டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலையை போக்க அவ்வப்போது முக்கிய துறை சார்ந்த முக்கிய, அதிகாரிகளை சந்தித்து பேசுவது வழக்கமான ஒரு விஷயம் தான்.
அந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
இதற்கு காரணம் வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக வங்கிகளின் தலைமை நிர்வாகிகள் மற்றும் நிர்வாக இயக்குனர்களுடன் சந்திக்க உள்ளார். நுகர்வோர் துறையில் தேவையை அதிகரிப்பதில், வங்கிகளுக்கு முக்கிய பங்கு வகிப்பதை கருத்தில் கொண்டு இந்த சந்திப்பு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பிப்ரவரி 1, 2020ல் தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தொடர்பாக பல அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அத்துறை சார்ந்த அதிகாரிகள் தரப்பில், தற்போதுள்ள வங்கிகளின் நிலையை மேம்படுத்துவதும், அனைத்து துறைகளிலும் தேவையை உயர்த்துவதில் வங்கிகளின் முக்கிய பங்கு உள்ளிட்ட பலவற்றை பற்றி மதிப்பாய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் குறைந்த கட்டணங்களில் ட்ஜிட்டல் சேவைகளை வழங்குவது என பலவற்றை ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த குழுவானது என்.சி,எல்.டி மற்றும் என்.சி.எல்.டி அல்லாத வழிமுறைகள் மூலம் செயல்படாத சொத்துக்கள் மீட்பு குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய நான்கு நிதியாண்டுகளில் 4,01,393 கோடி ரூபாயை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2018 - 2019ல் மட்டும் 1,56,702 கோடி ரூபாயை மீட்டுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சந்திப்பானது வங்கித் துறையின் பங்குகளை எடுத்து கடன் வளர்ச்சியைத் தூண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரெபோ விகிதத்தை குறைப்பை வங்கிகள் முழுமையாக பயன்படுத்தி வட்டி விகித குறைப்பை குறைக்க முற்படலாம் என்றும் கருதப்படுகிறது.
அதிலும் நடப்பு நிதியாண்டில் இது வரை ரிசர்வ் வங்கி 5 முறை வட்டி குறைப்பு செய்துள்ள நிலையில், 135 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. ஆனால் இதன் பலன் முழுமையாக வாடிக்கையாளருக்கு முழுமையாக கிடைத்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.
மேலும் கடந்த செப்டம்பர் 2019வுடன் முடிவடைந்த காலத்தில் வாரக்கடன் அளவு 9.1 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 11.2 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படி ஓரு நிலையிலும் கூட கடந்த செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவிகிதமாக ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் இனி வரவிருக்கும் மாதங்களில் ஆவது இது மீள்ச்சியடைய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளை நடக்கவிருக்கும் இந்த சந்திப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.