உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் வெகு வேகமாக பரவி வரும் நிலையிலும், மறுபுறம் சத்தமேயில்லாமல் சாதனை படைத்து வருகின்றது ஐடி துறை.
சொல்லப்போனால் சாதாரணமான காலத்தினை விட, இந்த கொரோனா காலத்தில் ஐடி நிறுவனங்கள் பல சாதனைகளை கண்டுள்ளன. ஏனெனில் மற்ற துறைகள் வளர்ச்சியில் இருந்து சரிவு பாதைக்கு சென்று கொண்டுள்ளன.
ஆனால் ஐடி துறையோ, படிப்படியாக ஏற்றம் கண்டு வருகின்றது. குறிப்பாக டிஜிட்டல் வளர்ச்சி, கிளவுட் சேவை, சைபர் செக்யூரிட்டி என பல துறைகளும் புத்துயிர் பெற்று வருகின்றன.

ஐடி பங்குகள் 52 வார உச்சம்
குறிப்பாக இந்தியாவின் முன்னனி ஐடி நிறுவனங்களாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள், 52 வார உச்சத்தினை தொட்டுள்ளன. இந்த நெருக்கடியான நேரத்தில் இதன் பங்குகள் இப்படி ஏற்றம் கண்டு வருகின்றனவே என்ன காரணம்? வாருங்கள் பார்க்கலாம்.

வளர்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு
முன்னணி ஐடி நிறுவனங்கள், இந்த கொரோனா காலத்திலும் பல புதிய ஒப்பந்தங்களை செய்துள்ளன. இதனை ஏற்கனவே பல கட்டுரைகளிலும் படித்துள்ளோம். இதன் காரணமாக ஐடி துறையில் அடுத்து வரும் காலாண்டுகளிலும் வளர்ச்சி நன்றாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஐடி நிறுவனங்களும் வெளிப்படையாகவே கூறி வருகின்றன.

பல வாய்ப்புகள்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். இந்த தளர்வுகளே தற்போது பல வாய்ப்புகளை ஐடி துறைக்கு உருவாக்கி கொடுத்துள்ளது. குறிப்பாக புதிய ஆஃப் டெவலப்பிங், சைபர் செக்யூரிட்டி, டிஜிட்டல் சேவைகள் என பலவும் வளர்ச்சி கண்டுள்ளன.

வளர்ச்சி அதிகரிக்கலாம்
இதன் காரணமாக ஐடி துறையில் அடுத்து வரும் காலண்டுகளிலும் வளர்ச்சி அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்களின் வருவாயும் அதிகரிக்கும் என்று முதலீட்டாளர்கள் மத்தியில் உணர்வுகள் அதிகரித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் ஐடி பங்குகளில் முதலீடுகளை செய்து வருகின்றன. இதன் காரணமாக ஐடி பங்குகள் தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகின்றன. இதனால் பிஎஸ்இ ஐடி பங்குகள் 1.6% இன்று ஏற்றம் கண்டுள்ளது.