கடந்த நவம்பர் 08, 2016 இரவை பெரும்பாலான இந்தியர்கள் மறந்து இருக்க வாய்ப்பே இல்லை. இந்தியப் பொருளாதாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்த ஆரஞ்ச் கலந்த சிவப்பு நிற 1000 ரூபாய் நோட்டுக்களும், மகாத்மா காந்தி யாத்திரை செய்வது போல இருந்த பச்சை நிற 500 ரூபாய் நோட்டுக்களுக்கும் குட் பை சொன்ன நாள்.
அன்றில் இருந்து இன்று வரை, பணமதிப்பு இழப்பு நடவடிக்கையைச் சார்ந்து பல பிரச்னைகள் மற்றும் சவால்கள் அரசுக்கு வந்து கொண்டே தான் இருக்கின்றன. புதிய இந்தியா பிறந்து கொண்டே தான் இருக்கிறது.
மத்திய ரிசர்வ் வங்கிக்கு சுமார் 21,000 கோடி ரூபாய் செலவானது தொடங்கி இந்தியப் பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலை வரை எல்லாமே பணமதிப்பு இழப்பு என்கிற ஒற்றைச் சொல்லைத் தொட்டு தான் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இந்திய அரசியல் கூட இந்த பணமதிப்பிழப்பை தொட்டு தான் பேசப்படுகிறது.

பண மழை
இப்போது கூட மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் பண மழை பொழிந்து இருக்கிறது. இந்த திடீர் பண மழையில், புதிய 2,000 ரூபாய் நோட்டு, 100 ரூபாய் நோட்டு, பழைய 500 ரூபாய் நோட்டு என பல ரக நோட்டுக்கள் இந்த பண மழையில் பறந்து இருக்கிறது. இந்த பண மழை வீடியோவை டைம்ஸ் நவ் பத்திரிகை தன் வலை தளத்தில் பகிர்ந்து இருக்கிறது.

வேடிக்கை
இதில் இன்னொரு வேடிக்கையான விஷயம் என்ன என்றால்... அப்போது தான் (Directorate of Revenue Intelligence) வருவாய்த் துறை அதிகாரிகள் ஒரு தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தி விசாரிக்கச் சென்று இருக்கிறார்கள். அப்போது தான் இந்த பண மழை பெய்து இருக்கிறது.

அள்ளி விட்டார்கள்
மத்திய கொல்கத்தாவில், நேற்று மதியம் பெய்த இந்த பண மழையால், மத்திய கொல்கத்தாவே அதிர்ந்து இருக்கிறது. பண மழை பெய்த போது நம் சகோதரர்கள் சும்மா இருப்பார்களா என்ன..? மழையாக பொழிந்த பணத்தை நம் சகாக்கள் அள்ளி எடுப்பதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

என்ன ஆனது
பண மழை பொழிந்த போது, மக்கள் எடுத்துக் கொண்ட அந்த பணத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் மக்களிடம் இருந்து மீட்டு எடுத்தார்களா..? இல்லையா..? போன்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. பெரும்பாலும் கிடைத்திருக்காது என்பதையும் சொல்ல வேண்டுமா என்ன..?

நிறுவன விவரம்
நம் (Directorate of Revenue Intelligence) வருவாய்த் துறை அதிகாரிகள், ரெய்டுக்குச் சென்ற நிறுவனத்தின் பெயர் ஹாக் மெர்கண்டைல் பிடைவேட் லிமிடெட் (Hoque Mercantile Private Limited). இந்த நிறுவனமும் மத்திய கொல்கத்தா பகுதியில் பெண்டிக் சாலையில் தான் இருப்பதாகச் சொல்லி இருக்கிறது டைம்ஸ் நவ்.