உலகில் சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் ஆதிக்கம் உள்ளது. இது மக்களையும் பொருளாதாரத்தினையும் புரட்டி போட்டுவிட்டது எனலாம்.
இதற்கிடையில் இதுவரை சரியான தடுப்பு மருந்து இல்லையே என்பது தான், பெரும் கவலையை ஏற்படுத்தும் விதமாகவே இருந்து வருகின்றது.
ஆனால் இதற்கெல்லாம் சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது. இது கிட்டதட்ட 90% வெற்றியும் பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளன.

கொரோனா பாதிப்பு
5 கோடி பேருக்கும் அதிகமானோர் இந்த கொடிய கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமியினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில், உலகின் பல்வேறு நாடுகளும் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் இருந்து வந்தன.

90% வெற்றிகரமான தடுப்பூசி
எனினும் பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை முறையும் செய்யப்பட்டு வருகின்றன. எனினும் இதுவரை எந்த நிறுவனமும் அதில் வெற்றி கண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதற்கிடையில் அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது.

பரிசோதனைகள் வெற்றி
இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டணி நிறுவனங்களின் பரிசோதனையில் உலகின் பல நாடுகளை சேர்ந்தவகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மொத்தம் 43,538 பேர் தடுப்பூசி பரிசோதனைக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் நேற்றுவரை மொத்தம் 38,955 பேருக்கு இரண்டாவது முறையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

90% பாதுகாப்பு
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, 90% கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை பாதுகாப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆக இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு உடனடியாக கிடைக்குமா?
ஆனால் இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் இந்த தடுப்பு மருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வந்தாலும், இந்தியாவுக்கு உடனடியாக கிடைப்பது கஷ்டம் தான். ஆக இதன் மூல இந்தியாவுகு உடனடியாக பயன் கிடைப்பது கஷ்டம் தான் என்கிறது இடி அறிக்கை. ஏனெனில் அப்படியே இந்த மருந்து செயல்பாட்டுக்கு வந்தாலும், முதலில் அமெரிக்க சந்தையை நிரப்ப வேண்டும்.

அமெரிக்கா முன் கூட்டியே ஒப்பந்தம்
ஏனெனில் அமெரிக்கா ஃபிப்சர் நிறுவனத்திடம் முன்னதாக 100 மில்லியன் டோசஸ் அளவுக்கு ஒப்பந்தத்தினை கொண்டுள்ளது. அப்படியே அமெரிக்காவினை தாண்டி வந்தாலும், கனடா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் முன்பதிவு செய்துள்ளன. அதோடு இந்த mRNA தடுப்பூசிகளுக்கு மிகக் கடுமையான வெப்ப நிலை தேவை. ஆக ஃபிப்சர் நிறுவனத்தின் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்துவதை கடினமாக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா ஒப்பந்தத்தில் இல்லை
அதுமட்டும் அல்ல இந்த தடுப்பூசியை ஐரோப்பாவிலும், ஆசியாவின் சில பகுதிகளிலும் விநியோகப்பதற்காக பிப்சர் மற்றும் ஜெர்மனி நிறுவனம் மருந்து தயாரிப்பாளாரான பயோன்டெக் மற்றும் சீன நிறுவனமான போசனுடம் ஒப்பந்தம் செய்துள்ளது. எனினும் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இல்லை. இந்தியா மற்ற நாடுகளை போல முன்கூட்டியே சர்வதேச நிறுவனங்களுடனும் அல்லது உள்நாட்டு நிறுவனங்களுடனும் எந்தவொரு தடுப்பு மருந்துக்காகவும் ஒப்பந்தம் போடவில்லை.

பொருளாதார தாக்கம்
ஆக கொரோனவிற்கு மருந்தே கண்டுபிடிக்கப்பட்டாலும், அது இந்தியாவினை வந்து சேர சிறிது காலம் ஆகும் என்கின்றனர் நிபுணர்கள். ஆக இதுவே பொருளாதாரத்தில் சிறிது தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் இன்றும் உலக நாடுகளின் மிகப்பெரிய நம்பிக்கையே, கொரோனாவிற்கு தடுப்பு மருந்து வந்துவிட்டால், விரைவில் பொருளாதார நடவடிக்கைகள் மாறும். ஆக விரைவில் பொருளாதாரத்தினை மீட்க முடியும் என்று நம்புகின்றன. ஆனால் அத்தகைய நடைமுறைகள் மற்ற நாடுகளை விட இந்தியாவில் இன்னும் தாமதமாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.