கிளவுட் சேவை நிறுவனமான ரூட் மொபைல் கடந்த 45 நாட்களில் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி இந்நிறுவனம் ஐபிஓ-வில் ஒரு பங்கு விலை 350 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் ஒரு பங்கு விலை 1150 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.
இதன் மூலம் கடந்த 45 நாட்களில் ரூட் மொபைல் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்குச் சுமார் 228 சதவீத லாபத்தை அளிக்கக் கொடுத்துள்ளது.
மேலும் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் ரூட் மொபைல் லோவர் சர்கியூட் லிமிடெட் ஆன 5 சதவீதத்தைச் சரிந்து ஒரு பங்கு விலை 1,042.10 ரூபாய் விலையில் முடிவடைந்துள்ளது.
இந்தியாவில் 100% வருமான வரி விலக்கு.. அபுதாபி நிறுவனத்திற்கு ஜாக்பாட்..!

அதிரடி வளர்ச்சி
ரூட் மொபைல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 42.59 சதவீத வளர்ச்சியும், ஒரு வாரத்தில் 34.69 சதவீத வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தகம் துவங்கிய சில நிமிடத்தில் சரிய துவங்கி பங்குகள், 12.25 மணி அளவில் லோவர் சர்கியூட் 5 சதவீத வீழ்ச்சியை அடைந்து வர்த்தகத்தை முடித்துள்ளது.

காலாண்டு முடிவுகள்
செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் லாப அளவீடுகள் 152 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்தது சுமார் 32.7 கோடி ரூபாயை கொடுத்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூட் மொபைல் வெறும் 13 கோடி ரூபாய் லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இந்நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 354.5 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்று சுமார் 76 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள்
ரூட் மொபைல் நிறுவனத்தில் அமெரிக்க முதலீட்டு நிறுவனமான கோல்டுமேன் சாச்சீஸ் 4.23 சதவீத பங்குகளையும், குவைத் இன்வெஸ்ட்மென்ட் ஆதாரிட்டி நிறுவனம் 1.01 சதவீத பங்குகளை ஐபிஓ வெளியீட்டின் போது கைப்பற்றிய காரணத்தால் இந்நிறுவனப் பங்குகளுக்குச் சந்தையில் அதிகளவிலான டிமாண்ட் உருவாகியுள்ளது.
இவ்விரு நிறுவனங்களின் முதலீட்டால் ஐபிஓ வெளியான போது 102.28 சதவீத ப்ரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டது.

பங்குச்சந்தை
செவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் ரூட் மொபைல் நிறுவன பங்குகள் 1,151.70 ரூபாயில் வர்த்தகத்தைத் துவங்கிய நிலையில், 9.20 மணிக்குத் தடாலடியாகச் சரிய துவங்கியது.
இதன் பின்பு 12.30 மணிக்கு 5 சதவீத லோவர் சர்கியூட் அளவீட்டை அடைந்த காரணத்தால் ஒரு பங்கு 1,042.10 ரூபாய் விலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.