இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதியாளரான டிசிஎஸ் நிறுவனம், இரண்டாவது காலாண்டில் வலுவான முடிவுகளை அறிவித்துள்ளது.
இது மற்ற ஐடி நிறுவனங்களின் வருவாய் எதிபார்ப்பினையும் உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனம் தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டில் டாலர் வருவாய் வளர்ச்சியினை 7.2% ஆக பதிவு செய்துள்ளது.
மூன்றாவது நாளாக தொடர் சரிவில் தங்கம் விலை! இப்ப தங்கம் வாங்கலாமா? எப்போது எவ்வளவு அதிகரிக்கும்?

ஒப்பந்தமும் அதிகரிப்பு
இதே நிலையான நாணய மதிப்பின் அடிப்படையில் வளர்ச்சி 4.8 சதவீத பதிவு செய்துள்ளது. இதே செயல்பாட்டு மூலதனம் 26.2% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டினை விட 290 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும். அதோடு கடந்த காலாண்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு 8.6 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. ஆக இது தேவை அதிகரிப்பினையே சுட்டி காட்டுகின்றது. .

இடைக்கால டிவிடெண்ட்
டிசிஎஸ் நிறுவனம் கடந்த காலாண்டில் 7000 புதியவர்கள் உட்பட, 9,864 பேரை பணிக்கு சேர்த்தது. அதோடு இந்த நிறுவனம் 1.42 சதவீதம் பங்குகளை திரும்ப பெற உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு 16,000 கோடிக்கு மிகாமல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக இந்த நிறுவனம் இடைக்கால டிவிடெண்டாக, ஒரு பங்குக்கு 12 ரூபாய் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இரண்டாவது காலாண்டில் நிகரலாபம்
கொரோனாவிற்கு மத்தியிலும் இந்த நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு நிகர லாபம் 6.6% அதிகரித்து 7,475 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ப்ளூம்பெர்க் நிபுணர்கள் இந்த லாபத்தினை 7,946 கோடி ரூபாயாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே இதன் வருவாய் கடந்த காலாண்டினை விட 4.73% அதிகரித்து, 40,135 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் செலவு அதிகரிப்பு
கொரோனா தொற்று நோயினால் ஐடி நிறுவனங்களின் செலவினங்கள் அதிகரித்துள்ளன. ஏனெனில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இதனால் செயல்பாடுகள் மிக கடினமாகியுள்ளது. குறிப்பாக கம்யூனிகேஷன் உள்ளிட்ட பல செலவினங்கள் அதிகரித்துள்ளன. எனினும் ஒப்பந்தங்கள் அதிகரித்துள்ளதால், அது பெரிய அளவில் எதிரொலிக்கவில்லை.

மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி எப்படி இருக்கும்?
இதற்கிடையில் அடுத்து வரும் மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி சீரானதாக இருக்கும் என்றும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கூறியுள்ளார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கிட்டதட்ட 5% அதிகரித்து, 2,869.25 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இன்று மட்டும் இதன் பங்கு விலையானது 130 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.