டெல்லி: கடன் தேடுபவர்களின் கடன் மதிப்பெண்களை (கிரெடிட் ஸ்கோர்) கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மாறாக வாடிக்கையாளர்களுடன் கிளை அளவிலான தொடர்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள் என்று பொதுத்துறை வங்கிகளிடம் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய சீர்த்திருத்தம் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில், நிதியமைச்சர் இவ்வாறு ஒரு ஆலோசனையை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சரி அது என்ன கிரெடிட் ஸ்கோர்? ஏன் வங்கிகள் கடன் கொடுக்க இதனை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.

கிரெடிட் ஸ்கோர்
கிரெடிட் ஸ்கோருக்கு ஒரே வரியில் விளக்கம் சொல்ல வேண்டுமானால், உங்கள் கடந்த கால நிதி பரிமாற்றத்தை பற்றிய மதிப்பீடு தான். குறிப்பாக சொல்லவேண்டுமானால் ஒருவர் வங்கியில் கடன் பெற்று விட்டு அவர் அதை எப்படி செலுத்தியுள்ளார், அதாவது சரியான நேரத்தில் செலுத்த வேண்டிய முழுத் தொகையையும் செலுத்தியுள்ளாரா? என்பது போன்ற பல தகவல்களை கொண்டு உங்களூக்கு கொடுக்கப்படும் மதிப்பெண் தான் இந்த கிரெடிட் ஸ்கோர் (Credit scores). மேலும் விரிவாகப் படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்: க்ரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?

கிரெடிட் ஸ்கோரில் என்ன விவரம் எல்லாம் இருக்கும்?
இந்த கிரெடிட் ஸ்கோரில் கிரெடிட் கார்டு பில், பர்சனல் பில், கார் லோன், வீட்டுக் கடன், அல்லது வேறு ஏதேனும் கடன் உள்ளிட்ட ஒவ்வொன்றின் தகவல் பற்றியும் அதில் இருக்கும். பொதுவாக இந்த விவரங்களை வைத்து தான் வங்கிகள் கடன் கொடுப்பதா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும். இந்த ஸ்கோர் உங்கள் கடன் விவரங்கள், செலுத்திய விவரங்கள், அவற்றை திருப்பி செலுத்திய விதம், கிரெடிட் கார்டு உபயோகம், அதனை திருப்பி செலுத்தும் விதம், வாராக்கடன், கடன் முழுவதும் திரும்ப செட்டில்மென்ட் ஆகிவிட்டதா என அனைத்தையும் ஆராயும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடன் மதிப்பீடு
இந்த கடன் மதிப்பீடு 300 முதல் 900 வரை இருக்கும். பொதுவாக 750க்கு மேல் இருந்தால் எளிதில் கடன் கிடைக்கும் என்பார்கள். மேலும் இந்த கிரெடிட் ஸ்கோரை பொறுத்து வட்டி விகிதத்திலும் ஏற்ற இறக்கம் இருக்கும். ஆக இந்த கடன் மதிப்பீட்டினை பொறுத்து தான் உங்களுக்கு கடன் வழங்கலாமா என்று சில வங்கிகள் தீர்மானிக்கும்.

கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்
சரி இதற்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? நிதியமைச்சர் வங்கிகள் கண் மூடித்தனமாக இந்த கடன் மதிப்பெண்களை மட்டும் வெறுமனே நம்ப வேண்டாம். வாடிக்கையாளர்களுடன் கிளை அளவிலான தொடர்புகளை அதிகப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார். ஏனெனில் அப்போது தான் அந்த வாடிக்கையாளரை பற்றி அறிய முடியும், அவர்களுக்கு கடன் கொடுக்கலாமா என்று அப்போது தான் அறியமுடியும் என்பதைத் தான் இப்படி தெரிவித்துள்ளார்.

கடன் மதிப்பீடுகளை ஒரு குறிகாட்டியாக எடுத்துக் கொள்ளூங்கள்
வங்கிக் கிளைகளுக்கு செல்லுங்கள். கிளைகள் முன்பு இருந்ததை போல் கிளைகளின் நிலை தற்போது இல்லை. மேலும் வாடிக்கையாளர்கள் தற்போது கொஞ்சம் தனிப்பட்ட தொடர்பை எதிர்பார்க்கிறார்கள். மேலும் வாடிக்கையாளர்களின் கடன் குறியீடு குறித்து ஏஜென்சிகள் வழங்கிய மதிப்பீடுகளை வங்கிகள் ஒரு ஆலோசனையாக எடுத்துக் கொள்ள கூடாது. ஆனால் ஒரு குறிகாட்டியாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிரெடிட் ரிப்போர்ட் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

கண்மூடித்தனமாக நம்ப அரசோ, ரிசர்வ் வங்கியோ சொல்லவில்லை
மேலும் நீங்கள் தொழில்நுட்பத்தை விரும்புகிறீர்கள். ஆனால் மதிப்பீட்டு முகமைகளை கண்மூடித்தனமாக நம்புகிறீர்கள். ஆனால் தனிப்பட்ட இணைப்பு என்பது இல்லை. மேலும் மதிப்பீட்டு அடிப்படையில் நீங்கள் வாடிக்கையாளர்களை தவறாக மதிப்பிடுகிறீர்கள். இது மிகைப்படுத்தப்பட்டதா அல்லது குறைவானதா என எனக்கு தெரியாது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியோ அல்லது அரசாங்கமோ இந்த கிரெடிட் ஸ்கோரையோ கண்மூடித்தனமாக நம்ப எந்த உத்தரவையும் நேரடியாக வெளியிடவில்லை என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறைகளை கேட்டறிய கூட்டம்
கிளை அளவிலான அதிகாரிகளுக்கு என்னென்ன பிரச்சனைகள் உள்ளது, என்பதை கண்டறியவும், மேலும் அவர்களுக்கு அரசாங்க திட்டத்தினை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் நிதியமைச்சர் கூறியுள்ளார். மேலும் நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், பணப்புழக்கத்தின் ஓட்டம் நடக்காது என்றும் அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 2ம் தேதி நாடாளுமன்ற கூட்டம் முடிவடைந்த பின்னர், ஊழியர்களின் குறைகளை கேட்டறிவார் என்றும், இது குறித்தான மாவட்ட அளவிலான கூட்டங்கள் நடக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
உங்கள் கிரேடிட் ஸ்கோர்-ஐ உயர்த்த என்ன செய்ய வேண்டும்..?!