இந்திய டெலிகாம் சந்தையில் மலிவான இண்டர்நெட் டேட்டா கொடுத்து மொத்த வர்த்தகச் சந்தையையும் வளைத்துப் போட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ உடன் போட்டிப்போட முடியாமல் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இன்றளவும் திணறி வருகிறது.
ஏற்கனவே அதிகளவிலான நிதி நெருக்கடி, நிலுவைத் தொகை பிரச்சனையில் இருக்கும் வோடபோன் ஐடியா நிறுவனம் இந்தியச் சந்தையை எந்தக் காரணத்திற்காகவும் விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் காரணத்தால் புதிய முதலீட்டைத் திரட்டி வருகிறது.
இதேவேளையில் புதிய வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் பெற வேண்டும் என்பதற்காகப் பழைய விலையிலேயே டபுள் டேட்டா ஆஃபர்-ஐ அளித்துள்ளது.

வோடபோன் ஐடியா புதிய திட்டம்
இந்திய டெலிகாம் சந்தையில் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களை விடவும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதால் வோடபோன் ஐடியா நிறுவனம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களை அதிகம் கவரும் வகையில் 3 திட்டங்களுக்கு இரட்டிப்பு அளவிலான டேட்டாவை வழங்க உள்ளது.

3 சிறப்புத் திட்டம்
வீ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 299 ரூபாய், 449 ரூபாய், 699 ரூபாய் திட்டங்களுக்குப் பொதுவாகத் தினமும் 2 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படும், ஆனால் புதிய டபுள் டேட்டா ஆஃபர் திட்டத்தின் படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 3 சிறப்புத் திட்டங்களுக்குத் தினமும் 4 ஜிபி டேட்டா வழங்க உள்ளது வோடபோன் ஐடியா.

தினசரி டேட்டா அளவு
மேலும் 299 ரூபாய், 449 ரூபாய், 699 ரூபாய் ஆகிய 3 திட்டங்களில் இருக்கும் அனைத்து சேவைகளும், கால அளவிலும் எவ்விதமான மாற்றமும இருக்காது. ஆனால் தினசரி டேட்டா அளவு மட்டும் இரட்டிப்பு அளவை வாடிக்கையாளர்கள் பெற உள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ
இதற்கிடையில் ரிலையன்ஸ் ஜியோ இன்றைய இளைய தலைமுறையினரைச் சரியாகப் புரிந்துகொண்டு ஒரு வாரத்தில் பயன்படுத்தப்படாத தரவை வாரத்தின் இறுதி 2 நாட்கள் அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்தும் வகையில் Weekend Data Rollover திட்டத்தைத் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதேபோன்ற திட்டம் ஏர்டெல் திட்டங்களிலும் உள்ளது.

வீக்எண்ட் டேட்டா திட்டம்
இந்நிலையில் Weekend Data Rollover சேவையை தற்போது வோடபோன் ஐடியா-வின் இந்த 3 சிறப்பு டபுள் டேட்டா ஆஃபர் திட்டங்களுக்கு வழங்குகிறது. இதனால் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களும் இந்த Weekend Data Rollover திட்டத்தைப் பெற உள்ளனர்.
இது கண்டிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.