சொந்த வீடு என்பது சாமானிய மக்களின் வாழ்நாள் கனவு, இந்த மாபெரும் கனவை நினைவாக்கும் முயற்சியிலேயே பலரின் வாழ்க்கை முடிந்திருக்கும். ஆனால் இன்று நாடு முழுவதும் அனைவருக்கும் சிறப்பான நிதியியல் சேவை கிடைக்கும் காரணத்தால் வீட்டுக் கடன் மூலம் மிகவும் சுலபமாகச் சொந்த வீடு வாங்க முடியும்.
கொரோனா காரணமாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை வளர்ச்சிக்காக ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அதிகளவில் குறைத்த காரணமாக வங்கிகளில் தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 15 வருடக் குறைவான நிலையில் உள்ளது.
இதைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள எந்த வங்கியில் குறைவான வட்டி விகிதத்தில் ஹோம் லோன் கிடைக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு கடன் வாங்குங்கள்.

நீண்ட காலக் கடன்
ஹோம் லோன் என்பது நீண்ட காலக் கடன் என்பதால் சில சதவீத வட்டி வித்தியாசம் கூடப் பல லட்சம் ரூபாய் வரையிலான நஷ்டத்தை ஏற்படுத்தும். 30 வருடக் கடனுக்கு நீங்கள் கடன் பெறும் தொகையை விடவும் 1.25 மடங்கு வட்டி மட்டுமே செலுத்தும் நிலை ஏற்படும் என்பதால் சில சதவீத வட்டி வித்தியாசம் கூடப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

6.85 சதவீத வட்டி விகிதம்
சந்தையில் தற்போது வீட்டுக்கடனுக்கான மிகவும் குறைவான வட்டி விகிதம் 6.85 சதவீதம். ஆனால் இந்த வட்டி விகிதம் ஒவ்வொருவரின் நிதி நிலை, சிபில் ஸ்கோர், வீட்டின் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
பாங்க் ஆப் இந்தியா (6.85% முதல் 8.25%), யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (6.85% முதல் 8.40%), பாங்க் ஆஃ பரோடா (6.85% முதல் 8.70%), சென்டர்ல் பேங்க் ஆஃப் இந்தியா (6.85% முதல் 9.05%) இந்தியன் பேங்க் (6.85% முதல் 9.50%) ஆகிய வங்கிகள் 6.85 சதவீத வட்டி விகிதத்தில் இருந்து ஹோம் லோன் கொடுக்கிறது.

6.90 சதவீத வட்டி விகிதம்
பஞ்சாப் & சிந்த் வங்கி (6.90% முதல் 7.60%), ஐசிஐசிஐ வங்கி (6.90% முதல் 8.05%), ஹெடிஎப்சி (6.90% முதல் 9.25%), கனரா வங்கி (6.90% முதல் 9.40%) வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது.
உதாரணமாக 30 லட்சம் ரூபாய் வீட்டுக்கடனுக்கு 20 வருட காலத்திற்கு லோன் எடுத்தால் ஈஎம்ஐ தொகையின் அளவு 23,079 ரூபாய் முதல் 27,768 ரூபாய் வரையில் இருக்கும்.

7.00 சதவீத வட்டி விகிதம்
நைநிடால் வங்கி (7.00% முதல் 7.25%), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (7.00% முதல் 7.85%), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (7.05% முதல் 7.30%), பாங்க் ஆப் மகாராஷ்டிரா (7.05% முதல் 9.70%), பஞ்சாப் நேஷனல் வங்கி (7.10% முதல் 7.90%), ஐடிபிஐ வங்கி (7.15% முதல் 9.15%) வட்டியில் ஹோம் லோன் கொடுக்கிறது.

தனியார் வங்கிகள்
நாட்டின் பெரிய பொத்துறை வங்கிகளை விடவும் தனியார் வங்கிகள் குறைவான வட்டியில் வீட்டுக்கடன் கொடுக்கிறது. ஆனால் புதிதாக வீட்டு கடன் வாங்கும் அனைவருக்கும் இந்த வட்டி விகிதம் அடுத்த ஒரு வருடம் மட்டுமே, பெரும்பாலான வங்கிகள் ஒரு வருடத்திற்குப் பின் ரெப்போ விகிதம் அடிப்படையில் வட்டியை புதுப்பிக்கும்.

பாதுகாப்பான கடன்
இந்தக் கொரோனா காலத்தில் வங்கிகள் மிகவும் பாதுகாப்பான கடனாகப் பார்ப்பது வீட்டுக்கடன் என்பதால் தனியார் வங்கிகள் எப்போதும் இல்லாத வகையில் பொதுத்துறை வங்கிகளையும் விடவும் குறைவான வட்டியில் வீட்டுக்கடன் கொடுக்கிறது.