இந்தியாவின் முன்னணி பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் நிதியியல் சேவை வழங்கும் பேடிஎம் நிறுவனம் அலிபாபா-வின் ஆன்ட் குரூப் ஐடியாவை பின்பற்றி இந்திய நிதியியல் சந்தையை ஆட்டிப்படைக்கத் தயாராகி வருகிறது. இந்நிறுவனத்தின் மைக்ரோ கடன் சேவையை ஒரே வருடத்தில் இரட்டிப்புச் செய்து இந்திய வியாபாரிகளையும், பேமெண்ட் சந்தையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளத் திட்டமிட்டு வருகிறது.
பேடிஎம் போலவே அலிபாபா-வின் ஆன்ட் குரூப்-ம் அலிபே என்னும் டிஜிட்டல் பேமெண்ட் சேவையை வைத்திருந்தாலும், அதிகளவிலான வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களைக் கைப்பற்றியது தனது மைக்ரோ கடன் திட்டத்தின் வாயிலாகத் தான். சீனா நிதி சேவை சந்தையில் சீன அரசு வங்கிகளை விடவும் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு ஆன்ட் குரூப் உருவாகியுள்ளது.
இதே முறையைத் தான் அலிபாபாவின் பெரும் முதலீட்டில் இயங்கும் பேடிஎம் நிறுவனமும் இந்தியாவில் முயற்சி செய்ய முடிவு செய்துள்ளது.
மகேந்திராவின் மெகா ஆஃபர்.. அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சலுகை.. ரூ.799 முதல் இஎம்ஐ!

1000 கோடி ரூபாய்
இந்தியாவில் பேடிஎம் நிறுவனம் பல டிஜிட்டல் நிதியியல் சேவைகள் மத்தியில் கடன் சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் மைக்ரோ கடன் திட்டத்தின் கீழ் இதுவரை பல ஆயிரம் வர்த்தக அமைப்புகளுக்குக் கடன் சேவை அளித்துச் சிறப்பான வர்த்தகத்தை உருவாக்கி வெற்றி அடைந்துள்ளது.

இரட்டிப்பு
இந்த மைக்ரோ கடன் திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 550 கோடி ரூபாய் அளவிலான நிதியைக் கடனாகக் கொடுத்த பேடிஎம், மார்ச் 2021 வரையிலான நிதியாண்டில் சுமார் 1000 கோடி ரூபாய் வரையில் கடன் கொடுத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

5 லட்சம் ரூபாய் கடன்
பேடிஎம்-ன் மைக்ரோ கடன் திட்டத்தின் கீழ் எவ்விதமான துணை ஈடு (collateral) இல்லாமல் 5 லட்சம் ரூபாய் வரையிலான தொகையைக் கடனாகக் கொடுக்கிறது பேடிஎம்.
இந்தக் கடனை வர்த்தகர்களின் தினசரி பேடிஎம் பேமெண்ட்-ல் இருந்து வசூலிக்கிறது பேடிஎம். மேலும் இந்தக் கடனை மூன்கூட்டியே வர்த்தகர்கள் திருப்பிச் செலுத்துவதற்கு எவ்விதமான வழி இல்லை என்பதால் பேடிஎம் தளத்தில் வர்த்தகம் தொடர்ந்து அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

கூட்டணி
பேடிஎம் இந்தக் கடன் சேவையைப் பல வங்கி மற்றும் NBFC நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தகர்களுக்குக் கொடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கி விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் படி பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் நிறுவனத்தின் கடன் கொடுக்க உரிமை இல்லை.

கிளிக்ஸ் கேபிடல்
பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் 2018ல் கிளிக்ஸ் கேபிடல் நிறுவனத்துடன் இணைந்து மைக்ரோ கடன் சேவையை அளித்து வருகிறது. இந்தக் கிளிக்ஸ் கேபிடல் நிறுவனம் தான் லட்சுமி விலாஸ் வங்கியுடன் இணைவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முக்கிய இலக்கு
இந்தத் துணை ஈடு (collateral) இல்லாத 5 லட்சம் ரூபாய் வரையிலான கடன் திட்டத்தின் முக்கிய இலக்கு கிரானா ஸ்டோர்ஸ் மற்றும் சிறு வர்த்தகக் கடைகளை வைத்துள்ளவர்கள் தான். அதாவது தினமும் பல நூறு முதல் பல ஆயிரம் பேமெண்ட்களை எதிர்கொள்ளும் அமைப்புகள் தான் இத்திட்டத்தின் முக்கியமான இலக்கு.

50 சதவீத வர்த்தகம்
பேடிஎம் தளத்தில் 50 சதவீத பேமெண்ட்கள் வர்த்தகர்களைச் சார்ந்து இருப்பது தான், மீதமுள்ள 50 சதவீதம் தனிநபர் பேமெண்ட்கள் மற்றும் இதர நிதி சேவை சார்ந்தது.
மேலும் பேடிஎம் தளத்தில் தற்போது சுமார் 1.7 கோடி வியாபாரிகள் உள்ளனர், இதில் 70 சதவீத வியாபாரிகள் எவ்விதமான தங்கு தடையுமின்றித் தினசரி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.