சர்வதேச கிரிப்டோகரன்சி சந்தையில் முன்னணி கிரிப்டோக்கள் அனைத்தும் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இந்தப் பெரும் சரிவுக்கு முதலும் முக்கியக் காரணமாக அமைந்தது ஸ்டேபிள்காயின் ஆன டெரா-வின் வீழ்ச்சி தான்.
அமெரிக்க டாலருக்கு இணையான மதிப்புக் கொண்ட டெராகாயின் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து ஸ்டேபிள்காயின் மீது இருக்கும் மதிப்பை மொத்தமாகக் கீழே தள்ளியது.
இந்நிலையில் இந்த டெரா கிரிப்டோகாயினை உருவாக்கிய நிறுவனத்தின் அதிகாரிகளை வெளிநாடுகளுக்குச் செல்ல தடை விதித்துள்ளது.

டெராUSD
டெராUSD என்னும் கிரிப்டோகரன்சியை உருவாக்கிய தென் கொரிய நாட்டைச் சேர்ந்த டெராபார்ம்ஸ் லேப்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளை அந்நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் டெரா மற்றும் அதன் இணை கிரிப்டோவான லூனா மிகப்பெரிய சரிவை பதிவு செய்து கிரிப்டோ சந்தையை மொத்தமாகப் புரட்டிப்போட்டது.

டாலர் மதிப்பு
இந்தச் சரிவுக்குப் பின்பு ரீடைல் முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் பெரும் முதலீட்டாளர்களும் மொத்தமாக விற்பனை செய்து விட்டு வெளியேறினர். இதனால் இதன் மதிப்பு மளமளவெனச் சரிந்ததது அமெரிக்கா டாலருக்கும் டெரா USD-ம் 1:1 ஆக மதிப்பிடப்பட்ட நிலையில் தற்போது வெறும் 00.008443 டாலராக உள்ளது.

தென் கொரியா
தென் கொரியாவின் உச்ச வழக்குரைஞர்கள் அலுவலகத்தைச் சேர்ந்த சில மூத்த அதிகாரிகள் கூறுகையில் டெராபார்ம்ஸ் லேப்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் வெளிநாட்டுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதேபோல் இந்நிறுவன அதிகாரிகள் மத்தியில் செய்யப்பட்ட விசாரணை முடிவுகளை இப்போதைக்கு வெளியிட முடியாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

நஷ்டம்
டெராUSD காயின் வீழ்ச்சியின் மூலம் ஏற்பட்ட நஷ்டம் அமெரிக்காவின் முன்னணி கிரிப்டோ வர்த்தகத் தளமான செல்ஷியஸ் மாட்டிக்கொண்டு இருக்கிறது. இதோடு சிங்கப்பூர் நாட்டின் முன்னணி கிரிப்டோ ஹெட்ஜ் பண்ட் நிறுவனமான THREE ARROWS CAPITAL-ம் இதில் சிக்கியுள்ளது. சமீபத்தில் கிரிப்டோகரன்சியில் முன்னணி நாணயமாக விளங்கும் பிட்காயின் 17,500 டாலருக்குக் கீழ் சரிந்து மீண்டும் 20000 டாலர் அளவீட்டைத் தொட்டது.

பிட்காயின்
பிட்காயின் வீழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீட்டாளர்களும் அச்சத்தில் உள்ளனர். இதேவேளையில் இந்திய அரசு இன்னும் கிரிப்டோ கொள்கையை அறிவிக்காத நிலையில் இந்திய முதலீட்டாளர்கள் அதிகப்படியான கவனத்துடன் செயல்படும் நிலை உருவாகியுள்ளது. இன்று பிட்காயின் விலை 2.19 சதவீதம் அதிகரித்து 21,042.59 டாலராக உள்ளது.