சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் தொடர் உயர்வு தேர்தல் அறிவிப்பு காரணமாகக் கடந்த ஒரு மாத காலமாகப் பெரிய அளவிலான மாற்றம் இல்லாமலும் கிட்டதட்ட ஓரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரத்தைப் போல் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ள காரணத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பெட்ரோல் விலை 19 முதல் 22 பைசா குறைந்துள்ளது. இதேபோல் டீசல் விலை 21 முதல் 23 பைசா வரையில் குறைந்துள்ளது.

5 மாநில தேர்தல்
இந்தியாவில் 5 மாநில தேர்தல் நாள் அறிவிக்கும் முன் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது மறக்க முடியாது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் சாமானியர்கள் தினமும் வாங்கும் காய்கறிகள், பால், உணவுப் பொருட்களின் விலை முதல் உற்பத்தி நிறுவனங்களின் போக்குவரத்துச் செலவுகள் முதல் அனைத்தும் உயர்ந்தது.

24 நாட்களாக ஓரே விலை
இந்நிலையில் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளில் இருந்து சுமார் 24 நாட்கள், கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்த நிலையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்விதமான மாற்றத்தையும் மத்திய அரசு செய்யவில்லை.

பெட்ரோல் விலையில் ஏற்பட்ட தடுமாற்றம்
சென்னை விலை நிலவரத்தின் படி மார்ச் 23 வரையில் சுமார் 24 நாட்கள் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் விலை 93.11 ரூபாயாக இருந்தது. 24ஆம் தேதி 92.95 ரூபாயாகவும், 25ஆம் தேதி 92.77 ரூபாயாகத் தொடர்ந்து 2 நாள் குறைந்தது.
இதன் பின்பு 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் இதை 92.77 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை 5 நாட்களாக 86.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை சரிவு
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள காரணத்தால், இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் ரீடைல் விற்பனை விலையைக் குறைத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு மிக முக்கியக் காரணம் சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்டு இருந்து எவர் கிவன் கப்பல் மிதக்கத் துவங்கியுள்ளது தான்.

டெல்லி விலை நிலவரம்
இதன் மூலம் இன்று டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 பைசா குறைந்து 90.56 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 90.78 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் ஒரு லிட்டர் டீசல் விலை டெல்லியில் 23 பைசா குறைந்து 80.87 ரூபாயாகக் குறைந்துள்ளது.

சென்னையில் விலை நிலவரம்
இதேவேளையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 19 பைசா குறைந்து 92.58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை 22 பைசா குறைந்து 85.88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எரிபொருள் விலை நிர்ணயம்
இந்தியாவில் எரிபொருள் தேவையைக் கிட்டதட்ட 90 சதவீதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது மூலம் பூர்த்தி செய்யும் காரணத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தான் அமையும். இதேபோல் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்க்கு டாலர் மதிப்பில் பணம் செலுத்தப்படும் காரணத்தால் டாலர் மதிப்பும் முக்கியக் காரணியாக உள்ளது.

வரி விதிப்புகள்
மேலும் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு அதிக வருமானம் பெற வேண்டும் என்பதற்காகப் பெட்ரோல் மற்றும் டீசல் உட்பட 5 எரிபொருளை ஜஎஸ்டிக்குள் கொண்டு வராமல் தொடர்ந்து மறைமுக வரியின் கீழ் வைத்து வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசு அதீத கலால் வரியும், மாநில அரசு அதீத மதிப்புக் கூட்டு வரியும் விதித்து வருகிறது.

அதிகப்படியான வரி
இந்தியாவில் ரீடைல் விற்பனை சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் சுமார் 61 சதவீதம் தொகை வரி மட்டுமே. இதேபோல் டீசல் விற்பனையில் விலையில் சுமார் 56 சதவீதம் வரியாக உள்ளது.