இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏற்றுமதியில் முதலிடம், 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பதே தமிழ்நாட்டின் இலக்கு என பேசியுள்ளார்.
விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 2020-2021 நிதியாண்டில் 1.93 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியைச் செய்து தமிழ்நாடு மூன்றாமிடத்தில் பிடித்துள்ளது என்பதைச் சொல்ல எனக்கு பெருமையாக உள்ளது.
பாமாயில் ஏற்றுமதி வரியை 50% குறைக்கும் மலேசியா, இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறையுமா?

ஏற்றுமதி
தமிழ்நாட்டின் இந்த ஏற்றுமதி ஒட்டுமொத்த நாட்டின் ஏற்றுமதியில் 8.97 சதவீதம். இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதியில் இந்திய மாநிலங்களில் தமிழகத்தை முதலிடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த அரசின் விருப்பமும், எனது லட்சியமும் ஆகும்.

100 பில்லியன் டாலர்
இப்போது தமிழ்நாட்டின் ஏற்றுமதி 26 பில்லியன் டாலராக உள்ளது. அதை 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக அதிகரிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு ஏற்றுமதி மிகவும் முக்கியமானது. தற்போது, இந்தியாவின் ஏற்றுமதியில் தென் மண்டலம் சுமார் 27 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. ஐந்தாண்டுகளில் இது 35 சதவீதமாக அதிகரிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்

ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு
மத்திய அரசின் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தை, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தப்படுவதை இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு உறுதி செய்ய வேண்டும்.

புவிசார் குறியீடுகள்
தமிழ்நாட்டின் தனித்தன்மையாகத் தஞ்சாவூர் ஓவியங்கள், கோயம்புத்தூர் கோட்டா பருத்தி புடவை, கோவில்பட்டி கடலை மிட்டாய்கள், சேலம் பட்டு, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, பழனி பஞ்சாமிர்தம் என 48 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் உள்ளன. இந்த தயாரிப்புகளுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இலக்கும் முதலீடுகளும்
தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பதையே இலக்காக வைத்துச் செயல்பட்டு வருவதாகக் கூறும் முதல்வர் ஸ்டாலின், அண்மையில் துபாய் சென்று பல்வேறு முதலீடு ஈர்த்து வந்தார். தொடர்ந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குத் சுற்றுப்பயணம் சென்று அங்குள்ள முதலீடுகளை ஈர்க்க உள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

வளர்ச்சிப் பாதை
2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்க ஆண்டுக்கு 13 முதல் 13.5 சதவீத வளர்ச்சி தேவை. திமுக தலைமையிலான அரசின் முதல் ஆண்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி 14.5 சதவீதமாக உள்ளது என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் தெரிவித்திருந்தார்.