எந்த தொழில் துறையானாலும் அதில் தனிக்காட்டு ராஜாவாக ஜெயிக்கும் முகேஷ் அம்பானி, தகவல் தொடர்பு துறையிலும் கொடி கட்டி பறந்து வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், மிகக் குறுகிய காலத்திலேயே பல ஆண்டுகளாக துறையில் இருந்து வரும் போட்டியாளர்களையும் விஞ்சி, வாடிக்கையாளர்களை குறுகிய காலத்தில் தன் பக்கம் தக்க வைத்துள்ளவர் தான் முகேஷ் அம்பானி.
அப்படி மக்களை குறுகிய காலத்தில் ஈர்த்த ஒரு நிறுவனம் தான் ரிலையன்ஸ் ஜியோ.

லாபம் அதிகரிப்பு
போட்டி நிறுவனங்கள் எல்லாம் தொடர்ந்து நஷ்டத்தினை கண்டு வரும் நிலையில், இவர் காட்டில் எப்போதும் பணமழைதான். கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 72% லாபம் அதிகரித்து 2,331 கோடி ரூபாய் லாபம் கண்டுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது அதன் வாடிக்கையாளர்கள் அதிகளவிலான டேட்டாக்களை உபயோகப்படுத்தியதால் தான் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆண்டு வளர்ச்சி
இதே ஆண்டு வளர்ச்சியானது 177.5% அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அதன் இயக்க வருவாய் 6.2 சதவீதம் அதிகரித்து 14,835 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இந்த விகிதம் ஆண்டு விகிதத்தில் 26.6 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அர்பு எவ்வளவு?
கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த நிறுவனம் அழைப்புக் கட்டணங்களுக்கு கட்டணத்தினை அறிமுகப்படுத்தியது. இதன் பின்னர் ஒரு பயனரின் சராசரி வருவாய் 130.6 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டில் 128 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டேட்டா உபயோகமும் அதிகரிப்பு
இதே டேட்டா நுகர்வும் மாதத்திற்கு 11.3 ஜிபியாக அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பர் காலாண்டில் 11.1 ஜிபியாக இருந்தது. இதே சராசரியான வாய்ஸ் கால் உபயோகம் மாதத்துக்கு 771 நிமிடங்களாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே வாடிக்கையாளர்கள் மார்ச் 31, 2020 நிலவரப்படி 387.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.

மிக்க மகிழ்ச்சி
இது குறித்து தனது கருத்தினை கூறியுள்ள முகேஷ் அம்பானி, இந்த கடிமான காலத்திலும் வாடிக்கையாளர்களுக்கு இணைப்பு மற்றும் செயல்பாடுகளை எளிதாக்கியுள்ளதில் நாங்கள் மகிழ்சியடைகிறோம். கடந்த மூன்றாவது காலாண்டில் ஜியோ நிறுவனம் 62.5% லாபத்தினை அதிகரித்து 1,350 கோடி ரூபாய் லாபத்தினை கண்டுள்ளது. இது வாய்ஸ் கால்களூக்கு கட்டணத்தினை அதிகரித்த நிலையில், நான்காவது காலாண்டில் வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.