கடனில் மூழ்கிக் கிடந்த ஏர் இந்தியா நிறுவனத்தை மொத்தமாக டாடா குழுமம் சுமார் 18000 கோடி ரூபாய்க்கு கைப்பற்றிய நாளில் இருந்து அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது டாடா குழுமம் தனது 3 விமானச் சேவை நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமாக எப்போது மாறும் என்பது தான்.
டாடா குழுமத்திற்கு இந்த இணைப்பு முக்கியமான திட்டமாக இருக்கும் நிலையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

டாடா குழுமம்
டாடா குழுமத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லையன்ஸ் சேவைகள், சொத்துக்கள் என அனைத்தையும் மார்ச் 2024க்குள் முடிக்கப்பட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விஸ்தாரா
விஸ்தாரா என்பது இந்தியாவில் ப்ரீமியம் விமானச் சேவைக்காக டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட கூட்டணி ஏர்லையன்ஸ் நிறுவனம். தற்போது ஏர் இந்தியாவை மொத்தமாகக் கைப்பற்றிய டாடா குழுமம் விஸ்தாராவை ஏர் இந்தியா உடன் இணைக்க முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லையன்ஸ்
இதற்காகச் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் ஏர் இந்தியாவில் 25 சதவீத பங்குகளைப் பெற உள்ளது. இதேபோல் இணைப்பிற்குப் பின்பு 2000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது சிங்கப்பூர் ஏர்லையன்ஸ். இதன் மூலம் டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் உடன் நடத்தி வந்த நீண்ட காலப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

விஸ்தாரா கூட்டணி
தற்போதைய விஸ்தாரா கூட்டணி நிறுவனத்தில் டாடா குழுமம் 51 சதவீத பங்குகளும், சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் 49 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இக்கூட்டணி 2013ல் உருவாக்கப்பட்டது. இந்த இணைப்பு மூலம் அதிக விமானங்கள், அதிக வழித்தடத்தில் சேவை அளிக்கப்பட உள்ளது.

மார்ச் 2024
இதே மார்ச் 2024 காலகட்டத்திற்குள் ஏர் இந்தியா உடன் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய பிராண்டுகளையும் இணைக்க உள்ளது. விஸ்தாரா ஏர் இந்தியா இணைப்பு மூலம் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் ஏர் இந்தியா என்னும் வரலாறு சிறப்பு மிக்க நிறுவனத்தில் 25 சதவீத பங்குகளைப் பெற உள்ளது.

மலேசியாவின் ஏர் ஏசியா
நவம்பர் மாத துவக்கத்தில் தான் மலேசியாவின் ஏர் ஏசியா மற்றும் டாடா குழுமத்தின் கூட்டணியில் இயங்கி வந்த ஏர் ஏசியா இந்தியா-வில் மலேசியாவின் ஏர் ஏசியா வைத்திருந்த 16.33 சதவீத பங்குகளை ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.

ஏர் ஏசியா இந்தியா
ஏர் ஏசியா இந்தியா இந்தியாவின் ஐந்தாவது பெரிய விமானச் சேவை நிறுவனமாக இருந்தது, மொத்த விமானப் போக்குவரத்துச் சந்தையில் ஏர் ஏசியா இந்தியா பங்கு 5.7 சதவிகிதம். ஏர் ஏசியா இந்தியா விற்பனை குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும், நவம்பர் மாதம் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுப் பங்கு விற்பனை முடிந்துள்ளது.

செலவுகள்
டாடா குழுமம் தனது விமானச் சேவை நிறுவனங்கள், வர்த்தகம், கட்டமைப்பு ஆகிய அனைத்தையும் ஏர் இந்தியா கீழ் கொண்டு வரும் மாபெரும் திட்டம் மூலம் டாடா குழுமத்திற்கு நிர்வாகச் செலவுகள் பெரிய அளவில் குறையும்.

விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
டாடா குழுமம் தற்போது ஏர் இந்தியா என்னும் ஒரு நிறுவனத்தின் கீழ் விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய 3 நிறுவனங்களை இணைத்து நாட்டின் 2வது பெரிய விமானச் சேவை நிறுவனமாக உயர்த்த உள்ளது. இதன் மூலம் ஏர் இந்தியா மலிவு விலை விமானச் சேவை முதல் வெளிநாட்டு விமானச் சேவை வரையில் ஏர் இந்தியா பிராண்ட் பெயரில் கொடுக்க முடியும்.

218 விமானங்கள்
இந்த இணைப்பிற்குப் பின்பு விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய பிராண்டுகளின் பெயரை நீக்கப்படும். ஏர் இந்தியாவில் 113 விமானங்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்-ல் 24 விமானங்களும், விஸ்தாராவில் 53 விமானங்களும், ஏர் ஏசியா இந்தியாவில் 28 விமானங்களையும் கொண்டு உள்ளது. இதன் மூலம் மொத்த 218 விமானங்கள் உடன் இந்தியா முழுவதும் உலகின் பெரும்பாலான நாடுகளுக்குச் சேவை அளிக்க உள்ளது.