ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக ரியல்மி உருவெடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு நிறைந்த செப்டம்பர் காலாண்டின் உலக நாடுகளின் வர்த்தகம் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வந்த நிலையிலும் ரியல்மி புதிதாகப் பல கோடி வாடிக்கையாளர்கள் பெற்று அசத்தியுள்ளது.
செப்டம்பர் காலாண்டில் ரியல்மி சுமார் 50 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனைக்காக அனுப்பி அசத்தியுள்ளது. இந்த அளவீடு கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 45 சதவீதம் அதிகமாகவும். 2020ஆம் ஆண்டின் 2வது காலாண்டை ஒப்பிடுகையில் 132 சதவீத வளர்ச்சியும் அடைந்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் ரியல்மி நிறுவனத்தின் வர்த்தகம் சுமார் 300 சதவீதம் வளர்ச்சி அடைந்து சுமார் 15 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ளது.

உலகளவில் மாஸ்
ஒரு நிறுவனம் துவங்கப்பட்டு 50 மில்லியன் ஸ்மார்ட்போன் விற்பனைக்காக அனுப்புவது என்பது முக்கியமான மைல்கல். இந்த மைல்கல்-ஐ ரியல்மி மிகவும் குறுகிய காலகட்டத்தில் அடைந்து சாதனை படைத்து world's fastest brand என்ற பெயரைப் பெற்றுள்ளது.

வெற்றி காரணம்
ரியல்மி மிட் மற்றும் பட்ஜெட் போன்கள் பிரிவில் அதிகளவில் கவனத்தைச் செலுத்துகிறது. ஏற்கனவே இப்பிரிவில் பல நிறுவனங்கள் இருந்த போதிலும் ரியல்மி தனது ஸ்மார்ட்போன் தரத்தின் காரணமாக அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
இந்திய சந்தைக்குள் நுழைந்த சில வருடத்திலேயே விவோ இடத்திற்கு மிகப்பெரிய போட்டியாகத் திகழ்கிறது ரியல்மி.

கொரோனா காலம்
ரியல்மி கொரோனா காலத்திலும் எவ்விதமான தடையும் வர்த்தகச் சரிவு குறித்த பயமும் இல்லாமல் ரியல்மி 6, 6 ப்ரோ, 6ஐ சீரியஸ், ரியல்மி எக்ஸ்3, எக்ஸ்3 சூப்பர்ஜூம், நார்சோ சீரியஸ் போன்கள், ரியல்மி சி சீரியஸ் போன்கள் என அடுத்தடுத்துப் போன்களை அறிமுகம் செய்து அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

தென்கிழக்கு சந்தை
ரியல்மி தென்கிழக்குப் பகுதியில் கடந்த வருடத்தை விடவும் சுமார் 196 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாகப் பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் முன்னணி பிராண்டாக ரியல்மி உள்ளது.
இதேபோல் ஐரோப்பியச் சந்தையில் பெரிய அளவிலான விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வரும் ரியல்மி, ரஷ்யாவில் டாப் 5 பிராண்டுகளின் பட்டியலில் வருகிறது.

5ஜி போன்கள்
மேலும் சீனாவில் ரியல்மி தற்போது பட்ஜெட் 5ஜி போன்களைத் தயாரிப்பது அதன் மூலம் வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றவும் திட்டமிட்டு வருகிறது. சீனாவில் தற்போது 5ஜி போன்களுக்கு மாபெரும் வர்த்தக வாய்ப்பு உருவாகியுள்ளது. இதைக் கைப்பற்ற பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வரும் நிலையில் பட்ஜெட் விலை போன்கள் மூலம் ரியல்மி இச்சந்தை கைப்பற்ற திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் 5ஜி போன்
ரியல்மி நிறுவனத்தின் சீன திட்டம் வெற்றி அடைந்தால் இந்தியாவில் 5ஜி சேவை துவங்குவதற்கு முன் 5ஜி போன்களை இந்தியாவில் விற்பனை செய்ய ரியல்மி தயாராக உள்ளது.

இந்திய சந்தை
செப்டம்பர் காலாண்டில் சீனா, அமெரிக்காவைப் போலவே இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செபம்டபர் மாத துவக்கத்தில் அதிகளவிலான ஸ்மார்ட்போன் விற்பனை ஆன காரணத்தால் ஒரு இலக்கு வளர்ச்சி அடையும் IDC ஆய்வு நிறுவனம் கணித்திருந்தது.
ஆனால் கணிப்புகளை உடைத்து இந்தியச் சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனை 17 சதவீதம் வளர்ச்சி அடைந்து அசத்தியுள்ளது.

சியோமி அசத்தல்
இந்தச் செப்டம்பர் காலாண்டில் சியோமி நிறுவனம் சுமார் 25 சதவீத விற்பனை சந்தையைக் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளது. சீனா எதிர்ப்புகளால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட சியோமி மக்கள் மத்தியில் இன்னமும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிறுவனத்தின் பட்ஜெட் விலை போன்கள் மக்களின் பொருளாதார நிலைக்கு மிகவும் ஏற்றதாக உள்ள காரணத்தால் சியோமி அதிகளவிலான போன்களை விற்று தொடர்ந்து புதிய ஆர்டர்களைக் கைப்பற்றி வருகிறது.

சியோமி Vs ரியல்மி
இந்தியாவில் ரியல்மி மிகவும் குறைந்த காலகட்டத்தில் 15 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ள நிலையில் சியோமி 25 சதவீத சந்தையை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
சுமார் 300 சதவீத காலாண்டு வளர்ச்சியை அடைந்து வரும் ரியல்மி அடுத்த சில காலாண்டுகளில் பிற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை ஓரம்கட்டிவிட்டு சியோமி உடன் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.