இணைய உலகின் தாக்கத்தின் வாயிலாக மக்கள் மத்தியில் ஏதேதோ டிரண்டாகி வருகிறது, அப்படி டிக்டாக் வீடியோ மூலம் தற்போது உலகளவில் Quiet Quitting கலாச்சாரம் ஊழியர்கள் மத்தியில் பரவி வருவதால் நிறுவனங்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பிப்போய் நிற்கின்றனர்.
ஊழியர்கள் மீது அதிகப்படியான அழுத்தத்தை நிறுவனங்கள் கொரோனா காலத்தின் துவக்கத்தில் இருந்து செலுத்தி வருவதால் ஊழியர்கள் மத்தியில் வெறுப்பு உருவாக்கியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே quiet quitting கலாச்சாரம் ஊழியர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
சரி quiet quitting கலாச்சாரம் என்றால் என்ன..?

great resignation காலம்
2021ல் கொரோனா தொற்றில் இருந்து வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்த போது great resignation காலம் உருவானது யாராலும் மறக்க முடியாது. கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள், ஊழியர்களுக்கான டிமாண்ட் உச்சம் தொட அனைத்து மட்ட நிறுவனங்களிலும் ஊழியர்களும் வேலையை ராஜினாமா செய்து புதிய நிறுவனத்தில் சேர்ந்தனர்.

ராஜினாமா
இந்த great resignation நிலை இன்னும் தொடர்ந்தாலும் பலருக்கு ஒரு நிறுவனத்தில் வேலையை ராஜினாமா செய்ய முடியாத அளவுக்குச் சில முக்கியக் காரணங்களும் இருக்கும், இதேவேளையில் அதிகப்படியான டார்கெட், வேலைச் சுமையை ஏற்றுக்கொள்ள முடியாத சூழலும் இருக்கும்.

ஊழியர் வெறுப்பு, விரக்தி
இப்படியிருக்கையில் அந்த ஊழியர் வெறுப்பின் காரணமாக அலுவலகத்தின் தனக்கான வேலையை மட்டுமே செய்வார் கூடுதலான வேலையைச் செய்ய மறுத்து வருகின்றனர். இதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கொடுக்கப்படும் சம்பளத்திற்கு மேல் வேலை செய்யமாட்டார்கள் என்பது தான் quiet quitting கலாச்சாரம்.

quiet quitting மனநிலை
இந்த quiet quitting மனநிலை அதிகப்படியான வேலைச் சுமையை எதிர்கொண்டும் குறைவான சம்பள உயர்வு அல்லது எதிர்பார்த்த பதவி உயர்வு, அங்கிகாரம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் ஊழியர்கள் மத்தியில் உருவாகிறது. இத்தகையைக் கலாச்சாரம் அல்லது டிரண்ட் டிக்டாக் வீடியோ வாயிலாகத் தற்போது நிறுவனங்களில் ஆட்சி செய்கிறது.

quiet quitting கலாச்சாரம்
quiet quitting கலாச்சாரம் மூலம் நிறுவனங்களும், முதலாளிகளை விரக்தியடையச் செய்தாலும், ஊழியர்கள் பணிநீக்கம் செய்வதாக அவ்வப்போது மிரட்டினாலும், வேலை வேறு வாழ்க்கை வேறு என்பதையும், இரண்டுக்கு மத்தியில் ஒரு எல்லை இருப்பதையும் ஊழியர்களுக்கு இதுவும் முக்கியம் என்பதை quiet quitting கலாச்சாரம் உணர்த்துகிறது.

work-life balance அடிப்படைத் தேவை
ஊழியர்களுக்குக் கட்டாயமாக work life balance வேண்டும் என்பதை உணர்த்தும் தான் quiet quitting கலாச்சாரம். இதேபோல் நிறுவனத்திற்காகப் பர்சனல் நேரம், ஆரோக்கியம், தூக்கம், ஆகியவற்றை இழக்க முடியாது என்பது உறுதியாகச் சொல்வது தான் quiet quitting.

அமெரிக்கா
பிசினஸ் இன்சைடரின் அறிக்கையின்படி, quiet quitting என்பது ஊழியர்களின் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே உள்ள எல்லைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தப் புதிய கலாச்சாரம் அமெரிக்காவில் பிரபலமடைந்து வருகின்றது.

சேர்வடைந்த ஊழியர்கள்
கடந்த 20 ஆண்டுகளில், அதிக வேலை செய்யும் உலகளாவிய கலாச்சாரத்தில் பலர் சேர்ந்துள்ளனர், ஊதியம் பெறாத உழைப்பு பல வேலைகளிலும் பலர் பணியாற்றி இருப்பார்கள், ஆனால் தற்போது ஊழியர்கள் வர்க்கம் இதில் சோர்வடைந்து விரக்தி அடைந்து இந்த quiet quitting கலாச்சாரத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

பேஸ்புக்
சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் நடந்த முக்கியமான கூட்டத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் முழுமையான வேலைதிறனை வெளிப்படுத்த முடியாத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய நிர்வாகம் தயங்காது என அறிவித்தது மட்டும் அல்லாமல் புதிய கட்டமைப்பு மூலம் ஊழியர்களின் செயல்திறனைக் கணக்கிடம் புதிய முறை கொண்டு வரப்படும் என அறிவித்தார்.

மெட்டா நிறுவனம்
இது மெட்டா நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் பிற முன்னணி நிறுவன ஊழியர்களுக்கும் அதிர்ச்சி அளித்தது. இதுவும் quiet quitting கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. இத்தகைய மனநிலை பற்றிய உங்கள் கருத்து என்ன..? ஊழியர்கள் செய்வது நியாயம் தானா..?