டொனால்டு டிரம்ப் ஆட்சியில் இந்தியர்களையும், இந்திய நிறுவனங்களையும் பாதிக்கும் வரையில் பல்வேறு விசா மற்றும் கிரீன் கார்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் பல லட்சம் இந்தியர்கள் அமெரிக்கா செல்லும் வாய்ப்பை இழந்தது மட்டும் அல்லாமல், ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கும் இந்திய ஊழியர்களும் புதிய கட்டுப்பாடுகள் மூலம் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பின்பு விசா மற்றும் கிரீன் கார்டு கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படும் எனப் பலரும் நம்பியது வீண் போகவில்லை.
அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் கூட்டணி ஏற்கனவே பல்வேறு குடியேற்றக் கட்டுப்பாடுகளை ரத்து செய்து அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்த நிலையில் தற்போது ஹெச்1பி விசா மற்றும் ஹெச் 4 விசா மீது விதிக்கப்பட்ட ஒரு முக்கியத் தடையைப் பைடன் தலைமையிலான அரசு ரத்து செய்வதற்கான பணிகளை அதிரடியாகத் துவங்கியுள்ளது.

ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணியாற்ற டொனால்டு டிரம்ப் தடை விதித்தார். தற்போதைய ஜோ பைடன் தலைமையிலான அரசு இந்தத் தடை உத்தரவை ரத்துச் செய்வதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வாழும் பல கோடி வெளிநாட்டு மக்கள் இந்த உத்தரவின் மூலம் நன்மை அடைய உள்ளனர்.

டிரம்ப் அரசு கட்டுப்பாடு
பிப்ரவரி 2019ல் டிரம்ப் அரசு அமெரிக்க மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்ற முடிவுடன் வெளிநாட்டு மக்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகளைத் தடுக்கும் விதமாக விசா கட்டுப்பாடுகளை விதித்தது.
இதில் முக்கியமாக ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களின் கணவன் மற்றும் மனைவிக்கு அமெரிக்காவில் வேலை செய்ய உரிமை அளிக்கப்படும் ஹெச் 4 விசாவை தடை செய்ய உத்தரவிட்டார்.

வெளிநாட்டுக் குடும்பங்கள்
அமெரிக்காவில் குடியுரிமை பெற விண்ணப்பம் செய்துள்ளவர்கள் பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உருவான நிலையில், அமெரிக்காவில் வாழும் வெளிநாடுகளைச் சேர்ந்த குடும்பங்கள் ஒருவரின் சம்பளத்தை வைத்துக் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஒரு புதிய சட்டம் மற்றும் உரிமை கொண்டு வரப்பட்டது.

பராக் ஒபாமா
2015ல் ஒபாமா அரசு ஹெச்1பி விசா உரிமையாளர்களின் மனைவி அல்லது கணவன் அமெரிக்காவில் வேலை செய்ய அளிக்கப்பட்ட உரிமையை H-4 Employment Authorization Document (EAD) சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டது. இந்த முக்கியமான உரிமையைத் தான் டிரம்ப் அரசு தடை செய்ய 2019ல் உத்தரவிட்டது.

கமலா ஹாரிஸ் டிவீட்
2019ல் டிரம்ப் அரசு ஹெச் 4 விசாவை தடை விதிக்க உத்தரவிட்ட போதை கமலா ஹாரிஸ் இதைக் கடுமையாக விமர்சனம் செய்து டிவீட் செய்திருந்தார், கிட்டதட்ட 2 வருடத்திற்குப் பின் இந்தத் தடை நீக்கப்பட்டு உள்ளது.

ஹெச் 4 விசா பிரிவு
பொதுவாக ஹெச்1பி விசா வைத்துள்ளவர் கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்திருந்தாலோ, அல்லது ஹெச்1பி விசா காலம் 6 வருடங்களுக்கு அதிகமாக நீட்டிக்கப்பட்டு இருந்தாலோ விசா உரிமையாளரின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் வேலை செய்ய உரிமையை ஹெச் 4 விசா பிரிவு மூலம் வழங்கப்படும். இந்த உரிமையைத் தான் டிரம்ப் அரசு ரத்து செய்தது.

இந்தியர்கள் ஆதிக்கம்
இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 84,360 இந்தியர்கள் ஹெச்4 விசா பெற்றுள்ளனர், கிட்டதட்ட அமெரிக்க அரசு இப்பிரிவில் வழங்கிய விசாக்களில் 93 சதவீதம் இந்தியர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தத் தகவல் டிசம்பர் 2017ல் வெளியானது, தற்போது இதன் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியிருக்கும் என கணிக்கப்படுகிறது.

ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை
ஜோ பைடன் அரசு தற்போது டிரம்ப் அரசு வெளியிட்ட உத்தரவை இறுதி சட்டமாக வரும் முன்பே மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் தற்போது டிரம்ப் உத்தரவு Office of Management and Business பிரிவின் ஆய்வுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதைச் சட்டமாக்க 60 நாள் கால நீட்டிப்பும் ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில் ஹோம்லேண்டு செக்யூரிட்டி பிரிவு இந்த உத்தரவை ரத்து செய்துள்ளது.