இந்த வேகமான உலகத்தில் தொட்டது எல்லாம் பிஸ்னஸ் ஐடியா என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். அதிலும் கடந்த 10 வருடத்தில் இந்தியாவில் துவங்கப்பட்ட பல வர்த்தகங்கள் இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு உயர்ந்துள்ளது. அதில் சில வர்த்தகத்தைப் பார்க்கும் போது இந்திய மக்கள் இதைக் கூட ஏற்றுக்கொண்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.
கடந்த 10 வருடத்தில் இந்தியாவில் வளர்ந்த மிகமுக்கியமான துறைகளில் ஒன்று ரென்டல் (Rental) அதாவது வாடகை சேவைகள்.
வெளிநாட்டு நிறுவனமாக மாறப்போகும் ஏர்டெல்.. உண்மை என்ன..?

இந்தியா
பொதுவாக இந்தியர்கள் தேவையில்லாத பொருட்களுக்கு வீண் செலவு செய்யமாட்டார்கள். இதற்கு முக்கியக் காரணம், இந்தியாவில் பொருளாதார ரீதியிலான நடுத்தர மக்கள் தொகை மிகவும் அதிகம். ஆனால் கடந்த 10 வருடத்தில் நடுத்தர மக்களின் வாழ்வியல் மிகப்பெரிய அளவில் மாறியுள்ளது என்றால் மிகையில்லை. இதற்கு முக்கியமான சான்று தான் இந்தியாவில் ரென்டல் வர்த்தகம் அடைந்து மாபெரும் வெற்றி.

மாபெரும் வளர்ச்சி
இந்தியாவில் வாடகைக்கு வீடு மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது கார், ஆடைகள், வீட்டுற்கு தேவையான பர்னீச்சர்-இல் துவங்கி போன், லேப்டாப், வீடியோ கேம் வரையில் அனைத்தும் வாடகைக்குக் கிடைக்கிறது.
அதுவும் இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் இல்லை, நாட்டின் பெரும்பாலான நகரங்களில் இந்த வாடகை சேவைகள் பெரிய அளவிலான வெற்றியை அடைந்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இவை பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்பை பெற்றுள்ளது.

வித்தியாசம்
இன்றைய இளைஞர்களுக்கு முன்பு எப்போது இல்லாத சுதந்திரம் கிடைத்துள்ளது, மன ரீதியிலும், நிதியியல் ரீதியிலும். இதைப் பலர் சிறப்பாகப் பயன்படுத்தி வருவதைப் பாரம் பார்த்துள்ளோம். இதனால் இந்தத் தலைமுறையை ஒரு விஷயத்திலோ அல்லது ஒரு இடத்திலோ கட்டிப்போட முடியாது.
இந்த வித்தியாசம் தான் இந்த ரென்டல் துறையிலும் தென்படுகிறது. உதாரணமாக நம்முடைய அப்பா அம்மாக்கள் வீட்டிற்குப் பர்னீச்சர் வாங்க வேண்டும் என்றால் பணத்தைச் சேமித்து வாங்குவார்கள் அல்லது கடன் பெற்று வாங்குவார்கள்.
ஆனால் இன்று ஒரு வீட்டிற்குத் தேவையான அனைத்து அடிப்படையான பர்னீச்சர்களும் அதாவது பெட்ரூம், ஹால் மற்றும் டைனிங் ஆகியவற்றுடன் பிரிட்ஜ் மற்றும் மைக்ரோவேவ் ஓவென் என அனைத்தும் மாதம் வெறும் 4,247 ரூபாய்க்கு வாடகைக்குப் பெற முடியும். இது கடன் பெற்று வாங்குவதை விடவும் சற்று குறைவான பணம் என்றால் மிகையில்லை.

பிற பொருட்கள்
இப்படிப் பர்னீச்சர் மட்டுமில்லை தற்போது கார், வீடியோ கேம்கள், ஆடம்பர ஆடைகள், லேப்டாப், கம்பியூட்டர், சவுண்ட் சிஸ்டம், நகைகள், ஸ்மார்ட் கருவிகள், ஜிம் கருவிகள், ஸ்மார்ட்போன் எனப் பல பொருட்கள் எளிதாக வாடகைக்குப் பெற முடியும். அதுமட்டும் அல்லாமல் இவை அனைத்தும் வீட்டிற்கே வரும் வகையில் டோர் டெலிவரியும் செய்யப்படுகிறது.

வர்த்தக வாய்ப்பு
இப்படிக் கார் வாடகை முதல் பர்னீச்சர் வரையில் அனைத்தும் வாடகை கிடைக்கும் வர்த்தகத்தை Sharing Economy என அழைக்கிறார்கள். இன்றைய வாழ்க்கை முறையில் இத்தகைய வர்த்தகத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதிலும் 2025ஆம் ஆண்டுக்குள் Sharing Economy-இன் மொத்த வர்த்தக மதிப்பு உலகளவில் 335 பில்லியன் டாலர் வரையில் இருக்கும் என PWC மதிப்பிடுகிறது.

இந்திய நிறுவனங்கள்
இந்தியாவில் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் Furlenco, RentoMojo மற்றும் GrabOnRent ஆகிய நிறுவனங்கள் கடந்த சில வருடங்களில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது கவணிக்க வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.