இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருக்கும் முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதற்காக டெலிகாம், ரீடைல் வர்த்தகத்தில் பல மாற்றங்களைச் செய்தது போல் தற்போது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கீழ் தற்போது ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் ஆகியவை தனி நிறுவனங்களாக இருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் வர்த்தகம் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிர்வாக முறையைத் தான் முகேஷ் அம்பானி மாற்றத் திட்டமிட்டுள்ளார்.

ரிலையன்ஸ் O2C லிமிடெட்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை, சுத்திகரிப்பு வர்த்தகம், பெட்ரோலியம் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ரீடைல் எரிபொருள் வர்த்தகம் ஆகிய அனைத்தையும் ரிலையன்ஸ் O2C லிமிடெட் எனத் தனி நிறுவனமாகப் பிரித்த முயற்சி செய்து அதற்கான பணிகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது.

முக்கிய ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகத்தின் இந்த முடிவு அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் விதமாகத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தலின் படி முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள், கடன் கொடுத்தவர்கள் ஆகியோரிடம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆயில் டூ கெமிக்கல் வர்த்தகத்தை ரிலையன்ஸ் O2C லிமிடெட் நிறுவனமாகப் பிரிப்பது குறித்து ஆலோசனை செய்துள்ளது.

99.99% பேர் ஒப்புதல்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகத்தின் முடிவிற்குச் சுமார் 99.99 சதவீதம் பேர் ஒப்புதல் அளித்துள்ளதாக ரிலையன்ஸ் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம்
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் அஸ்திவாரமாக விளங்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலியம் பொருட்களின் விற்பனை பிரிவின் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியாக ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் O2C பிரிவு வர்த்தகத்தில் 20 சதவீத பங்குகளை உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அராம்கோ-விற்கு விற்பனை செய்ய ஆகஸ்ட் 2019 முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆராம்கோ பேச்சுவார்த்தை
ஆராம்கோ உடனான பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது புதிதாக உருவாக்கியுள்ள ரிலையன்ஸ் O2C நிறுவனத்தில் இருக்கும் குஜராத் ஜாம்ரநகரில் உள்ல எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் சொத்துக்களில் சுமார் 20 சதவீத பங்குகளை 15 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.