பெங்களூர்: பெங்களூரில் கொட்டும் மழையிலும் கடமையை செய்ய டிராக்டரில் பயணித்த ஐடி ஊழியர்கள் நிலையை பார்க்க முடிகிறது.
போக்குவரத்து நெரிசல் என்பது சற்று சலூப்பூட்டுவதாக இருந்தாலும், அதன் இதமான கால நிலை பலரையும் ஈர்க்கும் ஒன்றாகவே பெங்களூரு டெக் சிட்டி இருந்து வருகின்றது.
ஆனால் கடந்த சில தினங்களாகவே அது சலிப்பூட்டுவதாக இருந்து வருகின்றது. பல முக்கிய வழித்தடங்களும் வெள்ளக்காடாய் மாறியுள்ள நிலையில், ஊழியர்கள் அலுவலகங்களுக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

டிராக்டரில் பணிக்கு சென்ற CEO
பல ஐடி நிறுவன ஊழியர்களும் டிராக்டரில் பணிக்கு செல்லும் நிலையை சமூக வலைதளங்களில் காண முடிகிறது. பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணி புரிய அனுமதி கொடுத்திருந்தாலும், சிலர் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இது குறித்து ரோனி ஸ்க்ரூவாலாவின் அப்கிரேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அர்ஜுன் மோகன், மணி கண்ட்ரோலுக்கு அளித்த பேட்டியில் அலுவலகத்திற்கு செல்ல டிராக்டரில் லிஃப்ட் கேட்க வேண்டியிருந்ததாக தெரிவித்துள்ளார்.

நடந்து செல்லலாம்
மேலும் அவர் இருக்கும் பகுதியில் நிறைய கட்டுமான பணிகள் நடந்து வரும் சூழலில், அங்கு தண்ணீர் அதிகளவில் மோசமாக தேங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த வாரத்திலேயே இது இரண்டாவது முறை. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. ஒருவர் வண்டியில் செல்வதை காட்டிலும், நடந்து சென்றால் கூட அலுவலகத்திற்கு விரைவில் சென்று விடலாம். அந்தளவுக்கு மோசமான நிலை உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஸ்டார்ட் அப்களுக்கும் பிரச்சனை
மோசமான உள்கட்டமைப்புக்கு மத்தியில் இந்தியாவின் சிலிக்கான் வாலி மோசமான பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. இந்த பிரச்சனைகளால் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த ஸ்டார்ட் அப்கள் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றன. பெங்களூரில் பெரும்பாலான ஸ்டார்ட் அப்கள் தங்களது அலுவலகங்களை பெல்லந்தூர் மற்றும் ஏமலூர் போன்ற பகுதிகளில் நிறுவியுள்ளன.

வீட்டில் இருந்து பணி
அந்த பகுதிகள் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் வெள்ளம் வடியும் வரையில் வீட்டில் இருந்து பணிபுரிய கூறியுள்ளன. எனினும் ஒரு சிலர் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நிலையை பார்க்க முடிகிறது. தங்களது அலுவலகத்திற்கு செல்ல சாதாரணமான நேரத்தினை விட கூடுதலாக 2 - 3 மணி நேரம் அதிகம் ஆகிறது.

ஸ்டார்ட் அப்களின் மையம்
நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் மையங்களின் மையமாகவும், நாட்டின் 105 யூனிகார்ன்களில் 40 யூனிகார்ங்களின் மையமாகவும் பெங்களூரு உள்ளது. இப்படி இருக்கும் சூழலில் இங்கு எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனத்த மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்த சூழலில் தான் ஐடி ஊழியர்கள் வேறு வழியின்றி டிராக்டர்களில் 50 ரூபாய் கட்டணம் கொடுத்து பணிக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.