இந்தியாவின் 2வது பெரிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 52.98 சதவீத பங்குகளை விற்பனை செய்து 4 முறை அறிவிப்புச் செய்யப்பட்ட பின்பும், இந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கப் பிரிட்டன் BP, பிரான்ஸ் நாட்டின் டோட்டல், ரஷ்யாவின் ராஸ்நெஃப்ட் ஆகிய நிறுவனங்கள் விருப்பம் தெரிவிக்காத நிலையில், சவுதியின் ஆராம்கோ இந்நிறுவனத்தை 10 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்குவதிற்குத் தயக்கம் காட்டி வருகிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் சவுதியின் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனப் பங்குகளை வாங்க முன்வராத காரணத்தால் தற்போது அனைவரின் பார்வையும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
70,000 கோடி ரூபாய் டீல்.. யாருக்கு ஜாக்பாட்..? #BPCL #RIL

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருட்களின் அடிப்படையில் தான் தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்துள்ளார். குஜராத்-ன் ஜாம்நகர்-ல் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை வைத்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரீடைல் எரிபொருள் விற்பனையிலும் மாபெரும் இலக்கை வைத்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் மிகவும் லாபகரமாக இயங்கும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.

முகேஷ் அம்பானி
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்க யாரும் போட்டியில் இல்லாத நிலையிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது விருப்பம் குறித்து எவ்விதமான பதிலையும் இதுவரை வெளியிடவில்லை.
இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

புதிய அதிகாரிகள்
சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் Sarthak Behuria மற்றும் சில வாரங்களுக்கு முன்பு இந்தியன் ஆயில் கார்ப் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் Sanjiv Singh ஆகியோரை தனது நிறுவனத்தில் பணியில் அமர்த்தியது.
இதன் மூலம் ரிலையன்ஸ் BPCL நிறுவனப் பங்குகளைக் கைப்பற்றும் திட்டத்தில் போட்டியிடலாம் எனக் கருத்து நிலவுகிறது.

வர்த்தக லாபம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் BPCL நிறுவன பங்குகளைக் கைப்பற்றினால் ஜாம்நகர் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையுடன் BPCL நிறுவனத்தின் மும்பை, கொச்சி, பினா ஆகிய பகுதிகளில் இருக்கும் சுத்திகரிப்பு ஆலையுடன் இணைக்க முடியும்.
இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் 1,406 பெட்ரோல் பங்குகள் உடன் நாடு முழுவதும் இருக்கும் BPCL நிறுவனத்தின் 17,138 பெட்ரோல் பங்குகளை இணைக்க முடியும்.
இதோடு 6,151 எல்பிஜி விநியோக ஏஜென்சி மற்றும் 61 விமான எரிபொருள் ஸ்டேஷன்ஸ் ஆகியவற்றையும் பெற கூடும்.

22 சதவீத சந்தை
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இந்திய பெட்ரோலியம் சந்தையில் சுமார் 22 சதவீத வர்த்தகத்தைக் கொண்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புச் சந்தையில் 15.3 சதவீதம் இந்நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளது.

79% பங்குகள்
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்றால் அரசிடம் இருக்கும் 52.98 சதவீத பங்குகளை 47,430 கோடி ரூபாய்க்கும், பொதுச் சந்தையில் இருக்கும் 26 சதவீத பங்குகளை 23,276 கோடி ரூபாய்க்கும் வாங்க வேண்டும்.

70000 கோடி ரூபாய் டீல்
இந்த 79 சதவீத பங்குகள் மதிப்பு கிட்டதட்ட 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான டீல் என்பதால் சிறு நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் இந்நிறுவனத்தை வாங்குவது சவாலாக உள்ளது.

12,000 ஊழியர்கள்
மேலும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நாடு முழுவதும் இருக்கும் தனது வர்த்தகங்களில் சுமார் 12,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இதுவே பல முன்னணி வெளிநாட்டு நிறுவனங்களைப் பயமுறுத்தும் முக்கியமான விஷயமாக உள்ளது. காரணம் இந்தியாவில் ஊழியர்கள் சட்டம் மிகவும் கடினமாக இருக்கும் காரணத்தினால் 12000 ஊழியர்களை வைத்துச் சமாளிப்பது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாபெரும் சவால்.

நிதி நிலைமை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது பெட்ரோலியம் துறை வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல திட்டங்களை வகுத்து வரும் இதே வேளையில், தனது டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகத்தின் பங்குகளை விற்பனை செய்து பெருமளவிலான நிதியைப் பெற்றுள்ளது.
இதனால் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தை வாங்குவதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு நிதிநிலை ஒரு பிரச்சனையாக இருக்காது.

பெட்ரோல், டீசல்
உலகம் முழுவதும் தற்போது ஹைட்ரஜென் மற்றும் பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வரும் நிலையில், பிரிட்டன் அரசு 2030 முதல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு விற்பனை செய்யத் தடை விதிக்க ஆலோசனை செய்யத் திட்டமிட்டு வரும் இந்தச் சூழ்நிலையில் கச்சா எண்ணெய் துறையில் முகேஷ் அம்பானி 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்வாரா..?

முகேஷ் அம்பானி முடிவு
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தைக் கைப்பற்றுவதால் கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகள் சிறப்பாகவே இருந்தாலும், முகேஷ் அம்பானி தற்போதும் ஈகாமர்ஸ் மற்றும் டெலிகாம் சேவை மீது பெரிய அளவிலான கவனத்தைச் செலுத்தி வருகிறார்

தலையெழுத்து
இந்நிலையில் 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்து பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் 79% பங்குகளை வாங்குவாரா என்பது சந்தேகமே.. ஆனால் இந்தப் பங்குகளை வாங்கும் பட்சத்தில் ரிலையன்ஸ்-ன் பெட்ரோலியம் வர்த்தகத்தின் தலையெழுத்து மொத்தமாக மாறிவிடும்.
இதனால் மொத்த முதலீட்டுச் சந்தையும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது.