இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனமான சன் பார்மா கொரோனா பாதிப்பு அதிகமாகக் காலத்தில் இருந்தே அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. இதன் எதிரொலியாகச் செப்டம்பர் காலாண்டு முடிவில் சன் பார்மாவின் லாபம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்குச் சுமார் 70 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
கொரோனா காலத்தில் பார்மா துறை நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தையும் வருமானத்தையும் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாகக் கொரோனாவுக்கான மருந்து தயாரிப்பிலும், கண்டுபிடிப்பு முயற்சியில் இருக்கும் நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சன் பார்மா இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் வர்த்தகம் செய்யும் காரணத்தால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடனில் குடும்பத்தை நடத்தும் இந்திய மக்கள்.. கொரோனாவின் கொடூரம்..!

லாபம்
செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் சன் பார்மா நிறுவனத்தின் லாபம் 70.4 சதவீதம் அதிகரித்துச் சுமார் 1,812.79 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் சன் பார்மா வெறும் 1,064.09 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருவாய்
சன் பார்மா நிறுவனத்தின் லாபம் 70 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் வருவாய் வெறும் 5.29 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டுச் செப்டம்பர் காலாண்டில் 8,123.35 கோடி ரூபாய் வருவாயைப் பெற்ற சன்பார்மா 2020ல் 8,553.13 கோடி ரூபாய் அளவிலான வருவாய்-ஐ பெற்றுள்ளது.

வரிச் சேமிப்பு
இக்காலாண்டில் சன்பார்மாகப் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கையின் மூலம் வரிச் சேமிப்புச் சொத்துக்களைச் சேர்ந்துள்ளது. இதன் மூலம் இக்காலாண்டில் சன் பார்மா சுமார் 288.28 கோடி ரூபாய் அளவிலான வரியைச் சேமித்து லாபமாக மாற்றப்பட்டுள்ளது எனச் சன் பார்மா தெரிவித்துள்ளது.

வர்த்தக ஆய்வுகள்
மேலும் கொரோனாவால் பல வர்த்தகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து கவனித்துச் சீர்செய்யும் பணியில் சன் பார்மா நிர்வாகம் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதோடு இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர், விநியோக சங்கிலி, ஊழியர்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் போன்றவற்றையும் ஆய்வு செய்து வருவதாக சன் பார்மா தெரிவித்துள்ளது.

பங்குச்சந்தை
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் சன் பார்மா வர்த்தகம் முடியும் நேரத்தில் சுமார் 3.85 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாகப் புதன்கிழமை வர்த்தகத்திலும் சன் பார்மா சிறப்பான வர்த்தக வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.