இந்திய டெலிகாம் நிறுவனங்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் இன்று துவங்கியுள்ளது, சுமார் 2,250 Mhz அலைக்கற்றைகளைச் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் என்ற அடிப்படை விலையில் விற்பனை செய்ய உள்ளது.
இந்த ஏலத்தில் டெலிகாம் சேவைகளை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ள முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும் என்றும், அதிகப்படியான அலைக்கற்றைகள் விற்பனை ஆகாமல் போகக்கூடும் என்ற நிலையும் உள்ளது.
இதனால் டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் டெலிகாம் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஏலம்
மார்ச் 1ஆம் தேதி துவங்கியுள்ள ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மத்திய டெலிகாம் துறை, டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் உடன் இணைந்து 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz மற்றும் 2500 MHz ஆகிய பேண்டுகள் கீழ் சுமார் 2,251.25 MHz அலைக்கற்றை விற்பனை செய்ய உள்ளது.
மேலும் இந்த ஏலத்தில் 5ஜி அலைக்கற்றை இல்லை.

அடிப்படை விலை நிர்ணயம்
இந்த அலைக்கற்றையை அரசு நிர்ணயம் செய்துள்ள அடிப்படை விலையின் படி கணக்கீட்டால் கூட மத்திய அரசுக்கு சுமார் 3.92 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையை வருமானமாக பெறும், ஆனால் பல சந்தை ஆய்வாளர்கள் தற்போது விற்பனை செய்யப்படும் 2,251.25 MHz அலைக்கற்றையில் 80 சதவீதம் விற்பனை ஆகாது எனக் கணித்துள்ளனர்.

50,000 கோடி ரூபாய்
இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் மத்திய அரசு 50,000 கோடி ரூபாய்க்கும் குறைவான அளவிலான தொகையை மட்டுமே வருமானமாகப் பெறும் எனத் தெரிவித்துள்ளனர். 2016 ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட 2,355 MHz அலைக்கற்றையில் 40 சதவீதம் விற்பனை செய்யப்படவில்லை.

2016 ஸ்பெக்ட்ரம் ஏலம்
2016ல் விற்பனை செய்யப்பட்ட 2,355 MHz அலைக்கற்றையின் மதிப்பு 5.6 லட்சம் கோடி ரூபாய், இந்த விற்பனை மூலம் மத்திய அரசு விற்பனை செய்யப்பட்ட அலைக்கற்றையின் வாயிலாக வெறும் 65,789 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றது.

டெலிகாம் கட்டணங்கள் உயரும்
ஏற்கனவே டெலிகாம் நிறுவனங்கள் அதிகளவிலான கடன் மற்றும் கட்டண நிலுவையில் இருக்கும் நிலையில் இந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் கூடுதல் கடன் சுமை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் இந்த ஏலத்திற்குப் பின் டெலிகாம் கட்டணங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும் ஜியோ - ஏர்டெல் நிறுவனங்கள் மத்தியில் 4ஜி அலைக்கற்றையில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.