இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது 4 வர்த்தகப் பிரிவுகளிலும் வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் நிலையில், தற்போது அதிகப்படியான கவனத்தை ரீடைல் வர்த்தகம் மீது திருப்பியுள்ளது.
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் 2016 முன்பு வரையில் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மட்டுமே அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வந்த நிலையில் ஜியோ அறிமுகம் மற்றும் அதன் வெற்றியை தொடர்ந்து நுகர்வோர் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மிகப்பெரிய இலக்காகக் கொண்டு உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார். இந்த அறிவிப்பு மூலம் புதிய துறையில் நுழைவது மட்டும் அல்லாமல் நுகர்வோர் சந்தையில் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தப் போகிறது.

முகேஷ் அம்பானி - ஈஷா அம்பானி
முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய ஓரே மகளான ஈஷா அம்பானி தலைமையில் இயங்கி வரும் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் மிகப்பெரிய நுகர்வோர் சந்தை வாடிக்கையாளர்களை வைத்துள்ளது.

மொத்த விற்பனை துறை
இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக மொத்த விற்பனை துறையில் இறங்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இயங்கும் மெட்ரோ ஏஜி நிறுவனத்தை வாங்க முடிவு செய்து பெரும் போட்டிக்கு மத்தியில் ரிலையன்ஸ் வென்றது. ஆனால் ஒரு டிவிஸ்ட் நடந்துள்ளது.

மெட்ரோ நிறுவனம்
இந்த நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வாக மெட்ரோ நிறுவனத்தைச் சுமார் 500 மில்லியன் டாலர் அதாவது 4060 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் முகேஷ் அம்பானி மெட்ரோ ஏஜி நிறுவனத்தின் 31 கடைகளையும் ரீடைல் கடைகளா மாற்ற திட்டமிட்டு உள்ளதாகவும், இதை வைத்து டிமார்ட் உடன் நேரடியாகப் போட்டிப்போட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மெட்ரோ-வின் B2B வர்த்தகம்
மெட்ரோ ஏஜி நிறுவனம் இந்தியாவில் வைத்திருக்கும் 31 கடைகள் மூலம் ரீடைலர்கள், மளிகை கடைகள், ஹோட்டல், உணவகங்கள், கார்பரேட், நிறுவனங்களுக்கான B2B பிரிவில் இயங்கி வந்தது, ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இதைக் கைப்பற்றிய பின்னர் B2C கடைகளாகப் பிரித்து ரீடைல் பிரிவு கடைகளாக மாற்ற உள்ளது.

திருபாய் அம்பானியின் பிறந்த நாள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - மெட்ரோ ஏஜி டீல் திருபாய் அம்பானியின் பிறந்த நாளான டிசம்பர் 28ஆம் தேதிக்குள் வெளியிடவும், B2B வர்த்தகத்தை B2C வர்த்தகமாக மாற்றுவது குறித்த அறிவிப்பை டிசம்பர் 31 க்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் ஏற்கனவே பல ஆயிரம் கடைகளை வைத்து இந்தியா முழுவதும் இயங்கி வரும் நிலையில் இந்த 31 கடைகளை 4060 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதில் கட்டாயம் முக்கியமான திட்டம் இருக்கும்.

ரிலையன்ஸ் - மெட்ரோ கைப்பற்றல்
அனைவரும் ரிலையன்ஸ் - மெட்ரோ கைப்பற்றல் மூலம் மொத்த விலை விற்பனை சந்தைக்குள் ரிலையன்ஸ் நுழையும் என எதிர்பார்த்திருந்த நிலையில் B2B வர்த்தகத்தை B2C வர்த்தகமாக மாற்றத் திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ளதாக செய்தி அதிர்ச்சியையும், குழப்பத்தையும் அளிக்கிறது.