உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான போர்டு மோட்டார்ஸ் சில மாதங்களுக்கு முன்பு வர்த்தகம் குறைந்த காரணத்தாலும், அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு வரும் காரணத்தால் சென்னை மற்றும் குஜராத்தில் இருக்கும் இரு தொழிற்சாலைகளைப் படிப்படியாக உற்பத்தியைக் குறைத்து விட்டு தொழிற்சாலைகளை மொத்தமாகத் மூட திட்டமிட்டது.
இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் வேலைவாய்ப்பு இழக்கும் நிலை இருந்தது, இந்த நிலையைச் சமாளிக்கத் தமிழ்நாடு அரசு போர்டு மோட்டார்ஸ் சென்னை தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தமிழ்நாட்டில் போர்டு நிறுவனத்திற்கு இருக்கும் சப்ளையர்கள் உடன் ஆலோசனை செய்து மாற்று வழிகளைத் தேடி வந்தது.
கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் ஷாக்.. ஜூலை 1 முதல் 1% TDS வரி விதிப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..!

அமெரிக்க அரசு
இந்த நிலையில் தான் அமெரிக்க அரசின் ஆதரவு போர்டு நிறுவனத்திற்குக் கிடைத்தது. அதன் மூலம் டெஸ்லாவுக்கு இணையாக எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது போர்டு.
இதையடுத்து தமிழ்நாடு அரசு போர்டு மோட்டார்ஸ் நிர்வாகத்துடன் மிக முக்கியமான பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது.

போர்டு நிறுவனம்
போர்டு நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்காகச் சுமார் 30 பில்லியன் டாலரை முதலீடு செய்வதாக அறிவித்திருந்த நிலையில், 2026ஆம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்வதாகப் போர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஜிம் பார்லே தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு
இதைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் போர்டு தொழிற்சாலையை மூடாமல் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புக்கும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கும் திட்டம் குறித்துத் தமிழ்நாடு அரசு போர்டு மோட்டார்ஸ் உடன் ஆலோசனை நடத்தியும், வாய்ப்புகளை விளக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2 பில்லியன் டாலர் நஷ்டம்
போர்டு நிறுவனம் 2 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்ட காரணத்தால் தான் இந்திய தொழிற்சாலைகளை மூடுவதாக அறிவித்தது. ஆனால் தற்போது எலக்ட்ரிக் வாகன கனவு திட்டத்திற்கு 50 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்ய உள்ள நிலையில் இந்தியாவை எலக்ட்ரிக் வாகன உற்பத்தி ஹப் ஆக மாற்றும் திட்டமும் போர்டு நிர்வாகத்திற்கு உள்ளது.

டாடா மோட்டார்ஸ்
இதற்கிடையில் மூடப்படும் கார் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் கைப்பற்ற திட்டமிட்டது. முதலில் சென்னை மற்றும் குஜராத் ஆகிய இரு தொழிற்சாலைகளையும் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடந்ததாகத் தகவல் வெளியானது.

குஜராத் தொழிற்சாலை
ஆனால் போர்டு நிறுவனத்தின் EV திட்டம் அறிவிக்கப்பட்ட உடன் குஜராத் தொழிற்சாலை மட்டுமே டாடா கைப்பற்ற முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை குறித்து இரு தரப்பு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

ஊழியர்கள் எதிர்பார்ப்பு
போர்டு நிறுவனத்திற்கு EV பிரிவில் மிகப்பெரிய கனவு இருக்கும் நிலையில் தமிழக அரசின் பேச்சுவார்த்தை கட்டாயம் வெற்றி பெறும். இதன் மூலம் சென்னை போர்டு தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களுக்கு வேலை காப்பாற்றப்பட வேண்டும் என்பது தான் முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ளது. இதோடு எலக்ட்ரிக் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கியமான வர்த்தகத்தையும் தமிழ்நாடு பெறும்.