இந்தியச் சாலை போக்குவரத்தில் சில வாரங்களுக்கு முன்பு தான் பல கட்டுப்பாடுகள், அறிவிப்புகள் மூலம் அனைத்து வாகனங்களுக்கும், அனைத்து டோல் பிளாசாவிலும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு வரலாறு காணாத விகிதமாக டோல் கட்டண வசூல் அளவு 110 கோடி ரூபாய் வரையில் உயர்ந்தது.
இந்நிலையில் அடுத்த ஒரு வருடத்தில் இந்தியா முழுவதிலும் இருக்கும் அனைத்து டோல் பிளாசாவும் நீக்கப்பட்டு ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் டோல் கட்டணம் வசூல் செய்ய உள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நித்தின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டோல் கட்டண வசூல்
இன்று நாடாளுமன்றத்தில் நடந்த முக்கியமான கேள்வி நேரத்தின் போது டோல் கட்டண வசூல் முறை குறித்து எழுந்த கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நித்தின் கட்கரி, 'அடுத்த ஒரு வருடத்தில் இந்தியா முழுவதும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வாகனங்களை ஜிபிஎஸ் ஈமேஜிங் மூலம் கண்டறிந்து டோல் கட்டணத்தை வசூல் செய்யும் முறையை அமலாக்கம் செய்யப்படும்.' என அறிவித்துள்ளார்.
இதன் மூலம் இனி டோல் பிளாசாவுக்கு வேலையில்லை.

பாஸ்டேக் கட்டாயம்
இந்தியாவில் தற்போது அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் சாலை போக்குவரத்தின் மூலம் கிடைக்கும் டோல் கட்டண வசூல் தினமும் 100 கோடி ரூபாய் என்ற வகையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

நித்தின் கட்கரி உத்தரவு
இந்நிலையில் பல வாகனங்கள் இன்னும் பாஸ்டேக் முறையில் தப்பித்து வருவதாகவும், இதனைக் கண்டறியக் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகச் சாலை போக்குவரத்து அமைச்சர் நித்தின் கட்கரி தெரிவித்துள்ளார்.

93 சதவீத வாகனங்கள்
இந்தியாவில் பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்ட பின்பு போக்குவரத்தில் ஈடுபடும் சுமார் 93 சதவீத வாகனங்கள் பாஸ்டேக் முறையில் டோல் கட்டணத்தை வசூல் செய்கிறது. ஆனால் மீதமுள்ள 7 சதவீத வாகனங்கள் அபராதத்துடன் இருக்கும் 2 மடங்கு கட்டணத்தையும் செலுத்துவது இல்லை.

சாலை போக்குவரத்துத் துறை
இதேபோல் இந்த 7 சதவீத வாகனங்கள் அனைத்து கட்டுப்பாடுகளிலும் இருந்து தப்பித்து வருகிறது எனக் கட்கரி தெரிவித்துள்ளார். இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதைச் சாலை போக்குவரத்து காவல் துறையை விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஜிபிஎஸ் ஈமேஜிங் தொழில்நுட்பம்
மேலும் அடுத்த ஒரு வருடத்தில் நாடு முழுவதும் இருக்கும் டோல் பிளாசாவை முழுமையாக நீக்கப்பட்டு 100 சதவீதம் ஜிபிஎஸ் ஈமேஜிங் தொழில்நுட்பம் வாயிலான டோல் கட்டண வசூல் செய்யப்படும் முறையைக் கொண்டு வரப்படும் என நாடாளுமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.

2016 முதல் பாஸ்டேக்
இந்தியாவில் 2016ல் அறிமுகம் செய்யப்பட்ட பாஸ்டேக் கட்டண முறை படிப்படியாக மேம்படுத்தப்பட்டு நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுச் செயல்படத் துவங்கியுள்ள இந்த வேலையில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.

vehicle scrappage policy திட்டம்
இதேபோல் பட்ஜெட் அறிவிப்பில் சாலை போக்குவரத்துத் துறை சார்ந்து அறிவிக்கப்பட்ட மிக முக்கியமான அறிவிப்பாகப் பார்க்கப்படும் vehicle scrappage policy திட்டத்தின் பழைய கார்களை அழிக்க விரும்புவோருக்கு புதிய கார் வாங்குவதில் 5 சதவீதம் தள்ளுபடி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தள்ளுபடி அளவு
மேலும் இந்தத் தள்ளுபடி அளவை scrapping centre தான் முடிவு செய்யும், இதன் மூலம் மக்கள் 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரையிலான தள்ளுபடியைப் பெற முடியும்.

மாநில அரசின் சாலை வரி
இதோடு vehicle scrappage policy திட்டத்தின் கீழ் பழைய வாகனங்களை அளிக்கும் மக்களுக்கு மாநில அரசு தனிநபர் வாகனங்களுக்குச் சாலை வரியில் 25 சதவீதம் தள்ளுபடியும், வர்த்தக வாகனங்களுக்கு 15 சதவீத வரியையும் தள்ளுபடி அளிக்க வேண்டும் எனச் சாலை போக்குவரத்து அமைச்சர் நித்தின் கட்கரி பரிந்துரை செய்துள்ளார்.