டெல்லி: சில மணி நேரங்களுக்கு முன்பு தான் இந்திய பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும். அது அவ்வளவு கடினமானது அல்ல. என்று பிரதமர் மோடி சற்றே ஆறுதல் தரும் விதமாக சிஐஐ கூட்டத்தில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடீஸ், இந்தியாவின் கடன் தரத்தினை 22 ஆண்டுகளுக்கு பிறகு Baa2-விலிருந்து Baa3 ஆக குறைத்துள்ளது.
ஏற்கனவே கொரோனாவால் பின்னடைவை சந்தித்து வரும் பொருளாதார சூழ்நிலைக்களுக்கு மத்தியில், இந்தியாவின் வளர்ச்சி இன்னும் என்னவாகுமோ? என்ற கவலையை எழுப்புகிறது இந்த மதிப்பீடு.

கடன் தரம் குறைப்பு
இது குறித்து வெளியான அறிக்கையில், சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ், 22 வருடங்களுக்கு பிறகு இந்தியாவின் கடன் மதிப்பீட்டை Baa2-விலிருந்து Baa3 ஆக குறைந்துள்ளது. இது நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, நிதிப் பற்றாக்குறை, கடன் அழுத்தம், பணப்புழக்கம் போன்ற பல பிரச்சனைகளை முன் வைத்துள்ளது.

ரேட்டிங்ஸ் எதற்கு?
சரி அதென்ன ரேடிங்ஸ்? எந்த ஒரு நாட்டில் உள்ள முதலீட்டாளர்களும் ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கு முன்பு, இத்தகைய கடன் தர நிர்ணய குறியீடுகளை பார்த்த பின்பே, முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானிப்பார்கள். அதிலும் இந்த தரக் குறியீடுகள் ஒரு நாட்டில் முதலீடு செய்வது லாபகரமானதா? அது பாதுகாப்பானதா? அல்லது முதலீட்டிற்கு எந்த பங்கமும் வராமல் இருக்குமா? என பல வகையான குறியீடுகளை கொடுக்கின்றன.

ரேட்டிங்ஸ் அடிப்படையில் தீர்மானம்
இந்த இதுபோன்ற கடன் தர நிர்ணய குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டே, முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்பதை மற்ற நாட்டு முதலீட்டாளர்கள் தீர்மானிப்பார்கள். அந்த வகையில் தற்போது இந்தியாவின் கடன் தரத்தினை Baa2-விலிருந்து Baa3 ஆக குறைந்துள்ளது. இந்த Baa3 - lower medium grade என்றும் மூடிஸ் வகைப்படுத்தியுள்ளது. இது முதலீடு செய்யலாம் என்பதற்கான தரத்திலேயே கடைசி தரமாகும். இது கொரோனாவினால் முடங்கியுள்ள பொருளாதாரம், முடங்கி போன வளர்ச்சி உள்ளிட்ட பல காரணிகளை காரணமாகவும் காட்டியுள்ளது.

முதலீடுகள் குறையலாம்
இது கடந்த 1998ம் ஆண்டில் இந்தியாவின் நேட்டிங்கை Baa3 ஆக குறைத்தது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு மோடி 2.0 ஆட்சியில் இதனை மீண்டும் Baa2 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது கொரோனாவினை காரணம் காட்டி குறைத்துள்ளது. இதனால் இந்தியாவில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய யோசிக்கலாம். அதோடு பங்கு சந்தையிலும் முதலீடுகள் குறையலாம். எல்லாவற்றிக்கும் மேலாக இந்தியா அண்டை நாடுகளிடம் கடன் வாங்கும்போது, அதற்காக வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

பெரும் சிக்கல்கள்
இதனை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் நமது கிரெடிட் ஸ்கோர் எப்படியோ? அப்படித்தான் தரக்குறியீட்டு நிர்ணயமும். கொரோனாவால் இன்னும் சிறிது காலத்திற்கு இந்தியா மெதுவான பொருளாதார வளர்ச்சி, நிதி பற்றாக்குறை, நிதி அழுத்தம், உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் ஆட்சியாளார்கள் புதிய கொள்கைகளை வழிவகுத்து, அவற்றை அமல்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் இருக்கும், இதனால் பொருளாதாரம் மீண்டு வர தாமதமாகும் என்றும் மதிப்பிட்டுள்ளது.