இந்திய பங்குச்சந்தையில் கடந்த 5 வருடத்தில் அதிகப்படியான செல்வத்தை உருவாக்கிய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உயர்ந்துள்ளது.
இந்திய சந்தையில் கடந்த 5 வருடத்தில் பல முன்னணி நிறுவனங்கள் தனது வர்த்தகத்தைப் பல துறையில் விரிவாக்கம் செய்தது மட்டும் அல்லாமல் பெரிய அளவிலான முதலீட்டை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து அதிகப்படியான முதலீட்டைப் பெற்ற காரணத்தால் நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதிகரித்தது.
அப்படிக் கடந்த 5 வருடத்தில் அதிகச் செல்வத்தைச் சேர்ந்து நிறுவனமாக டாடா, அதானி குழும நிறுவனங்களை ஓரம்கட்டிய ரிலையன்ஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய செல்வத்தை உருவாக்கிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2017-22 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் அளவிலான செல்வத்தை உருவாக்கியுள்ளது.

மோதிலால் ஓஸ்வால்
இதன் மூலம் மோதிலால் ஓஸ்வால் வெல்த் கிரியேஷன் பட்டியலில் 4வது முறையாக ரிலையன்ஸ் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. மோதிலால் ஓஸ்வால் வெல்த் கிரியேஷன் பட்டியலில் டிசிஎஸ் (9,548 கோடி ரூபாய்), இன்போசிஸ் (5,795 கோடி ரூபாய்), ஹெச்டிஎப்சி வங்கி (4,108 கோடி ரூபாய்) மற்றும் பஜாஜ் பைனான்ஸ் (3,614 கோடி ரூபாய்) ஆகியவை மற்ற முன்னணி நிறுவனங்களாகும்.

அதானி டிரான்ஸ்மிஷன்
கடந்த 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களை 2,538 கோடி ரூபாய் அளவுக்குப் பணக்காரர்களாக்கிய அதானி டிரான்ஸ்மிஷன், டாப் 10 பட்டியலில் உள்ள ஒரே அதானி குழுமப் பங்குகளாகும்.

வேகமான வளர்ச்சி
5 ஆண்டு CAGR இல் 106 சதவீதம் வளர்ச்சியடைந்ததன் மூலம், அதானி டிரான்ஸ்மிஷன் இந்தக் காலகட்டத்தில் மிக வேகமாகச் செல்வத்தை உருவாக்கிய நிறுவனமாக மாறியுள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தைத் தொடர்ந்து தான்லா பிளாட்ஃபார்ம்ஸ், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் பிரைட்காம் குழுமம் ஆகியவை இப்பிரிவில் இடம்பெற்றுள்ளது.

நிலையான வளர்ச்சி
கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகச் செயல்பட்ட பங்குகள் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாகத் தொடர்ந்து செயல்படும் பங்குகளில் அதானி எண்டர்பிரைசஸ், அல்கைல் அமீன்ஸ், கோஃபோர்ஜ், மைண்ட்ட்ரீ மற்றும் எல்&டி இன்போடெக் ஆகியவை இடம்பெற்றுள்ளது.