இந்தியாவின் முன்னணி பட்ஜெட் விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் 2020ல் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காரணத்தால் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்த நிலையில், தற்போது உள்நாட்டு விமானச் சேவையில் சுமார் 21 புதிய வழித்தடத்திலும், வெளிநாட்டு விமானச் சேவையையும் வருகிற ஜனவரி 12ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.
ஸ்பைஸ்ஜெட் இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை நாடு முழுவதும் விமானம் வாயிலாக விநியோகம் செய்ய மத்திய அரசுடன் இணைந்துள்ள நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவை விரிவாக்கத்தின் மூலம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற உள்ளது.
இந்தியாவில் மீண்டும் ஊழியர்கள் பணிநீக்கம்.. காத்திருக்கும் அபாயம்.. மக்களே உஷார்..!

ஸ்பைஸ்ஜெட் சேவை விரிவாக்கம்
கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வரும் நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் புதிதாக வாரத்தில் இரண்டு முறை மும்பை முதல் ரஸ் அல் கைமா-வுக்கும், டெல்லி முதல் ரஸ் அல் கைமா வாரத்தில் 4 முறை சேவை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரபு நாடுகளுக்குச் செல்லும் இந்திய வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஒடிசா மாநிலம்
மேலும் உள்நாட்டில் மும்பை, பெங்களூரில் இருந்து ஒடிசா மாநிலத்தின் ஜூர்சுகுடா பகுதிக்குப் புதிதாக வழித்தடத்தில் விமானச் சேவை வழங்க உள்ளது. இதுமட்டும் அல்லாமல் டெல்லி - ஜூர்சுகுடா பகுதிக்கு இதுவரை Q400 ரகச் சிறிய விமானத்தைப் பயன்படுத்தி வந்த நிலையில், இனி போயிங் 737 விமானத்தை இயக்க உள்ளதாக முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒடிசா மாநிலத்தில் இருந்து அதிக வாடிக்கையாளர்களை ஸ்பைஸ்ஜெட் பெற முடியும்.

ஹைதராபாத் தினசரி சேவை
இதோடு தென் மாநிலத்தில் தனது சேவை எண்ணிக்கையும், ஆதிக்கத்தையும் அதிகரிக்க ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம், திருப்பதி, விஜயவாடா ஆகிய பகுதிகளுக்குத் தினசரி விமானச் சேவை அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் திடீர் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் ஸ்பைஸ்ஜெட் சேவையை எளிதாகப் பெற முடியும்.

80 சதவீத பயணிகள்
இந்தியாவில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு மாத இடைவேளைக்குப் பின் மே 25ஆம் தேதி முதல் விமானச் சேவையைத் துவங்கியது ஸ்பைஸ்ஜெட். தற்போது இந்திய விமானங்களில் சுமார் 80 சதவீத பயணிகளைக் கொண்டு விமானச் சேவை அளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் மாதம்
நவம்பர் மாதம் இந்திய விமானங்களில் சுமார் 63.54 லட்சம் பேர் உள்நாட்டு விமானச் சேவையில் பயணித்துள்ளனர். இதில் 34.23 லட்சம் பேர் இண்டிகோ நிறுவனத்திலும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 8.4 லட்சம் பேரும் பயணித்துள்ளனர்.