இந்திய விமானப் போக்குவரத்துத் துறை லாக்டவுன் காரணமாக அதிகளவிலான வர்த்தகத்தை இழந்துள்ளது மட்டும் அல்லாமல் வெளிநாட்டு விமானப் பயணங்கள் எண்ணிக்கையும், அதன் மூலம் கிடைக்கும் வர்த்தகமும் 80 முதல் 90 சதவீதம் குறைந்துள்ளது.
இந்த நிலை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகில் பெரும்பாலான நாடுகளில் நிலவுகிறது. குறிப்பாக விமானப் போக்குவரத்தை அதிகம் நம்பியிருக்கும் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, அரபு நாடுகள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் மோசமான வர்த்தக நிலையை அடைந்துள்ளது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் டாடா குழுமம் ஒரு மாஸ்டர் பிளான் போட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து சந்தை
உலகளாவிய விமானப் போக்குவரத்து சந்தை மிகவும் மோசமான நிலையில் இருக்கும் போது, எதிர்கால வர்த்தக வளர்ச்சிக்குத் திட்டமிட்டு தனது விமானப் போக்குவரத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து அதிரடியாய் களமிறங்கியுள்ளது.
இதன் படி யாரும் எதிர்பார்க்காத விலையில் ஏர் ஏசியா பங்குகளை டாடா கைப்பற்றியுள்ளது.

20 சதவீத தள்ளுபடி விலை
இந்தியாவில் டாடா மற்றும் மலேசியாவின் ஏர் ஏசியா கூட்டணியில் உருவாக்கப்பட்ட ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் ஏர் ஏசியாவில் 32.67 சதவீத பங்குகளைச் சுமார் 20 சதவீத தள்ளுபடி விலையில் டாடா குழுமத்தின் நிர்வாகத் தலைமை நிறுவனமான டாடா சன்ஸ் வெறும் 276 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் ஏர் ஏசியா நிறுவனத்தில் டாடா குழுமத்தின் பங்கு அளவு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் பங்குகள்
கொரோனா பாதிப்பால் இந்திய விமானப் போக்குவரத்து சேவை முடங்கியிருந்தாலும், கொரோனா பாதிப்பு நிறைந்த 2020ல் மார்ச் சரிவுக்குப் பின் இந்தியப் பங்குச்சந்தையில் இருக்கும் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் மதிப்பு இரண்டு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள அதிரடி வளர்ச்சியும், அதிகளவில் புதிய வாடிக்கையாளர்களையும் பெற்றது தான்.

ஏர் ஏசியா நிலை
ஏர் ஏசியா நிறுவனம் கொரோனாவுக்கு முன்பே அதிகளவிலான நிதி நெருக்கடியிலும், வர்த்தகப் பாதிப்பிலும் இருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்திற்குப் பின் இந்நிறுவனத்தின் நிலைமை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

விற்பனை செய்ய முடிவு
எனவே நிதி சுமையைக் குறைக்கும் விதமாகவும், இந்திய சந்தையில் கூடுதல் முதலீடு செய்ய முடியாத காரணத்திற்காகவும் 20 சதவீத தள்ளுபடி விலைக்கு ஏர் ஏசியா இந்திய வர்த்தகத்தில் தனது பங்குகளை டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது.

ஏர் இந்தியா திட்டம்
இதேவேளையில் டாடா குழுமம் கடனில் சிக்கித்தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தையும் கைப்பற்ற விருப்ப விண்ணப்பம் அளித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்ற அதிகளவிலான வாய்ப்புகள் டாடாவிற்கு இருக்கும் நிலையில், இந்திய விமானப் போக்குவரத்தில் புதிய அத்தியாயத்தைப் படைக்க உள்ளது டாடா.

டாடா ஆதிக்கம்
ஏற்கனவே டாடா குழுமத்தின் கீழ் விமான போக்குவரத்து சேவையின் கீழ் விஸ்தாரா, ஏர் ஏசியா இருக்கும் நிலையில், தற்போது ஏர் இந்தியா-வில் கூடுதல் பங்குகளையும், ஏர் இந்தியா-வை கைப்பற்றும் நிலையிலும் டாடா உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றினால் இந்திய விமான போக்குவரத்து சந்தையில் டாடாவின் சந்தை பங்கீடு 40 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவுக்கு முன்
கொரோனாவுக்கு முன் உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துச் சந்தையில் இந்தியா டாப் 5 இடத்தில் இருந்தது. இந்தியாவில் இன்னமும் பெரு நகரங்களை மட்டுமே விமானச் சேவை இணைத்து வரும் நிலையில் அடுத்த சில வருடத்தில் சிறு மற்றும் குறு விமான நிலையங்களை இணைக்கும் மாபெரும் வர்த்தக வாய்ப்புகள் உள்ளது.
இதனால் டாடாவிற்கு மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளது.