இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் தீ பிடித்து எறிந்தாலும் மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது இருக்கும் மோகம் சற்றும் குறையவில்லை என்று தான் கூற வேண்டும். இதற்கு முக்கியக் காரணம் எலக்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் தான் பிரச்சனை என மக்கள் புரிந்துகொண்டனர்.
அனைத்திற்கும் மேலாகப் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்திருக்கும் நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே தீர்வாக உள்ளது.
இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் மிகவும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு டெஸ்லா கார்களுக்குப் போட்டியை உருவாக்கியுள்ளது.

எலக்ட்ரிக் கார்
இந்தியாவில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் டாடா மோட்டார்ஸ் புதிதாக ஒரு காரை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை டாடா குழுமம் அதன் கான்செப்ட் மாடலை, அதன் பெயர் மற்றும் சிறப்பம்சத்தை அறிவித்து டெஸ்லா எலான் மஸ்க் தூக்கத்தைக் கெடுத்துள்ளது.

டாடா அவின்யா
டாடா மோட்டார்ஸ் அதன் எலக்ட்ரிக் வாகன பயணத்தில் முதல் கட்ட தயாரிப்பும் விற்பனையில் வெற்றி அடைந்து வரும் நிலையில் அடுத்த கட்டத்திற்கு நகர முடிவு செய்துள்ளது. இதன் படி டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி (TPEM) பிரிவு வெள்ளிக்கிழமை 3ஆம் தலைமுறை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் 100% எலக்ட்ரிக் காரான ‘அவின்யா கான்செப்ட்' மாடலை அறிமுகம் செய்துள்ளது.

சமஸ்கிருத மொழி
சமஸ்கிருத மொழியில் ‘புதுமை' என்பதற்கு இணையான பெயரான அவின்யா-வை தேர்வு செய்து இப்புதிய காருக்கு பெயர் சூட்டியுள்ளது டாடா மோட்டார்ஸ். இது கார் புதிய ஆட்டோமொபைல் தொழில்நுட்பம், மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிரம்பியுள்ளது, மேலும் பயணத்தில் அதிகப்படியான மற்றும் மேம்படுத்தப்பட்ட அனுபவத்தைப் பயணிகளுக்கும், ஓட்டுநர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இயங்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

500 கிலோமீட்டர்
இப்புதிய டாடா அவின்யா கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரையில் பயணிக்கக் கூடத் திறன் கொண்டதாகவும், இந்தக் காரில் டெஸ்லா தயாரிப்பில் இருப்பது போலவே இரண்டு மோட்டார்கள் கொண்டு இருக்கும் வகையில் தயாரிக்கப்பட உள்ளது. மேலும் இந்தக் கார 2025ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது டாடா.