்றப்பட்டு உள்ளது.

ஆடம்பர வீடு
இதேபோல் ஆறு சூட் ரூம் கொண்ட 65 மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய ஆடம்பர வீடு டஸ்கனி மற்றும் கோமோவில் கைப்பற்றப்பட்டு உள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன் அலிஷர் உஸ்மானோவ் மற்றும் ரோஸ்நெப்ட் தலைவர் இகார் ஆகியோரின் கப்பல்களையும் ஐரோப்பிய நாடுகள் கைப்பற்றப்பட்டு உள்ளது.