வெறும் 5,000 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்த சரவணபவன் கடந்த 2017-ம் ஆண்டு கணக்குப் படி சுமாராக 3,000 கோடி ரூபாய் (சரியாக 2,978 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது.
இந்த வளர்ச்சிக்குக் காரணம் யார்..? கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி மறைந்த ராஜகோபால் அண்ணாச்சி தான்.
அவரின் வளர்ச்சி & வீழ்ச்சிக் கதையைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். அதோ புன்னையாடியில் இருந்தே தொடங்குவோம்..!

ராஜகோபால்
1947-ம் ஆண்டு தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடியில் புன்னையாடி எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார் ராஜகோபால். வழக்கம் போல பெரிய பண பலமோ, மக்கள் செல்வாக்கோ அதிகம் இல்லாத சாதாரண விவசாயக் குடும்பம். பெரிய அளவில் படிப்போ பட்டங்களோ கிடையாது.

சென்னை
ஆனால் கடுமையாக உழைக்கத் தெரியும். ஒவ்வொரு நாளும் மணிக் கணக்கு பார்க்காமல் கடிகாரத்தோடு போட்டி போட்டு உழைப்பாராம். இயல்பாகவே வியாபாரம் அவர் ரத்தத்திலும் அறிவிலும் இருந்ததாம். எனவே 1973-ல் பிழைப்புக்காக சென்னைக்கு டிக்கெட் எடுத்துவிட்டார். நாமாக இருந்தால் "பெரிய படிப்பு ஒன்றும் இல்லை... எனவே எப்படியாவது ஒரு வேலைக்கு போய் சம்பாதிப்போம்" என்று தானே நினைப்போம்.

ட்விஸ்ட்
அந்த முதல் படியில் இருந்தே நம் ராஜகோபால் அண்ணாச்சி, வெகு ஜன மக்களில் இருந்து மாறுபட்டுவிட்டார். வந்தவர் எங்கும் வேலைக்குப் போகவில்லை. கையில் இருந்த காசை வைத்து, அடித்துப் பிடித்து, சொந்தமாக ஒரு மளிகை கடை போட்டு விட்டார். அன்றில் இருந்தே அண்ணாச்சி முதலாளி தான் போல.

மளிகைக் கடை
1973 முதல் 1981 வரை ராஜகோபால் அண்ணாச்சி, இந்தியாவில் மளிகைக் கடை வைத்திருக்கும் லட்சம் வியாபாரிகளில் ஒருவர். சென்னை கே கே நகர் பகுதியில் கடை ஓகேவாக ஓடிக் கொண்டு இருந்தது. அந்த காலங்களில், சென்னை சிங்காரச் சென்னை ஆக உருமாறிக் கொண்டு இருந்தது. அந்த உருமாற்றம் மற்றும் வளர்ச்சி தான் நம் அண்ணாச்சிக்கு அடுத்த வியாபாரத்தைக் காட்டியது.

மளிகைக் கடை டூ ஹோட்டல்
சென்னை அரசியல் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் ஒரு வளர்ந்து கொண்டிருந்த நகரம் என்பதால், பல மாவட்ட மற்றும் மாநில மக்கள் வந்து போகும் இடமாக இருந்தது. எத்தனையோ பேர் "சென்னைக்கு வந்தா எங்கங்க நல்ல சோறு தண்ணி கிடைக்கும்" என முனுமுனுப்பதை வெளிப்படையாக நம் ராஜகோபால் அண்ணாச்சியே கேட்டு இருக்கிறாராம்.

ஐடியா
அட ஆமால்ல...! நாமளே ஒரு சின்ன ஹோட்டல் போட்டா என்ன..? நல்ல வாழை இலையில், தரமான அரிசிச் சோறு, நல்ல மனமான சாம்பார், செறிக்கும் ரசம், தரமான தயிர், இஞ்சி பச்சை மிளகாய் தட்டிப் போட்ட மோர், அருமையாக ஒரு கூட்டு, ஒரு பொறியல், பிரமாதமாக ஒரு பாயசம் போட்டால் நன்றாக ஓடும் போல் இருக்கிறதே என ஐடியா பொறி தட்டியது.

ஜோசியம்
உடனே தன் ஜோசியரிடம் பிசினஸ் ஆலோசனை கேட்டிருக்கிறார் நம் புன்னையாடி ராஜகோபால் அண்ணாச்சி. நெருப்பு சம்பந்தப்பட்ட துறையில் வியாபாரம் தொடங்கினால் ஜெக ஜோதியாக வருவீர்கள் எனச் சொல்லி இருக்கிறார். அப்புறம் என்ன ஜோசியரே சொல்லிட்டாரே, அடுத்த வேலையப் பார்ப்போம் என ஹோட்டல் தொடங்கும் வேலையில் மும்முரமாக இறங்கிவிட்டாராம்.

சொல் அல்ல செயல்
இந்த ஐடியா நமக்கு வந்து இருந்தால்... என்ன ரிஸ்க் இருக்கிறது, போட்ட பணத்தை எப்போது எடுப்பது..? தங்கச்சி கல்யாணம் என பல வருடம் யோசித்து இருப்போம். அண்ணாச்சியோ தன் ஜோசியரிடம் கேட்டு, கொஞ்சம் நிதானமாக யோசித்துவிட்டு, செயலில் இறங்கி விட்டார். தன் மளிகைக் கடை போட்ட கே கே நகரிலேயே ஒரு ஹோட்டலையும் போட்டார். அது தான் இன்றைய Saravana Bhavan.

நட்டம்
கே கே நகரில் கடை போட்டால் எல்லாம் முடிந்ததா..? வரும் வாடிக்கையாளர்கள் "சாம்பார்ன்னா இதான்யா சாம்பார்" என பாராட்டினால் போதுமா..? அசல் பிரச்னையே அப்போது தான் ஆரம்பம். ஆரம்பத்திலேயே உயர் தர எண்ணெய், நல்ல காய்கறிகள், பக்குவமாக அரைத்த மாவில் இட்லி தோசை என தரத்தில் சமரசம் இல்லாமல் சாப்பாடு போடுகிறார் நம் Saravana Bhavan அண்ணாச்சி. கடுமையான நட்டம். 1981-லேயே மாதம் 10,000 நட்டம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வால்யூம் விளையாட்டு
என்ன செய்து லாபம் பார்ப்பது என்கிற யோசனையில் கடையை நடத்திக் கொண்டிருக்கிறார் அண்ணாச்சி. Saravana Bhavan என்கிற பெயர் அடுத்த சில மாதங்களில் மெல்ல மெல்ல சென்னை முழுக்க பரவுகிறது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், செலவு தானாகவே குறையத் தொடங்கிவிட்டது. வந்த லாபத்தை சரியாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.

வெற்றிடம் நிரப்புதல்
சென்னையில் நல்ல உணவகங்கள் இல்லாத வெற்றிடத்தை புரிந்து கொண்ட நம் ராஜகோபால் கே கே நகரில் மட்டும் கடை நடத்தினால் பத்தாது என்பதையும் வெகு சில வருடங்களில் புரிந்து கொண்டார். அடுத்த சில ஆண்டுகளிலேயே, சென்னையின் சில முக்கிய இடங்களில் கடையைப் போட்டார். படு ஜோராக கல்லா கட்டினார்.

புகழ்
சரவண பவனில் 1980 மற்றும் 1990-களில் சரவண பவனில் சாப்பிட்டவர்கள் (குறிப்பாக தமிழர்கள் + தென் இந்தியர்கள்)
"பொங்கல் என்ன டேஸ்ங்குற"
"தோச பாவுண்டுந்திரா" (தோசை சூப்பர்)
"மீல்ஸ் அடி பொலியடா" (மீல்ஸ் சூப்பர்)
"இட்லி தும்பா சென்னாகிதே" (இட்லி நல்ல இருக்கு) என பரவத் தொடங்கியது.

ஒரு முறை
ஆக ஊரில் இருந்து யாராவது சென்னைக்கு வந்தால், ஒரு வேளை சாப்பாட்டை சரவண பவனில் சாப்பிடுவது என கங்கனம் கட்டிக் கொண்டு வரும் அளவுக்கு மக்கள் வயிற்றில் இடம் பிடித்தது சரவண பவன். அதோடு கடைகளின் எண்ணிக்கையும் பரவியது. சரவண பவன் தோசையும் சாம்பாரும் மெல்ல தென் இந்தியப் புகழ் அடையத் தொடங்கியது.

கால மாற்றம் உணவு மாற்றம்
நம் தமிழர்கள், எப்போதும் புதுமை விரும்பிகள் தானே..! எத்தனை நாளுக்குத் தான் அதே இட்லி, தோசை, மீல்ஸ் வைத்து ஓட்டுவது என யோசித்தார் அண்ணாச்சி. அதென்ன நார்த் இண்டியன் உணவு என விசாரித்தார். மெல்ல நான், பன்னீர் பட்டர் மசாலா என வட இந்திய உணவுகள் தொடங்கி, சைனீஸ் வரை தன் மெனு கார்டில் சேர்த்தார். ஆனால் அப்போதும் சரவண பவனின் இட்லி, தோசை, சாம்பார் தான் ராஜாவாக இருந்தது.

வெளிநாடு பயணம்
1990-களில் தமிழகம் முழுக்க கிளை பரப்பிவிட்டு, அடுத்து என்ன என்று யோசித்த போது தான் வெளிநாடுகளில் கடை போடுவதைப் பற்றி யோசிக்கிறார். 1992- 93 காலங்களில் அண்ணாச்சி சிங்கப்பூருக்குச் சென்று இருந்த போது, மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவனங்கள், எப்படி அசுரத் தனமாக கிளை விரித்து வியாபாரம் செய்கிறார்கள் என பார்வை இட வாய்ப்பு கிடைத்தது. ஐடியா..!

முதல் வெளிநாட்டுக் கடை
2000 வாக்கில் துபாயில், ஹோட்டல் சரவண பவன் கால் பதித்தது. இன்று வரை லண்டன், பாரிஸ், நியூ யார்க் என உலக நாடுகளில் 43 முக்கிய நகரங்களில் கடை போட்டு தன் சுவையால் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது Saravana Bhavan. பொதுவாகவே இந்திய சமையல், அதிகம் ஆட்களை நம்பியே சமைக்கப்படுவை. எனவே சமையல்காரர்களை இங்கிருந்து பல நாடுகளுக்கு அனுப்பி வியாபாரம் பார்த்தார் அண்ணாச்சி.

புத்திசாலி
சமையல் கலைஞர்களை, இங்கிருந்து அனுப்பிய அண்ணாச்சி, புத்திசாலித்தனமாக, வெளிநாடுகளில் நடத்த வேண்டிய கடைகளை பெரும்பாலும் ஃப்ரான்சைஸ் விட்டு விட்டார். ஆக நிர்வாகம், அந்த நாட்டு அரசாங்கத்திடம் அனுமதி வாங்குவது, வரி செலுத்துவது எல்லாம் அவர்கள் தலைவலி ஆனது. ஃப்ரான்சைஸ் கொடுப்பதால், அண்ணாச்சிக்கு வந்து சேர வேண்டிய லாபம் தானே வந்தது. வெளிநாடுகளில் வியாபாரம் நடத்தும் ரிஸ்கை அவர் எடுத்துக் கொள்ளவில்லை.

நியூ யார்க் டைம்ஸ்
Saravana Bhavan-ன்னு ஒரு புது ஹோட்டல் வந்திருக்கு வரியா..?
எங்க..?
அதான்யா நம்ம லெக்சிங்டன் அவென்யூ 26-வது தெருவுல
வரிசையா சாப்பாட்டுக்கு நிப்பாய்ங்களே.
அந்த கடையா..? அவிய்ங்க விளம்பரம் கூட
பண்ணமாட்டாய்ங்களேப்பா..!
ஆமா மாப்ள, அதே கடை தான். அவிய்ங்க எதுக்கு
விளம்பரம் பண்ணனும்..? ஏற்கனவே அவிய்ங்க ஹோட்டல் சாப்பாட்ட பத்தி ஊரே பேசிக்கிட்டு இருக்குறப்ப, எதுக்கு விளம்பரம் பண்ணனும்னு கேக்குறேன்.
ஆமாப்பா. இன்னக்கி தேதிக்கி (07 மே 2014) Saravana Bhavan கடை இந்தியாவுல மட்டும் 33 கடை, வெளிநாட்டுல 12 கடை என மொத்தம் 45 கடையோட பெரிய சைவ உணவக சங்கிலியால வளர்ந்து வர்றாய்ங்க..! அப்புறம் எதுக்கு விளம்பரம்.

பாராட்டு
இப்படி நம்மூர் பத்திரிகைகள் பேசவில்லை... அமெரிக்காவின் புகழ் பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இப்படித் தான் Saravana Bhavan பற்றிய தன் கட்டுரையைத் தொடங்குகிறது. இந்தியர்கள் வாய் வழியாகவும், சுற்றுலா பயணிகள் ஏற்கனவே சுவைத்திருக்கும் இந்திய உணவுகள் (குறிப்பாக தோசை) பற்றிய வாய் வழி செய்திகளால் மட்டுமே நியூயார்க் நகரில் உள்ள Saravana Bhavan சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது என எழுதி இருக்கிறார்கள்.

அவர்கள் மொழி
Saravana Bhavan தோசையை "அத தோசன்னு சொல்லாத, வாய்ல அடி, அது தங்க பான் கேக்குன்னு சொல்லுயா" "வடை - இது வடையல்ல நன்கு பொரித்த மொறு மொறு டோக்நட் (Doughnut), "Saravana Bhavan மசால் தோசைக்காக சாகலாம்யா" என உச்சி முகர்ந்திருக்கிறது நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை. இப்படி Saravana Bhavan சாப்பாட்டு ஐட்டங்களை அமெரிக்கர்கள் தங்களுக்கு வசதியாக எதேதோ பெயர்களை வைத்து ருசித்துக் கொண்டிருப்பதையும் நம்மால் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

சமூக நீதி 1
Saravana Bhavan உணவகத்துக்குப் பின் ஒரு அழுத்தமான சமூக நீதி ஒளிந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா..? நம்பித் தான் ஆக வேண்டும். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்னை போன்ற மிகப் பெரிய அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் முக்கியமான நகரத்தில் கூட உணவகங்களே இல்லை. காரணம் இந்திய கலாச்சாரத்தில் 20-ம் நூற்றாண்டு தொடக்க காலங்களில் வெளியில் சாப்பிடுவது தவறு என்கிற பார்வையிலேயே பார்க்கப்பட்டது என்கிறார், நியூ யார்க் பல்கலைக்கழகத்தில், உணவுக் கல்வி பேராசிரியரான கிருஷ்ணந்து ரே (Krishnendu Ray).

சமூக நீதி 2
20-ம் நூற்றாண்டின் மத்தியில் சில முன்னேறிய வகுப்பினர்கள் தங்கள் சமூகத்துக்காக மட்டும் என சில உணவகங்களைத் திறந்தார்கள். இந்த முன்னேறிய வகுப்பினர்கள், மற்ற சமூகத்தினர்கள் சமைத்த உணவைச் சாப்பிடுவது தவறு என்கிற கருத்து ஆழமாக நிலவி வந்த காலம். ஆகையால் முன்னேறிய வகுப்பினர்களால், முன்னேறிய வகுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட உணவகங்கள் தான் அன்றைய சென்னையின் ஆரம்ப கால உணவகங்கள்.

சக போட்டியாளர்
ஒரு காலத்தில் இந்த உணவகத் துறை ஒரு சில சமூகத்துக்கு மட்டுமே கதவு திறந்தது. அந்தக் கதவுகளை உடைத்தெறிந்து எங்களைப் போன்ற மற்ற சமூகத்தினரும் இன்று இந்திய உணவு வியாபாரத்தில் இருக்கிறோம் என்றால் அதில் Saravana Bhavan அண்ணாச்சி ராஜகோபாலின் பங்கு மிகப் பெரியது எனப் புகழ்கிறார் முருகன் இட்லிக் கடையின் உரிமையாளர் மனோகரன். இத்தனைக்கு முருகன் இட்லிக் கடை நம் Saravana Bhavan-க்கு நேரடி போட்டியாளர் என்பது கவனிக்கத்தக்கது.

அமெரிக்க பத்திரிகையாளர்
1990-களின் மத்தியில் நியூயார்க் டைம்ஸ் சார்பாக Rollo Romig என்பவர் மயிலாப்பூர் Saravana Bhavan-ஐ சுற்றிப் பார்க்க வருகிறார். அப்போது தொழிலாளர்களிடம்...
1. உங்க முதலாளி எப்படி..? என ரோலோ கேட்கிறார்
"அவுக நம்ம ஐயா (அப்பா) மாதிரிங்க, நம்ம குடும்பத்துல ஒருத்தவுக. நமக்கு என்ன சங்கடம்ன்னாலும் அவர் கிட்ட தைரியமா சொல்லலாம். அதுக்கு மேல அவுக பாத்துப்பாக" என திருநெல்வேலி மணத்தில் பேசுகிறார் ஒரு ஊழியர்.

புன்னையாடி விசிட்
2. அவர் சொந்த ஊருக்கு போக தனியா விடுமுறை பணம்...
முடிப்பதற்குள் ஊழியர் பேசத் தொடங்குகிறார் "ஆமாங்க, அண்ணாச்சி பெறந்த ஊர் தூத்துக்குடி பக்கம் புன்னையாடிங்குற கிராமம் தான். ஒவ்வொரு வருஷமும் சொகுசா அண்ணாச்சியோட சொந்த ஊருக்கு போக வர கம்பெனிலருந்து காசு கொடுப்பாக" என்கிறார்.

ஊழியர் சலுகை
உங்களுக்கு நிறைய சலுகைகள் தருவதாகச் சொல்கிறார்களே..? என ரோலோ ரொமிக் கேட்கிறார்.
"ஆமாங்க. எங்களுக்கு
ஒரு செல்போன்,
ஒரு பைக்கு,
பைக்குக்கு பெட்ரோல் போட காசு, தினமும் பேப்பர் (தினசரி) வாங்க தனி படிக் காசு-ன்னு எல்லாம் தருவாக. இத்தனை நாள் முடி வெட்டுறதுக்கு கூட காசு கொடுத்துக்கிட்டு இருந்தாக. இப்ப கொஞ்சம் மாசம் முன்ன தான் அத நிறுத்துனாக" என்கிறார் மற்றொரு ஊழியர்.

சலுகை குறைவு
இதுவரை உங்களுக்கான சலுகைகள் குறைந்திருக்கிறதா..?
"நிச்சயமா இல்லிய்ங்க. நாங்க இங்க பல வருஷமா வேலை பாத்துக்கிட்டு இருக்கோம். ஒவ்வொரு வருஷமும் ஏதுனா சலுகை அதிகரிச்சிக்கிட்டேத் தான் இருக்கும். இன்னும் சொல்லப் போனா ஓட்டுறதுக்கு வண்டி, வண்டில போட பெட்ரோல், அதோடு வண்டி ரிப்பேர் ஆன கூடா சரி செஞ்சிக் கொடுக்க மெக்கானிக் எல்லாம் எங்களுக்காக வச்சிருக்காரு பெரியவரு (ராஜகோபால்)" என்கிறார் ஒரு மதுரைக் கார ஊழியர்.

செலவே இல்லை கிண்டல்
ரோலோ ரொமிக் கேள்வி கேட்பதற்கு முன்பே...
எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட "சரவண பவன்ல வேலை பாக்குறவிய்ங்களுக்கு எல்லாம் என்ன தாண்டா செலவு இருக்கும்..? எல்லாத்தையும் உங்க கம்பெனியே பாத்துக்குறாய்ங்க, ஒரு நல்லது கெட்டதுக்கும் உங்க முதலாளி பணம் தர்றார், அன்றாட செலவுகளுக்கும் படிக் காசு தந்திடுறாய்ங்க... வாங்குற சம்பளத்த பூராவும், பேங்குல வட்டிக்கு போட்டு வெச்சிக்குவீய்ங்களோ..?" என்று கிண்டலா ஓட்டுவாய்ங்க என்கிறார் இன்னொரு சரவண பவன் ஊழியர்.

ஆல் ஓகே
Saravana Bhavan தொடங்கப்பட்டு
நல்ல பெயர்,
தன் துறையில் புகழின் உச்சம்,
சக போட்டியாளரின் பாராட்டு, தொழிலாளர்களின் விசுவாசம்,
ஊர்மக்களின் அன்பு,
செழிப்பான வாழ்கை,
அளவுக்கு அதிகமான காசு பணம்... என எல்லாம் மிகச் சிறப்பாக ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தாலும், தன் வீழ்ச்சிக்கு தானே குழி தோண்டிக் கொண்டிருந்தார் ராஜகோபால் அண்ணாச்சி.

ஜீவ ஜோதி
ஜீவ ஜோதி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டால், வியாபாரம் இன்னும் வளரும் என ஜோசியர் சொன்னாராம். ஜீவ ஜோதி என்கிற கேரக்டரே அப்போது தான் நம் அண்ணாச்சியின் வாழ்க்கைக்குள் வருகிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 1990-களின் கடைசி காலங்களில், Saravana Bhavan உரிமையாளர் ராஜகோபால் ஜீவ ஜோதி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

மறுப்பு
ஆனால் ஜீவ ஜோதி சம்மதிக்கவில்லை. அதற்கு மாறாக சரவண பவன் ஹோட்டலில் வேலை பார்த்த ப்ரின்ஸ் சாந்த குமாரை திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜீவ ஜோதிக்கும், ஜீவ ஜோதியின் கணவர் ப்ரின்ஸ் சாந்தகுமாருக்கும், அண்ணாச்சி தரப்பில் இருந்து மிரட்டல்கள் வந்திருக்கிறது.

விவாகரத்து
அதோடு விவாகரத்து வாங்குமாறும் ஜீவ ஜோதியையும், ப்ரின்ஸ் சாந்த குமாரையும் கடுமையாக வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் இருவருமே சம்மதிக்கவில்லை. இந்த பிரச்னையை புரிந்து கொண்ட ஜீவ ஜோதி மற்றும் சாந்த குமார் இருவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் விளக்கமாக புகார் கொடுத்திருக்கிறார்கள். வழக்கம் போல காவல் துறை சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர் என்பதால், அண்ணாச்சி மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து விட்டது.

ஆள் அவுட்
ஜீவ ஜோதி மற்றும் ப்ரின்ஸ் சாந்த குமார் இருவரும் கணவன் மனைவியாக, காவல் நிலையத்தில் புகார் கொடுத்த அடுத்த சில நாட்களிலேயே ப்ரின்ஸ் சாந்த குமாரை ஒரு மர்ம கும்பல் கடத்திச் சென்று, கொடைக்கானல் மலைப் பகுதியில் வைத்து கொலை செய்துவிடுகிறார்கள். ப்ரின்ஸ் சாந்த குமார் காணாமல் போன விஷயம் காவல் துறைக்கு தெரிய வருகிறது. சில பல வாரங்களுக்குப் பின் ப்ரின்ஸ் சாந்தகுமாரின் உடலை வனத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பிரேத பரிசோதனைக்கு கொடுக்கிறார்கள்.

உறுதி
முறையாக நடந்த பிரேத பரிசோதனையில் ப்ரின்ஸ் சாந்த குமார் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது நிரூபணமாகிறது. உடனே வழக்கு ராஜகோபால் மீது பாய்கிறது. அதற்கு ஜீவ ஜோதியும், ப்ரின்ஸ் சாந்த குமாரும் கொடுத்த புகாரை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்துகிறது காவல் துறை. விசாரணையில் ராஜ கோபால் சொல்லித் தான், ஐந்து பேர், சாந்த குமாரை கடத்திச் சென்று கொடைக்கானல் மலைப் பகுதியில் வைத்துக் கொன்ற உண்மைகள் தெரிய வருகிறது.

அந்த ஐந்து பேர்
டேனியல், கார்மேகன், ஹூசேன், காசி விஸ்வநாதன், பட்டுரங்கன் என்கிற இந்த ஐந்து பேருமே ராஜகோபாலின் சொல் படி ஜீவ ஜோதியின் கணவர் ப்ரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்ய உதவியவர்கள் என்பதால் இவர்களுக்கும், ராஜகோபாலுக்கு கொடுத்த ஆயுள் தண்டணையை அப்படியே கொடுத்திருக்கிறார்கள். வழக்கு உக்கிரமாக நடந்ததால் அடுத்த மாதமே ராஜகோபால் காவலர்களிடம் சரணடையை வேண்டி இருந்தது. ஒருவழியாகப் போராடி ஜூலை 2003-ல் ஜாமீனில் வெளியே வந்தார் ராஜகோபால். ஆனால் வழக்கில் இருந்து நிரந்தரமாக வெளியே வரமுடியவில்லை.

2009-ல்
கடந்த 2009-ம் ஆண்டிலேயே சென்னை உயர் நீதிமன்றம் சரவண பவன் நிறுவனர் ராஜகோபாலுக்கும், அவரோடு கொலையில் சம்பந்தபட்ட ஐந்து பேருக்கு வாழ் நாள் சிறை தண்டனை கொடுத்தது. அதோடு 55 லட்சம் ரூபாய் அபராதத்தையும் நீதிமன்றத்திடம் செலுத்தவும், 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டுத் தொகையை ஜீவ ஜோதிக்கு கொடுக்கும் படியும் உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

மரணம்
இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு தோற்றுப் போனது. எல்லா சட்ட ரீதியான கதவுகளும் அடைபட்ட நிலையில் கடந்த ஜூலை 09, 2019 அன்று சிறைக்குப் போன Saravana Bhavan உரிமையாளர் ராஜகோபால் கடந்த ஜூலை 18, 2019 அன்றே கடுமையான மன உளைச்சல் மற்றும் உடல் நலக் குறைவால் காலமானார்.

கடைசி ஆசை
என்ன தான் ஜீவ ஜோதியை திருமணம் செய்து கொள்ள தவறான வழிகளில் ஈடுபட்டாலும், சரவண பவன் நிர்வாகத்தில் அண்ணாச்சி ராஜகோபால் இருந்தவரை, தன் வியாபாரத்தில் சுணக்கம் காட்டியதே இல்லை. அதற்கு அவர் இறந்த அன்றும் சரவண பவன் ஹோட்டல் திறக்கப்பட்டு இருந்ததே சாட்சி. தனிப்பட்ட முறையில் ராஜகோபால் அண்ணாச்சி எப்படியோ தெரியாது. ஆனால் வியாபாரம் என்று வந்துவிட்டால்.. உண்மையாகவே அண்ணாச்சி... அண்ணாச்சி தான்.