இந்தியாவில் லைஃப் இன்சூரன்ஸ் பெரிய அளவுக்கு பிரபலமாக இருக்கிறது என்றால் அதற்கு லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்று சொல்லப்படும் எல்ஐசி-ன் பங்கு அளப்பரியது.
ஒரு ஊரில் பேருந்துகள் போகவில்லை என்றால் கூட, ஒரு எல்ஐசி ஏஜெண்ட் தன் பையை தூக்கிக் கொண்டு, பாலிசி வாங்கச் சொல்லி வீட்டுக்கே வந்துவிடுவார்.
இந்தியாவில் லைஃப் இன்சூரன்ஸ் என்றாலே எல்ஐசி-யைத் தான் என, மக்கள் நம்பி பணத்தைச் செலுத்திக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது நிலைமையே வேறு.

ஒப்பீடுகள்
இந்தியாவில் மொத்த லைஃப் இன்சூரன்ஸ் சந்தையில், எல்ஐசி எந்த அளவுக்கு சரிந்து இருக்கிறது என்பதைத் தான் இந்த கட்டுரையில் அலச இருக்கிறோம். இந்த கட்டுரைக்கு லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வசூலித்த பிரீமியத்தை அடிப்படையாகக் கொண்டு தான் சந்தையை மதிப்பிடுகிறோம். தரவுகள் IRDA-ன் ஆண்டு அறிக்கையில் இருந்து எடுத்து இருக்கிறோம்.

ஏன் பிரீமியம்
ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு எவ்வளவு பிரீமியம் வருகிறது என்பதைப் பொருத்து தான், அந்த நிறுவனம் லாபகரமாக இயங்குமா எனச் சொல்ல முடியும். எனவே தான் பிரீமியத்தை அடிப்படையாக வைத்து, எல்ஐசி-யின் சந்தையை கணக்கிட்டு இருக்கிறோம். ஆண்டுக்கு 5,000 ரூபாய் பிரீமியம் செலுத்தும் 100 பாலிசிகளை விட, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் பிரீமியம் செலுத்தும் ஒரு பெரிய பாலிசி மேல்.

2001-ல் எல்ஐசி
31 மார்ச் 2001-ம் ஆண்டு நிறைவில், இந்தியாவில் லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியமாக வசூலான மொத்த தொகையே 36,070.4 கோடி ரூபாய் மட்டுமே. அதில் 36,063.28 கோடி ரூபாய் பிரீமியத்தை வசூல் செய்து, 99.98 சதவிகித சந்தையை தன் வசம் வைத்திருந்தது எல்ஐசி.

தனியார் வருகை
2000-ம் ஆண்டு வாக்கில், தனியார் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எல்லாம், இந்தியாவின் லைஃப் இன்சூரன்ஸ் வியாபாரத்தில் அடி எடுத்து வைக்கத் தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எல்ஐசி, தன் சந்தையை தனியாரிடம் இழக்கத் தொடங்கியது. இந்த ஷாக்கிங் தரவுகளை, இந்தியாவில் இன்சூரன்ஸ் துறையை நெறிமுறைப்படுத்தும் IRDAI - Insurance Regulatory and Development authority of India உறுதி செய்கின்றன.

ஏற்கனவே காலி
கடந்த 2001-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் 99 சதவிகித பிரீமியத்தை வசூலித்த எல்ஐசி, கடந்த 2009 - 10 கால கட்டத்தில், இந்தியாவில் வசூலான மொத்த லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியத்தில், வெறும் 70.10 சதவிகிதத்தை மட்டுமே கவர முடிந்தது. மீதமுள்ள 29.90 சதவிகித பிரீமியத்தை தனியார் கம்பெனிகள் தட்டிச் சென்றுவிட்டார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில்
கடந்த 2009 - 2019 வரையான 10 நிதி ஆண்டுகளில், 2013 - 14 நிதி ஆண்டில் தான், எல்ஐசி அதிகப் படியாக பிரீமியத்தை வசூலித்து இருக்கிறார்கள். அதாவது, 2013 - 14 நிதி ஆண்டில், இந்தியாவில் வசூலான மொத்த லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் 75.39 சதவிகித பிரீமியத்தை வளைத்து மீண்டும் தன் இழந்த சந்தையைப் பிடிக்க முயற்சித்தது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிலைக்கவில்லை.

வரலாறு காணாத வீழ்ச்சி
2018 - 19 நிதி ஆண்டில், இந்தியாவில் மொத்தம் வசூலான லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியத்தில், வெறும் 66.42 சதவிகித பிரீமியத்தை மட்டுமே எல்ஐசி பிடிக்க முடிந்து இருக்கிறது. ஐ ஆர் டி ஏ ஐ வலைதளத்தில் 2000-ம் ஆண்டுக்கு பிறகான தரவுகள் மட்டுமே இருக்கின்றன. எனவே அந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரைக்குமான காலத்தில் எல் ஐசிக்கு இது வரலாறு காணாத மிகப் பெரிய வீழ்ச்சி எனச் சொல்லலாம்.

தொடர் வீழ்ச்சி
கடந்த 2013 - 14 நிதி ஆண்டில், இந்தியாவில் வசூலான மொத்த லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் 75.39 சதவிகிதத்தை எல்ஐசி பிடித்தது. அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர் வீழ்ச்சி தான்.
2014 - 15 நிதி ஆண்டில் = 73.05%
2015 - 16 நிதி ஆண்டில் = 72.61%
2016 - 17 நிதி ஆண்டில் = 71.81%
2017 - 18 நிதி ஆண்டில் = 69.36%
2018 - 19 நிதி ஆண்டில் = 66.42%
இப்படியாக எல்ஐசி கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்தியாவில் வசூலான மொத்த லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியத்தில், மேலே சொன்ன அளவுக்குத் தான் எல்ஐசி பிடித்து இருக்கிறது.

தனியார் துறை
எல்ஐசி சரியத் தொடங்கிய இடங்களை எல்லாம் தனியார் படு வேகமாக நிரப்பி இருக்கிறது. கடந்த 2013 - 14 நிதி ஆண்டில், இந்தியாவில் வசூலான மொத்த லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் 24.61 சதவிகித பிரீமியத்தை மட்டுமே பிடித்து இருந்தது தனியார் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனிகள். ஆனால் அடுத்தடுத்த ஆண்டில், எல்ஐசி தவறவிட்ட வாய்ப்புகளை நறுக்கென பயன்படுத்திக் கொண்டது தனியார் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனிகள்.

நல்ல வளர்ச்சி
இந்தியாவில் வசூலான மொத்த லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியத்தில்
2014 - 15 நிதி ஆண்டில் = 26.95%
2015 - 16 நிதி ஆண்டில் = 27.39%
2016 - 17 நிதி ஆண்டில் = 28.19%
2017 - 18 நிதி ஆண்டில் = 30.64%
2018 - 19 நிதி ஆண்டில் = 33.58%
இப்படியாக தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்தியாவில் வசூலான மொத்த லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியத்தில், மேலே சொன்ன அளவுக்குத் பிரீமியங்களை வசூல் செய்து தங்கள் வியாபாரத்தை விரிவாக்கத் தொடங்கிவிட்டார்கள்.

பிரீமியம் வளர்ச்சி எல்ஐசி
அப்படி என்றால், எல்ஐசி நிறுவனத்தின் பிரீமியம் வசூல், வளர்ச்சி காணவில்லையா..? எனக் கேட்டால், வளர்ச்சி கண்டு இருக்கிறது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சி சீராக இல்லை. பிரீமியம் வளர்ச்சி விவரங்களை கீழே காணவும்.
2014 - 15 நிதி ஆண்டில் = 1.15%
2015 - 16 நிதி ஆண்டில் = 11.17%
2016 - 17 நிதி ஆண்டில் = 12.78%
2017 - 18 நிதி ஆண்டில் = 5.90%
2018 - 19 நிதி ஆண்டில் = 6.06% என சீரற்ற வளர்ச்சி கண்டு இருக்கிறது எல்ஐசி.

பிரீமியம் வளர்ச்சி தனியார்
எல்ஐசி நிறுவனத்துக்கு மாறாக, தனியார் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பிரீமியம் வளர்ச்சி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும்பாலும் சீராக இருந்து இருக்கிறது. பிரீமியம் வளர்ச்சி விவரங்களை கீழே காணவும்.
2014 - 15 நிதி ஆண்டில் = 14.32%
2015 - 16 நிதி ஆண்டில் = 13.64%
2016 - 17 நிதி ஆண்டில் = 17.40%
2017 - 18 நிதி ஆண்டில் = 19.15%
2018 - 19 நிதி ஆண்டில் = 21.37% என மிகச் சீராக பிரீமியம் தொகை வளர்ச்சி கண்டு இருக்கின்றன.

10 ஆண்டுகளில் வளர்ச்சி
கடந்த 2009 - 10 நிதி ஆண்டில் எல்ஐசி 1.86 லட்சம் கோடி ரூபாயை வசூலித்தது. இந்த 2018 - 19 நிதி ஆண்டில் 3.37 லட்சம் கோடி ரூபாயை பிரீமியமாக வசூலித்து இருக்கிறது. ஆக எல்ஐசி-க்கு இது 81.38 சதவிகிதம் அதிகம். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களோ 2009 - 10 நிதி ஆண்டில் 79,369 கோடி ரூபாயை பிரீமியமாகத் திரட்டி இருந்தார்கள். 2018 - 19 நிதி ஆண்டில் 1.70 லட்சம் கோடி ரூபாயை பிரீமியமாகத் திரட்டி இருக்கிறார்கள். ஆக இது 114 சதவிகிதம் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

விழித்துக் கொள் எல்ஐசி
இப்படியாக மத்திய அரசின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, தன் சந்தையை, தனியாரிடம் இழந்து கொண்டு இருக்கிறது. தனியாரும் எல்ஐசி-யை மெல்ல ஓரங்கட்டி வளர்ந்து கொண்டு இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால், அடுத்த 10 - 20 ஆண்டுகளில், தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும் லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் தொகை, எல்ஐசி நிறுவனம் வசூலிக்கும் தொகையைத் தொட்டு விடும் போலத் தான் தெரிகிறது. இப்போதாவது எல்ஐசி நிறுவனம் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஆபத்து தான்.
கடந்த 10 ஆண்டுகளில் எல் ஐசி மற்றும் தனியார் நிறுவனங்கள் வசூலித்த லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை மற்ரும் பிரீமியம் தொகை அடிப்படையில் மார்க்கெட் ஷேர் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம்.
Life Insurance Corporation | |||
---|---|---|---|
Year | Market share | Total Premium (Rs. Crores) | Growth (%) |
2009 - 10 | 70.10 | 186,077.31 | - |
2010 - 11 | 69.78 | 203,473.40 | 9.35 |
2011 - 12 | 70.68 | 202,889.28 | -0.29 |
2012 - 13 | 72.70 | 208,803.58 | 2.92 |
2013 - 14 | 75.39 | 236,942.30 | 13.48 |
2014 - 15 | 73.05 | 239,667.65 | 1.15 |
2015 - 16 | 72.61 | 266,444.21 | 11.17 |
2016 - 17 | 71.81 | 300,487.36 | 12.78 |
2017 - 18 | 69.36 | 318,223.20 | 5.90 |
2018 - 19 | 66.42 | 337,505.07 | 6.06 |
Private sector | |||
Year | Market share | Total Premium (Rs. Crores) | Growth (%) |
2009 - 10 | 29.90 | 79,369.94 | - |
2010 - 11 | 30.22 | 88,131.60 | 11.04 |
2011 - 12 | 29.32 | 84,182.83 | -4.48 |
2012 - 13 | 27.30 | 78,398.91 | -6.87 |
2013 - 14 | 24.61 | 77,359.36 | -1.33 |
2014 - 15 | 26.95 | 88,433.49 | 14.32 |
2015 - 16 | 27.39 | 100,499.02 | 13.64 |
2016 - 17 | 28.19 | 117,989.26 | 17.40 |
2017 - 18 | 30.64 | 140,586.24 | 19.15 |
2018 - 19 | 33.58 | 170,626.96 | 21.37 |