இந்தியாவில் பஸ் கான்டிராக்ட் பெற ஸ்கேனியா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் உயர்மட்ட நிர்வாகங்கள் முறைகேடான விஷயங்களைச் செய்துள்ளதாக இந்நிறுவனத்தின் உள்விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2013 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் 7 மாநிலங்களில் பஸ் கான்டிராக்ட் பெற ஸ்கேனியா லஞ்சம் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

உள்விசாரணையில் வெளியான உண்மை
வோக்ஸ்வேகன் குழுமத்தின் வர்த்தக வாகன பிரிவான டார்டன் எஸ்ஈ நிறுவனம் 2017ல் துவங்கிய ஸ்கேனியா உள்விசாரணையில் லஞ்சம் கொடுத்த விஷயமும், இதில் உயர்மட்ட நிர்வாகமும் ஈடுபட்டு உள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விசாரணை முடிவுகள்
ஸ்கேனியா மீதான உள்விசாரணை 2017ல் நடந்தாலும் இந்த விசாரணையில் முடிவுகள் வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் ஸ்வீடன் நாட்டின் SVT மற்றும் இதர 2 செய்தி தளங்களும் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஸ்கேனியா நிறுவனம்
ஸ்கேனியா நிறுவனத்திற்கு வர்த்தகம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தது மட்டும் அல்லாமல், வர்த்தகக் கூட்டாளிகளின் வாயிலாக லஞ்சம், முறையற்ற தகவல்கள் பதிவு எனப் பல முறைகேடுகளைச் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஊழியர்கள் வெளியேறினர்
மேலும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தற்போது நிறுவனத்தை விட்டு வெளியேறி உள்ளதாகவும் தெரிகிறது. இந்த முறைகேட்டில் முக்கியமாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடர்புடைய நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட ஒரு ஸ்பெஷலான பஸ்-க்கு முழுமையான தொகை பெறப்படவில்லை என்றும் இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நித்தின் கட்கரி அலுவலகம்
இந்நிலையில் இந்தப் பஸ் வாங்கியதற்கும், அதற்கான வர்த்தகப் பரிமாற்றத்திற்கும் நித்தின் கட்கரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது கட்கரி அலுவலகம்.