நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே விமான நிறுவனங்களுக்கு சற்று பின்னடைவு தான். இந்த பின்னடைவை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக கொரோனாவும் தொடர்ந்து வந்தது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக லாக்டவுனும் நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது.
தற்போது லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்தாலும், பெரும்பாலான விமானங்கள் இயக்க தடையே நீடித்து வருகிறது. குறிப்பாக அண்டை நாடுகளுக்கு செல்லும் விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பின்னடைவை சந்தித்த நிறுவனங்கள்
இதற்கிடையில் தான் விமான நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தினையும் கண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக விஸ்டாரா நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரையில் சம்பள குறைப்பு செய்துள்ளதாகவும், இது நடப்பு ஆண்டு டிசம்பர் வரை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த சம்பள குறைப்பானது 40 சதவீத ஊழியர்களுக்கு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்ன காரணம்
மேலும் இந்த சம்பள குறைப்புக்கு காரணம், கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கனே என்றும் இந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
விஸ்டாரா நிறுவனம் தற்போது அதன் முழு சேவையில் 4,000 ஊழியர்களைக் கொண்டுள்ள நிலையில், எங்கள் ஊழியர்களில் சுமார் 60% பேர் சம்பள குறைப்பினால் பாதிக்கப்படுவதில்லை என்று விஸ்டாராவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நிச்சயம் செயல்படுத்துவோம்
விஸ்டாராவின் தலைமை செயல் அதிகாரியான Leslie Thng, ஒரு மின்னஞ்சலில் ஊழியர்களிடம் ஜூலை 1, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரையில் ஊதியக் குறைப்பு இருக்கும். ஊழியர்களுக்கான மாத ஊதியக் குறைப்பை நாங்கள் செயல்படுத்துவோம். இது விமானிகளைத் தவிர அனைவருக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாருக்கு எவ்வளவு சம்பளம் குறைப்பு
சரி யாருக்கு எவ்வளவு சம்பள குறைப்பு? 4 மற்றும் 5வது லெவலில் உள்ள ஊழியர்களுக்கு 15 சதவீதம் சம்பள குறைப்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மற்றும் 2,ம் நிலை மற்றும் 1சி ஊழியர்களுக்கும் 10 சதவீதம் சம்பள குறைப்பு இருக்கும் என்றும் கூறியுள்ளது. இதே முதல் லெவல் ஊழியர்களுக்கு 5 சதவீதம் சம்பள குறைப்பும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மீண்டு வரகொஞ்ச காலம் ஆகும்
மேலும் கொரோனாவினால் எங்களது செயல்திறன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஓரு வேளை லாக்டவுன் முடிந்தாலும் கூட பயணிகளின் பயம் குறைய சிறிது காலம் ஆகும் என்றும் Leslie Thng கூறியுள்ளார். ஆக விமான துறையானது மீண்டு வர சிறிது காலம் ஆகும் என்றும் கூறியுள்ளார்.