அமெரிக்காவின் முன்னணி பங்கு முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன், அதிபர் தேர்தலில் ஜோ பிடன் சிறப்பான வெற்றியைத் தொடர்ந்து இந்தியா - அமெரிக்கா சந்தைகளில் உருவாகிய தாக்கத்தின் ஒரு பகுதியாக இந்திய ரியல் எஸ்டேட் துறையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரஸ்டீஜ் குரூப் நிறுவனத்தில் சுமார் 1.5 பில்லியன் டாலர் அதாவது 11,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் இதுவரையில் செய்யப்பட்ட மாபெரும் அன்னிய முதலீட்டில் முக்கியமான ஒரு முதலீடாகப் பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் இந்த 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடும் அடங்குகிறது.
இந்த 11,000 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் பிரஸ்டீஜ் குரூப்-ன் 21 மில்லியன் சதுரடி அளவிலான கட்டிடங்களை முழுமையாகக் கைப்பற்றுகிறது பிளாக்ஸ்டோன்.

இந்திய ரியல் எஸ்டேட்
லாக்டவுன் காலத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறை கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து, வருமானத்தை இழக்க நேர்ந்த காரணத்திற்காக வீடுகளின் விற்பனை அதிகளவில் குறைந்தது, இதோடு பல கோடி மக்கள் 6 மாத கடன் சலுகையைப் பயன்படுத்தி வீட்டு கடனுக்கான தவணையைச் செலுத்துவதை ஒத்திவைத்தனர்.

நிறுவனங்கள்
இதோடு பல முன்னணி நிறுவனங்கள் கொரோனா காலத்தில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகளைச் சமாளிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் பெரு நகரங்களில் இருக்கும் அலுவலகங்களை நிரந்தரமாக மூடி ஊழியர்களுக்குக் காலவரையற்ற work from home சலுகை கொடுத்துள்ளது.
இதனால் பல நூறு நிறுவனங்களின் அலுவலக லீஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சொத்துக்கள் விற்பனை
இந்தச் சூழ்நிலையில் நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரஸ்டீஜ் குரூப் சுமார் 21 மில்லியன் சதுரடி அளவிலான பல கட்டி முடிக்கப்பட்ட, முடிக்கப்பட வேண்டிய அலுவலகம் திட்டங்கள் மட்டும் மால்களை அமெரிக்காவின் பிளாக்ஸ்டோன் நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறது.
11,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள்ள நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையான விபரங்கள்
பிரஸ்டீஜ் குரூப் நிறுவனத்திடம் இருந்து பிளாக்ஸ்டோன் 7 மில்லியன் சதுரடி அளவிலான குத்தகை வர்த்தகத்திற்குத் தகுந்த 5 office complexes, 10 மில்லியன் சதுரடி அளவிலான 4 office projects, இதோடு 4 மில்லியன் சதுரடி அளவிலான முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட 9 ரீடைல் மால்களைப் பெறுகிறது.
இதுமட்டும் அல்லாமல் பிரஸ்டீஜ் குரூப்-ன் 2 ஹோட்டல்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவதற்காக மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

100 சதவீத ஆதிக்கம்
இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள அனைத்து அலுவலங்கள், மால்கள் மற்றும் ஹோட்டல்கள் என அனைத்தையும் பிரஸ்டீஜ் குரூப்-யிடம் இருந்து பிளாக்ஸ்டோன் முழுமையாகக் கைப்பற்றுகிறது. இதன் மூலம் குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் அனைத்தையும் பிளாக்ஸ்டோன் 100 சதவீதம் கைப்பற்றி ஒற்றை நிர்வாகக் குழுவாக இயங்க உள்ளது.

அதிரடி முடிவு
கொரோனா பாதிப்பால் மோசமான நிலையை எதிர்கொண்டு வரும் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தற்போது பல நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவது அனைவருக்கும் தெரியும்.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திப் பிளாக்ஸ்டோன் பெரிய அளவிலான முதலீட்டை செய்து ரியல் எஸ்டேட் துறையில் இறங்கியுள்ளது. இந்நிறுவன முதலீட்டின் காரணமாகப் பல பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா காரணமாக மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் இந்தியாவில் 8 முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் சார்ந்த வர்த்தகம் 95 சதவீதம் வரையில் பாதிக்கப்பட்டு இத்துறை சார்ந்த ஊழியர்களும், வர்த்தகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

வளர்ச்சி பாதையில் ரியல் எஸ்டேட்
லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலகட்டமான ஏப்ரல்- ஜூன் காலாண்டில் நாட்டின் 8 முக்கிய நகரங்களில் வெறும் 9632 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஜூன் - செப்டம்பர் காலாண்டில் சுமார் 33,403 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு இந்திய ரியல் எஸ்டேட் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

பண்டிகை காலத் தள்ளுபடி
ரியல் எஸ்டேட் துறையில் தொடர்ந்து நிதி நெருக்கடி இருந்தாலும், நாடு முழுவதும் விழாக் காலம் முன்னிட்டு பல புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதோடு நீண்ட நாட்களாக விற்கப்படாமல் இருக்கும் வீடுகளுக்கும், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளும் பல்வேறு சலுகைகள் விலை தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டு வருவதால் விற்பனை தற்போது சூடுபிடித்து வருகிறது.

மத்திய அரசு
இந்தியாவின் உள்கட்டுமானத்தை மேம்படுத்த மத்திய அரசு கடந்த வாரம் புதன்கிழமை அபுதாபி நாட்டைச் சேர்ந்த MIC Redwood 1 RSC Limited என்ற சவரின் வெல்த் பண்ட் நிறுவனத்திற்கு உள்கட்டுமான துறையில் செய்யும் நீண்ட கால முதலீடுகளில் கிடைக்கும் வருமானத்திற்கு 100 சதவீதம் வரி விலக்கு அளித்துக் கட்டுமான துறையின் மாபெரும் வளர்ச்சிக்கு வித்திட்டது.

அன்னிய முதலீட்டுக்கு முக்கியத்துவம்
இந்திய நிதியியல் சட்டம் 2020-ன் கீழ் கொண்டு வரப்பட்ட இந்தப் பிரத்தியேக திட்டத்தின் கீழ் 100 சதவீத வருமான வரிச் சலுகை பெறும் முதல் நிறுவனம் MIC Redwood 1 RSC Limited தான். இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டிய துறைகளைக் குறிவைத்து இத்தகைய சலுகை கொடுக்கப்படுவதால், அதிகளவிலான அன்னிய முதலீடுகளை ஈர்க்க முடியும்.