பிரியாணி.. இந்திய மக்களின் மிகவும் விருப்பமான உணவாக மாறியது மட்டும் அல்லாமல் நாளுக்கு நாள் இதன் வர்த்தகம் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்த டிரெண்டை சரியாகக் கணித்து வர்த்தகத்தில் இறங்கியவர் தான் ரம்யா.
வெறும் 1.5 வருடத்தில் 8 கோடி ரூபாய் வரையில் வருமானம் ஈட்டும் பிரியாணி வர்த்தகத்தை உருவாக்கியது எப்படி..? எவ்வளவு முதலீடு செய்தார்..? யார் இவர்..?!

கொரோனா
இந்தியாவில் கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட வர்த்தகப் பிரிவுகளில் ஹோட்டல்கள் தான், வர்த்தகம் மற்றும் வருமானம் இல்லாத காரணத்தால் பல லட்சம் ஹோட்டல்கள் இந்தியா முழுவதும் மூடப்பட்டது மிகவும் வருத்தமான செய்தி. இது ஒரு பக்கத்தின் கதை தான்.

ஆன்லைன் உணவு டெலிவரி
மறுப்பக்கம் இந்த லாக்டவுன் காலத்தில் தான் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. அதேபோல் இந்தியாவில் குறிப்பாகக் கிளவுட் கிட்சன் கொண்ட அனைத்து நிறுவனங்களும் இந்த லாக்டவுன் காலத்தில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்று அசத்தியுள்ளது.

ரம்யா ரவி
இந்த மாற்றத்தையும், உணவு சந்தை எதை நோக்கி செல்கிறது என்பதைச் சரியாகப் புரிந்துகொண்ட ரம்யா ரவி ஹோட்டல் வர்த்தகம் மிகவும் மோசமான சரிவை எதிர்கொண்ட நவம்பர் 2020ல் இத்துறைக்குள் நுழைகிறார்.

5 லட்சம் ரூபாய் முதலீடு
ரம்யாவின் முயற்சி வெற்றி அடைய 50 சதவீதம் வாய்ப்புகள் மட்டுமே இருக்கும் காரணத்தால் மிகவும் சரியான முறையில் திட்டமிட்டு 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் வெறும் 200 சதுரடி கொண்ட அறையில் கிளவுட் கிட்சன் செட்-டப்பில் RNR தொன்னை பிரியாணி என்ற பெயரில் பெங்களூரில் வர்த்தகத்தை துவங்குகிறார் ரம்யா.

3 ஊழியர் மட்டுமே
இந்தக் கிளவுட் கிட்சனுக்கு ஒரே ஒரு சமையல்காரர் மற்றும் 2 உதவியாளர்கள் மட்டுமே. மேலும் வர்த்தகத்தை நிர்வாகம் செய்ய ரம்யா உடன் அவரது சகோதரி ஸ்வேதா-வும் இணைகிறார்.

RNR தொன்னை பிரியாணி
இரண்டு இளம் தலைமுறை பெண்கள் துவங்கிய RNR தொன்னை பிரியாணி கிளவுட் கிட்சன் வர்த்தகம் வெறும் 1.5 வருடத்தில் 8 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது, மார்ச் 2022க்குள் இதன் அளவு 10 கோடி ரூபாயை தொடும் என ரம்யா மற்றும் ஸ்வேதா கூறுகின்றனர். இது எப்படிச் சாத்தியமானது...

தொன்னை பிரியாணி
தமிழ்நாட்டுக்கு எப்படி ஆம்பூர் பிரியாணியோ அதேபோல் தான் கர்நாடகாவிற்குத் தொன்னை பிரியாணி. கர்நாடகாவில் தொன்னை பிரியாணி மிகவும் பிரபலமானது ஆனால் பிற மாநிலத்தில் பிரபலம் இல்லாத காரணத்தால் இதன் பெயர் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

ரம்யா மற்றும் ஸ்வேதா
நவம்பர் 2020ல் ரம்யா மற்றும் ஸ்வேதா இணைந்து பெங்களூரில் மிகவும் முக்கிய வர்த்தகப் பகுதியான நாகரபாவி-யில் ஒரு சமையல்காரர் மற்றும் பேக்கிங் செய்ய இரண்டு உதவியாளர் உடன் RNR தொன்னை பிரியாணி கிளவுட் கிட்சன்-ஐ துவங்கினார்கள்.

கிளவுட் கிட்சன்
முதலில் கிளவுட் கிட்சன் பற்றித் தெரிந்துகொள்வோம். கிளவுட் கிட்சன் என்பது ஆன்லைன் வர்த்தகத்திற்காக மட்டுமே இயங்கும் ஒரு செட்அப், இந்தக் கிளவுட் கிட்சன் உணவு தயாரிக்கப்பட்டு ஆன்லைன் டெலிவரிக்கு அனுப்பப்படும்.

சிறிய பட்ஜெட்
ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடும் அமைப்பு இந்தக் கிளவுட் கிட்சனில் இருக்காது. இது சிறிய பட்ஜெட்டில், ஆன்லைன் வாடிக்கையாளர்களை மட்டுமே குறி வைத்து வர்த்தகத்தைத் துவங்குவோருக்கு மிகவும் சிறப்பான ஒரு கட்டமைப்பாக விளங்குகிறது. இந்தக் கிளவுட் கிட்சன் செட்அப்-ஐ உங்கள் வீட்டில் கூட அமைக்க முடியும்.

ஆன்லைன் உணவு ஆர்டர்
கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருந்த காரணத்தால் ஆன்லைன் உணவு ஆர்டர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கத் துவங்கியது. இதை உணர்ந்து மொத்த வர்த்தகத்தையும் ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மாற்றினார் ரம்யா.

நீல நிறத்தில் டின் பாக்ஸ்
ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே பேகேஜ்-ல் அதிகக் கவனம் செலுத்தினார். இதற்காக நீல நிறத்தில் டின் பாக்ஸ்-ல் பிரியாணி பேக் செய்து அதனுடன் ஸ்வீட், ரய்தா, சாலட் என மொத்தமாகச் சிறந்த தரம் சிறந்த பேகேஜ் உடன் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் காரணத்தால் RNR தொன்னை பிரியாணி வாடிக்கையாளர்கள் மத்தியில் தனிக் கவனத்தைப் பெற்றது.

டிரெண்டான RNR தொன்னை பிரியாணி
இதனாலேயே குறைந்த காலகட்டத்தில் பெங்களூர் ஆன்லைன் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இந்த RNR தொன்னை பிரியாணி டிரெண்டானது. RNR தொன்னை பிரியாணி பிராண்டில் கிக்கன் பிரியாணி 189 முதல் 289 ரூபாய் வரையிலும், மட்டன் பிரியாணி 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய உணவுகள்
மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் பாரம்பரிய உணவான முருங்கைக்காய் சில்லி, மட்டன் சூப், சிக்கன் நெய் ரோஸ்ட், இளநீர் பாயாசம் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டது இது அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹிட்டானது.

ஸ்வீக்கி உடன் கூட்டணி
RNR தொன்னை பிரியாணி வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைய துவங்கும் போது ரம்யா ஸ்விக்கி உடன் ஒரு வருடத்திற்கு exclusive delivery partner ஒப்பந்தம் செய்தனர். இதன் மூலம் பிற தளத்தில் பிரியாணி விற்பனை செய்ய முடியாது, இதற்கு மாறாக ஸ்விக்கி RNR தொன்னை பிரியாணி-க்கு மிகப்பெரிய விளம்பரம் செய்து வர்த்தகத்தைக் கொண்டு வரும்.

விளம்பர உதவி
ஆரம்பக் கட்டத்திலேயே ஒரு வருடம் ஒப்பந்தம் என்பது சிக்கலாகத் தெரியலாம். ஆனால் இங்குத் தான் ரம்யா தனது ஹார்வோர்டு பட்டபடிப்பை பயன்படுத்திச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தம் செய்யவில்லை என்றால் அனைத்து டெலிவரி தளத்தில் வர்த்தகம் செய்ய விளம்பரத்திற்கும் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ
ஆனால் தற்போது இந்த விளம்பரப்படுத்தும் பணிகளை ஸ்விக்கி செய்து விடும். அதேபோல் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோவில் இருக்கும் 70 சதவீத வாடிக்கையாளர்கள் அதே மக்கள் தான் என்பதால் எப்படியும் ஒரு வருடத்திற்குப் பின் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியும் என்பது தான் RNR தொன்னை பிரியாணி உரிமையாளர் ரம்யாவின் ஐடியா.

பேஸ்புக் விளம்பரம், பிரபலங்கள் பதிவு
இதேவேளையில் RNR தொன்னை பிரியாணி பேஸ்புக் மற்றும் இதர சமுக வளைத்தளம் மூலம் முதல் 3 மாதத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் தொகையை விளம்பரத்திற்காகச் செலவு செய்து உள்ளார் ரம்யா. இதோடு கன்னட நடிகைகளான மான்விதா மற்றும் நிஷ்விகா ஆகியோரின் சோஷியல் மீடியா பதிவுகள் பெரிய அளவில் கைகொடுத்துள்ளது.

10000 ஆர்டர்கள்
ஸ்விக்கி உடன் RNR தொன்னை பிரியாணி ஒரு வருட ஒப்பந்தம் செய்த முதல் மாதத்தில் மட்டும் சுமார் 10000 ஆர்டர்கள் குவிந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் 2020ன் finest brand என்ற பட்டத்தையும் ஸ்விக்கி RNR தொன்னை பிரியாணி-க்கு கொடுத்துள்ளது.

14 கிளவுட் கிட்சன்
2020ல் நாகரபாவி-யில் 200 சதுரடியில் ஒரே ஒரு கிளவுட் கிட்சனை துவங்கிய RNR தொன்னை பிரியாணி தற்போது பெங்களூரில் சுமார் 14 கிளவுட் கிட்சன் கொண்டு வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளார் ரம்யா.

முதல் ஹோட்டல்
இதைத் தொடர்ந்து 2021 அக்டோபர் மாதம் முதல் ரீடைல் ஹோட்டலை ரம்யா பெங்களூரின் மிகவும் முக்கியமான பகுதியான ஜெயாநகர் 4வது பிளாக்கில் சுமார் 65 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவங்கி அசத்தியுள்ளார் ரம்யா மற்றும் ஸ்வேதா. மார்ச் 2022க்குள் சுமார் 10 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்ட முடியும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையில் உள்ளார் ரம்யா.

ரம்யா ரவி கல்வி
ரம்யா பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர், அவர் எப்போதும் ஒரு தொழில்முனைவோராக வேண்டும் என்று கனவுடன் இருந்துள்ளார். அவர் 2011 இல் பெங்களூருவில் உள்ள தி வேலி பள்ளியில் 10 ஆம் வகுப்பையும், 2013 இல் கிறிஸ்ட் ஜூனியர் கல்லூரியில் 12 ஆம் வகுப்பையும் முடித்தார். 2016 இல் கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் பட்டம் பெற்றார்.

பணி அனுபவம்
தனது கல்லூரி ஆண்டுகளில், சில்லறை வணிக நிறுவனமான லேண்ட்மார்க் குழுமத்தில் பணிபுரிந்தார், மேலும் பட்டப் படிப்புக்குப் பிறகு மூன்று மாத மேலாண்மைப் படிப்பிற்காக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழத்தில் படிக்கச் சென்றார். பெங்களூரு திரும்பிய ரம்யா, பார்க் பிளாசா ஹோட்டலில் ஆறு மாத பயிற்சியை முடித்தார்.

10 கோடி வருமான இலக்கு
வெறும் 3 பேர் கொண்டு வர்த்தகத்தைத் துவங்கிய 27 வயதான ரம்யா இன்று 10 கோடி வருமானம், ஒரு ரீடைல் கடை, 60 ஊழியர்கள் உடன் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார்.